Wednesday, January 12, 2011

பரிணாமம் என்றால் என்ன?


ப‌ரிணாம‌ம் ந‌ட‌க்கிற‌து என்ப‌து ச‌ந்தேக‌த்திற்கிட‌மில்ல‌ம‌ல் நிரூபிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ ஒரு உண்மை. ஆனால் பலருக்கு அதைப் பற்றி சரியான விளக்கமில்லையாதலால் பிழையான புரிதல்களைக் கொண்டுள்ளனர். சிலர் பிழையான புரிதல்களைத் தமது சொந்தக் கருத்துக்களாக ஒருபோதும் வைக்காமல் அதுவே பொதுவாக அறிவியல் வட்டத்திலும் கருத்தென்பது மாதிரி எழுதுவது ஏற்றுக்கொள்ளமுடியாத‌து. பரிணாமத்தைத் தவறெனத் தர்க்கரீதியாக‌ நிரூபிக்கவாவது பரிணாமத்தைப் பற்றி சரியாக விளங்கினால் நன்றாக இருக்கும்.



படம் இங்கே எடுத்தது.


அதனால் என்னால் முடிந்தளவு தமிழில் பரிணாமத்தையும் அதற்குரிய ஆதாரங்களையும் பற்றி விளக்குவதே இத்தொடரின் குறிக்கோள்.

பரிணாமம் என்றால் என்ன?

உயிரினக் கூட்டங்களில் ஏற்படும் படிப்படியான, மரபு வழியாக அடுத்த பரம்பரைக்குக் கடத்தப்படக்கூடிய‌ மாற்றங்கள். குறிப்பாக ஒரு உயிரினக்கூட்டத்தில் காலப் போக்கில் மரபணுக்களின் வெவ்வேறு பதிப்புகளின் (different alleles of genes) விகிதங்கள் மாறுபட்டுக்கொண்டு போகுமாயின், அது பரிணாமம். தனி உயிரிகளில் ஏற்படும் மாற்றங்கள் பரிணாமமல்ல. தனி உயிரிகள் பரிணாமமடைவதில்லை. உயிரினக் கூட்டங்களே பரிணாமமடையும்.

நுண்ப‌ரிணாமம் (microevolution), அது எவ்வளவு பெரிய மாற்றமாக இருந்தாலும், ஒரு உயிரின‌க் கூட்ட‌த்துள் (within a particular species) நடக்கும் மரபியல் மாற்ற‌ங்க‌ள். பெரும்ப‌ரிணாம‌ம் (macroevolution), அது எவ்வளவு சிறிய மாற்றமாக இருப்பினும், உயிரின‌க்கூட்ட மட்டத்திலும் அதற்க‌ப்பாலும் (at and above the level of species) ந‌ட‌க்கும் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ளைக் குறிக்கும். அதாவது, எவ்வளவு சிறிய மாற்றமாயினும் அது ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்தை (species) உருவாக்குமாயின் அது macroevolution.

இரு உயிரிகள் இணைந்து அவ்வினத்தைப் பெருக்கக் கூடிய வல்லமையுடைய அடுத்த பரம்பரையை உருவாக்க முடியுமாயின் அவை ஒரு இனத்தைச் சேர்ந்தவை, முடியாவிடின் அவை வேவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை.

மேலும் உதாரணங்களுடன் கூடிய விளக்கத்தைற்கு பின்வரும் இரு சுருக்கமான காணொளிகளைப் பாருங்கள்.









ஒரு மூதாதை உயிரியிலிருந்தே உலகில் மற்றைய எல்லா உயிரிங்களும் படிப்படியாகப் பரிணாமமடைந்தன எனவே பரிணாமத்திற்கான ஆதாரங்கள் எல்லாம் கூறுகின்றன.
உயிரிக‌ள் எவ்வாறு ப‌டிப்படியாக‌க் கால‌ப்போக்கில் மாறுகின்ற‌ன‌ என்ப‌தே ப‌ரிணாம‌மெயொழிய, பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியதென்பத‌ற்கும் (abiogenesis) ப‌ரிணாம‌த்திற்கும் எந்த‌வித‌ தொட‌ர்புமில்லை.

