அன்பின் சக சமூகத்தவற்கு,
இவ்விடயங்களை பல தடவைகள் சொல்ல வேண்டுமென நினைத்துள்ளேன். ஆனால் எப்படிச் சொல்வதென்று தெரியாமல் சொல்லவில்லை. நான் ஒரளவு நெருங்கிப் பழகும் சிலரிடம் சொல்லியும் உள்ளேன், ஆனால் அதனால் எதுவும் மாற்றம் வந்ததாகத் தெரியவில்லை. அதனால் எனது எண்ணங்களை/கோபத்தை இங்கு கொட்டித்தீர்க்கலாம் என்ற முடிவால் இந்தக் கடிதம்.
1. மண்ணிறத்தோல்/கருந்தோல் நிறங்கள் எந்த விதத்திலும் கீழானவை அல்ல என்று எப்போது தெளிவீர்கள்? நிற்க, நீங்கள் தெளிகிறீர்களோ இல்லையோ அதைப்பற்றி என் மூன்று வயது மகனிடம் நீங்கள் கதைக்காமல் இருந்தாலே எனக்கு இப்போதைக்குப் போதுமானது. அவனுக்கு உலகில் பல்வேறு மக்களுக்குப் மிகுந்த வெளுத்த தோல் நிறத்திலிருந்து கருத்த தோல்நிறம் வரையில் வெவ்வேறு shades இல் அவர்களின் நிறம் மாறுபடும் எனத் தெரியும். ஏன் அப்பாக்கு, அம்மாக்கு, தனக்கு ஒரே மாதிரி மண்ணிறத்தோல் எனத் தானே கேட்டு விளக்கம் எல்லாம் கேட்டு விட்டான். இந்த மாதிரிக் கேள்விகள் கேட்பதும், கேட்பதை ஊக்குவிப்பதும், கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும் மிக முக்கியமானது. அதை விட்டுட்டு அவன் வேள்ளையா? இவன் வெள்ளையா? ஏன் நிறம் சரியா குறைஞ்சிட்டான்? வெயிலுக்குள் விட்டனியளே, வெயிலுக்குள் நிறைய நேரம் விடாதைங்கோ பாவம் கருத்துடுவான், நிறம் தான் கொஞ்சம் குறைவு மற்றம்படி பரவாயில்லை என்று சொல்வதெல்லாம் விசர்த்தனமான கருத்துகள். இங்கு இப்ப கோடை காலம். அவனுக்கு வயது மூன்று. வெளியில் சுறுசுறுப்பாக விளையாடுவதைத் தூண்ட வேண்டுமே தவிர, தடுக்கக் கூடாது. சூரியனால் melanin கூடியளவு உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் தோல் நிறம் இரண்டு/மூன்று shades dark ஆகிறது. அதனால் ஒன்றும் கெட்டு விடாது. எதோ பெரிசா, நாங்கள் தமிழர் எங்களை வேண்டார் உலகிலில்லை என்று குரல் கொடுக்க தயங்காதவர்கள், எம்மின் இயற்கையான நிறத்தை ஒத்துக்கொள்ளாமல் இழிவாக்குவதேன் என எனக்கு விளங்கியதேயில்லை. ஆனால் தயவு செய்து அந்த எண்ணத்தை என் மகனிடம் புகுத்தாமல் இருந்தீர்களாயின் மிகவும் நன்று. அதே நேரத்தில் குறிப்பாக மேலை நாடுகளில் வளரும்/பள்ளி செல்லும் குழந்தைகள், வெளியில்/பள்ளிகளில் பல்வேறு விதமான குழந்தைகளைப் பார்க்கும் போது தோல் நிறத்தைப் பற்றிக் கேள்வி எழுவது சகஜமே. அதில் எந்தத் தவறும் இல்லை. பிள்ளை வீட்டில் வந்து கேள்வி கேட்டால் தயவு செய்து விளக்கமாகப் பதில் கொடுக்க முயலுங்கள். உங்கள் பதிலால் பிள்ளையில் இனவெறியையோ தனது இயற்கை நிறம் குறைவானதெனும் எண்ணத்தையோ கொஞ்சமும் வளர்க்காதீர்கள்.
2. எத்தனையோ ஆய்வுகளால் பலதடவை அநேகமான gender வித்தியாசங்கள் (as opposed to sex differences) சமூகத்தால் உருவாக்கப்பட்டவை என நிருபிக்கப்பட்டாயிற்று. அதனால் ஒவ்வொரு செயலுக்கும் ஆம்பிளைப்பிள்ளை இப்படித்தான் செய்யவேண்டும், அழக்கூடாது, இது செய்யலாம், இது செய்யக்கூடாது, இன்ன இன்ன விளையாட்டுச் சாமான்கள் தான் விளையாடோணும் என்று என் மகனிற்கு முன்னால் தயவு செய்து கதைக்காமல் இருக்க முடியுமா? Please let him develop into his own person.
மிக்க நன்றி,
அன்னா.
6 comments:
நல்ல பதிவு
இனவெறியை குழந்தைகளிடம் பரப்பாமல் இருந்து இருந்தால் இந்நேரம் காணாமல் போயிருக்கும்.வித்தியாசமாக இருப்பதை உயர்வு தாழ்வு என்று வகைப்படுத்த பல இசங்களில் செய்யும் ஆட்களை,கொள்கைகளை ஒதுக்க வேண்டும்.
சூப்பர் அன்னா, நிறம் குறித்து குழந்தைகள் மனதில் சந்தேகங்கள் எழுவது இயல்புதான். அதனை நாம் எப்படி டீல் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆனால், இதில் நம்மைவிட மற்றவர்களது தலையீடு/கருத்துகள் அதிகமாகவே இருக்கிறது. குழந்தைகளைவிட அவர்களுக்கு புரியவைப்பதே இங்கு சிரமமாக இருக்கிறது. உங்கள் இடுகை அதை சிறப்பாக செய்கிறது. :-)
வெளியிலிருப்பவர்களை சொல்லமுடியுதோ இல்லையோ.. எங்கவீட்டு பெரியவர்களிடம் இதை அடிக்கடி சொல்வது.. என் குழந்தைகளை அப்படி கொஞ்சம் கருத்தாப்பல இருக்கே..அதைப்போடேன் இதைபோடேன்னு சொல்லாதீங்கன்னு..
கருத்துகளுக்கு மிக்க நன்றி சார்வாகன், முல்லை, கயல். எல்லோர் கருத்துகளையும் முற்றிலும் வழிமொழிகிறேன். பலர் குழந்தைகளில் இக்கருத்துகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்று கொஞ்சமும் யோசிப்பதில்லை. சிலர் குழந்தைகள் தானே என்னவும் கதைக்கலாம், அவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று கூட நினைப்பர். பல குழந்தை வளர்ச்சி நிபுணர்கள் குழந்தைகளை sponge க்கு ஒப்பிடுவர். தம்மால் இலகுவாக பெரியவர்களுடன் கருத்துப் பரிமாற்றல் செய்ய முடியாவிட்டாலும், தம்மை சுற்றி உள்ள எல்லாவற்றையும் உறிஞ்சும் தன்மை கொண்டவர்கள்.
சனத்தின் மனதை எப்படி மாற்றுவதென்றே தெரியவில்லை.
மாற்றம் வேண்டும்...
ஆனால் மெதுவாகத் தான் நிகழும். குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கட்டும். அருமை பதிவு.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சக்திபிரபா.
Post a Comment