மேலும் பரிணாமத்திற்குரிய ஆதாரங்களையும் பரிணாமத்தைப் பற்றிய பிழையான புரிதல்களையும் விளக்கமாக‌ அலசுவதற்கு முன் தருமி ஜயாவின் வலைப்பதிவில் கார்பன் கூட்டாளி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க விரும்புகின்றேன்.

நான்
அப் பதிவில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தேன்.

"பரிணாமக் கொள்கைக்கு எத்தனையோ மில்லியன் சாட்சிகள் உண்டு. எதிராக எந்த உண்மையான சாட்சிகளும் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. கடவுளே இருந்தாலும் நாங்கள் பரிணாமத்தின் வழியாவே வந்திருப்போம் எனக் கூறுமளவிற்கு சாட்சிகள் உண்டு."

அத‌ற்கு கார்ப‌ன் கூட்டாளி,
"ஒரே ஒன்று, வேறு எதுவும் வேண்டாம், ஒரே ஒரு நிருபிக்கப் பட்ட சாட்சி தர முடியுமா?" என்று கேட்டிருந்தார்.

A/Prof. PZ Myers சொன்னது போல் பரிணாமத்திற்கு எந்தவித சான்றுகளும் இல்லையென்பது, ஒரு புயல் மழையின் போது வெளியில் நின்று உடல் முழுவதும் நனைந்த பின்னும் தான் நனைந்ததிற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பது போலாகும்.

ப‌ரிணாமம் நிரூபிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தென்று ஆய்வுக‌ள் எல்லாம் முடிவுக்கு வ‌ந்துவிட‌வில்லை. எத்த‌னையோ ஆயிர‌ம் ஆராய்ச்சிக‌ள் ந‌ட‌ந்துகொண்டுதான் இருக்கின்ற‌ன‌. எத‌னையோ ல‌ட்ச‌ ஆய்வுக‌ள் ஏற்க‌ன‌வே பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ன. இவை எல்லாமே பரிணாமத்திற்கு ஆதாரங்களே. Sequence செய்யப்படும் ஒவ்வொரு புதிய உயிரியின் genome உம் பரிணாமத்திற்கு சாட்சி. பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் அறிய
pubmed எனும் தளத்திற்குச் சென்று பார்க்கலாம். Pubmed, life sciences and biomedical sciences இல் பிரசுரிக்கப்படும் ஆய்வுகளை தொகுத்து வழங்கும் ஒரு இலவச தகவல்த்தளம். அநேகமாக எந்தவொரு biomedical துறையிலும் நடக்கும் நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளைப் பற்றி அறிய முதலில் எவரும் செல்லுமிடம் இதுவாகும். அதையும் விட‌ எத்த‌னையோ ப‌ரிணாம‌த்தில் நேர‌டியாக‌ப் ப‌ரிசோத‌னை செய்ப‌வ‌ர்க‌ள் ப‌திவுக‌ள் எழுதுகின்ற‌ன‌ர். PZ Myers எழுதிய‌ இப்ப‌திவில் எத்த‌னையோ ப‌ரிணாம‌த்தைப் ப‌ற்றி விள‌க்கும் த‌ள‌ங்களின் முக‌வ‌ரிக‌ள் உள்ள‌ன‌.

பல புதிய புதிய ஆய்வுகளைப் பற்றி அறிய இங்கு செல்லலாம்:
This week in Evolution


பரிணாமத்திற்கான ஆதாரங்களை தொகுத்து அலசும்/பட்டியலிட்டிருக்கும் வேறு சில தளங்கள்:
Talk origins
phylointelligence

ஒவ்வொரு வ‌கை ஆதார‌ங்க‌ளையும் விரிவாக‌ப் பின் பார்ப்போமாயினும் கார்ப‌ன் கூட்டாளி கேட்ட‌த‌ற்காக ப‌ரிணாம‌த்திற்கான‌ மிக‌ வ‌லிமையான‌ ஆதாரங்களாக‌ மூல‌க்கூற்று உயிரியலில் (molecular biology) இருந்து ப‌ல‌ உதார‌ண‌ங்க‌ளைச் சொல்ல‌லாம், அதிலிருந்து ஒரு உதாரணம் இங்கே மற்றையவை அடுத்தடுத்த பதிவுகளில் தருகின்றேன்.

எமது DNA கட்டமைப்பிலுள்ள endogenous retrovirus sequences - வைரஸ் என்பது ஓரு புரதக் கூட்டிற்குள் இருக்கும் nucleic acid மட்டுமே. இந்த nucleic acid ஒரு DNA ஆகவோ RNA ஆகவோ இருக்கலாம். RNA ஜக் கொண்ட virus, retro virus எனப்படும். ஒரு வைரஸ் பெருக, அதற்கு இன்னொரு உயிரியின் உடல் தேவை. ஏனெனில் வைரஸில் தன்னைத் தானே இரட்டிப்பாக்கும் சக்தி இல்லை. ஒரு ரெட்ரோவைரஸ் இன்னொரு உயிரியின் உடலில் தொற்றியதும் தனது RNA ஜ‌ DNA ஆக மாற்றி, அதை தொற்றிய உயிரியின் உயிரணுக்களிலுள்ள (cells) DNA கட்டமைப்பில் (genome) புகுத்தும். தொற்றிய உயிரியின் உயிரணுக்களிலுள்ள DNA பிரதியெடுக்கும் போது, வைரஸ் DNA உம் பிரதியெடுக்கப்படும். இவ்வாறே தம் எண்ணிக்கையைப் பெருக்கும். Infection போன பின்னும் இந்த virus DNA அந்த உயிரியின் கட்டமைப்பிலேயே செயலிழந்திருக்கும் (called and endogenous retrovirus or ERV). இந்த ரெட்ரோவைரஸ் DNA எமது உடல் உயிரணுக்களைத் தொற்றித் தனது DNA ஜ எமது உடல் உயிரணுக்கலின் DNA கட்டமைப்பில் புகுத்தினால், எமது genome இல் ஏற்பட்ட‌ அந்த மாற்றம் எம்முடன் முடிந்துவிடும். ஆனால் அது எமது முட்டையின் அல்லது விந்தின் genome இல் புகுத்தினால் அது அந்த மாற்றம் நிரந்தரமாகிவிடும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படும்.

எமது DNA கட்டமைப்பில் கிட்டத்தட்ட 8% இந்த ERV ஆல் வந்தவை. நாம் பொதுவழித்தோன்றலால் தான் வந்திருக்கின்றோமானால், என்ன எதிர்பார்க்கலாம்? பரிணாமத்தில் ஒரு மூதாதை உயிரினத்திற்கு இவ்வாறு ரெட்ரோவைரஸ் தொற்றப்பட்டிருப்பின் அவையின் DNA கட்டமைப்பில் எந்த இடத்தில் இந்த ERV புகுத்தப்பட்டிருந்ததோ அதே இடத்தில் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த‌ மற்றைய உயிரினங்களின் DNA கட்டமைப்பிலும் காணப்பட வேண்டுமென எதிர்பார்க்கலாமா?

GUESS WHAT? மனிதர்களினதும் மனிதக்குரங்குகளினது DNA கட்டமைப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 14 ERVs ஒரே இடத்தில் உள்ளன. மனிதனின் DNA கட்டமைப்பு 3 பில்லியன் base pairs நீளமானது. ERVs 500 base pairs மட்டுமே. எப்படி அவ்வளவு நீளமான DNA கட்டமைப்பில் இவ்வளவு சிறிய ERVs மிகச் சரியாக அதே இடத்தில் இருப்பது சாத்தியம்? மனிதர்களும் மனிதக்குரங்குகளும் (chimpanzees) கிட்டத்தட்ட 5-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரே இன மூதாதையரின் வழித்தோன்றல்கள் எனப் பரிணாமம் கூறுகின்றது. இம்மூதாதையரைத்தொற்றிய வைரஸ்கள் அவர்களின் DNA கட்டமைப்பில் புகுத்திய ERVs உம் அதற்கு முதலே அவர்களின் (அவர்களின் மூதாதையர் மூலம்) கட்டமைப்பில் இருந்த‌ ERVs ம்மே இவை. இவற்றிற்கு வேறு பொருத்தமான விளக்கம் இல்லை. அது மட்டுமல்ல வேறு பரிணாமப் பாதையைக் கொண்ட உயிரிகளில் இதே எண்ணிக்கையான ERVs இதே இடங்களில் அவைகளின் genome இல் இருக்காது. பரிணாமத்தால் மட்டுமே இவற்றை விளக்க முடியும்.

It is in our digital code. 8% of our DNA blueprint is from retroviruses. Both human and chimpanzee genomes have been sequenced. அதனால் பரிணாம ஆய்வாளர்களின் முடிவுகளை உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லையாயின், நீங்களே பகுத்தாயலாம். மனிதர்களினதும் மனிதக்குரங்கினதும் DNA கட்டமைப்பை ஆராய முதற்படியாக genome browser க்குச் செல்லலாம்.


ERVs ஜப் பற்றிக் கூட இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன, செய்துகொண்டும் உள்ளனர். Pubmed இல் endogenous retroviral AND evolution எனத்தேடினீர்களாயின் நிறையத் தகவல்கள் கிடைக்கும்.

தொடரும்........

பிற்குறிப்பு ‍ நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்றுவருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடையதாகவிருக்கும். நன்றி.





26 comments:

Thekkikattan|தெகா said...

எனக்கு பரிணாமம் பொருத்து எந்த சந்தேகமுமில்லை. கிட்டத்தட்ட நன்கு வளர்ச்சியுற்ற அனைத்து விலங்கினங்களுக்கும் எனக்குள் உள்ளும், புறமாக இருக்கக் கூடிய அனைத்து உருப்புகளையும் வைத்தே பிழைப்பை ஓட்டுவதைக் கொண்டு இதில் என்ன சந்தேகத்திற்கு வேலை இருக்கிறது என்று லாஜிக்கலாவே புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு எருமை மாடும் கண் சிமிட்டுது, நானும் கண் சிமிட்டுறேன் ஒரு சிறு பூச்சியோ, ஈயோ அருகே பறந்து வந்திட்டா... :))

Thekkikattan|தெகா said...

இதுவே என்னுடைய முதல் பின்னூக்கியாக இருந்திருக்க வேண்டும்.
**********

முதலில் உங்க டெம்ப்ளேட் பொருத்து -நல்லா அழகான அட்டைபலகை :)

இதுதான் உங்களோட முதல் அறிவியல் தமிழ் கட்டுரை என்றாலும் நல்லாவே கோர்த்து கொடுத்திருக்கீங்க. நிறைய புதிய தகவல்கள் எனக்கே கிடைக்கப் பெற்றேன்.

நிறைய இணைப்புச் சுட்டிகளும் பயனுடையதாக இருக்கிறது. ERVs பற்றியும் அவைகள் எப்படி டி.என்.ஏ அத்தனை பில்லியன் அடிப்படை கட்டமை விலும் மிகச் சரியாக நமக்கும், சிம்பன்சிகளுக்கும் ஒரே இடத்தில் விழுந்திருப்பது மிக்க ஆச்சர்யமூட்டக் கூடியதும், பரிணாம கிளையமைவிற்கு மிக்க ஆதராப் பூர்வமானதும் என்று அழுத்தமா எடுத்து முன் வைத்திருக்கிறீர்கள். நன்று!

தொடர்ந்து தமிழிலில் எழுதுங்க. எழுத, எழுத நடை எங்கோ போயிடும். வாழ்த்துக்கள், அன்னா! This post is very informative!!

Anna said...

மிக்க நன்றி தெகா! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...
This comment has been removed by the author.
கையேடு said...

இதுதான் உங்க முதல் தமிழ்க் கட்டுரை அறிவியலில்னு, நம்ப முடியாத அளவிற்கு நல்லா எழுதிருக்கீங்க.

பல தகவல்களும் தரவுகளும் உள்ளடங்கியிருக்கு.
தொடருங்கள்.

http://tamilvu.org/coresite/html/cwhomepg.htm இந்தச் சுட்டியில் உள்ள கலைச்சொற்கள் பகுதியில் பல வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச்சொல் கிடைக்கும். உடனடித் தரவுகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு சிறு கருத்து..
//மேலும் உதாரணங்களுடன் கூடிய விளக்கத்தைற்கு பின்வரும் இரு சுருக்கமான காணொளிகளைப் பாருங்கள்.//

இது போன்ற இடங்களில் உங்கள் வார்த்தைகளிலும், ஏதாவது ஒரு உதாரணத்தை எழுதுங்கள்.(காணொளியும் இருக்கட்டும், நமது இணைய வாசகர்களுக்கு)

ஏனெனில், உங்களைப் போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் இடுகையைத்தான், மாணவர்களுக்குப் பரிந்துரைக்க முடியும். பள்ளி மாணவருக்கோ கல்லூரி மாணவருக்கோ இணையமும், கணினியும் இல்லாத இடங்களில் நகல் எடுத்துக் கொடுத்தால் அவர்களுக்கும் வாசிக்க வசதியாக இருக்கும். இது சிறுது அதிகப்படியான உழைப்புதான், ஆனால் பலன் கிடைக்குமென்றால் செய்து பார்க்கலாம்தானே.. :)

அடுத்தடுத்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். கால அவகாசமும் விருப்பமும் இருந்தால் மரபணு பற்றியும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதுங்களேன்.

Anna said...
This comment has been removed by the author.
Anna said...

"இந்தச் சுட்டியில் உள்ள கலைச்சொற்கள் பகுதியில் பல வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச்சொல் கிடைக்கும். உடனடித் தரவுகளுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்."

இந்தச் சுட்டியில் மழழைக் கல்விப் பகுதிக்குத் தான் இதுவரைக்கும் அடிக்கடி போயிருக்கின்றேன். மகனுக்குக்காக. ஆனால் இந்தச்சேவையும் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். எனக்கு நிச்சயம் பயன்படும். நன்றி.

"ஒரு சிறு கருத்து..
//மேலும் உதாரணங்களுடன் கூடிய விளக்கத்தைற்கு பின்வரும் இரு சுருக்கமான காணொளிகளைப் பாருங்கள்.//

இது போன்ற இடங்களில் உங்கள் வார்த்தைகளிலும், ஏதாவது ஒரு உதாரணத்தை எழுதுங்கள்.(காணொளியும் இருக்கட்டும், நமது இணைய வாசகர்களுக்கு)"


நிச்சயம் முயற்சிக்கின்றேன்.

"ஏனெனில், உங்களைப் போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் இடுகையைத்தான், மாணவர்களுக்குப் பரிந்துரைக்க முடியும். பள்ளி மாணவருக்கோ கல்லூரி மாணவருக்கோ இணையமும், கணினியும் இல்லாத இடங்களில் நகல் எடுத்துக் கொடுத்தால் அவர்களுக்கும் வாசிக்க வசதியாக இருக்கும். இது சிறுது அதிகப்படியான உழைப்புதான், ஆனால் பலன் கிடைக்குமென்றால் செய்து பார்க்கலாம்தானே.. :)"

நான் ஒரு reproductive/molecular biologist with a huge interest in evolution. இந்தக் குறிப்பிட்ட துறையில் வல்லுனரில்லை. இயலுமானளவு வல்லுனர்கள் செய்வதை/சொல்வதை விளக்க முயற்சி செய்கின்றேன்.

"கால அவகாசமும் விருப்பமும் இருந்தால் மரபணு பற்றியும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதுங்களேன்."

கால அவகாசம் தான் பெரும் பிரச்சனை. :) மரபணு மாற்றங்களைப் பற்றி எழுதமுன் மரபணு மாற்றங்களைப் பற்றி எழுதமுன் மரபணுக்க‌ளின் அடிப்படைகளை எழுதலாமென இருக்கின்றேன்.

உங்கள் கருத்துகள் எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி கையேடு.

கையேடு said...

//நான் ஒரு reproductive/molecular biologist with a huge interest in evolution. இந்தக் குறிப்பிட்ட துறையில் வல்லுனரில்லை.//


பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் உயிரியல் துறை சாராதோர் பார்வையில் நீங்கள் உயிரியல் வல்லுனர்தான். உயிரியலின் ஆடிப்படைகளையும் நவீன கால முன்னேற்றங்களையும் ஒருங்கே இணைத்து உங்களைப் போன்றோர்தானே விளக்க முடியும்.

அதனால வல்லுனர் இல்லைன்னு சொன்னா ஒத்துக மாட்டோம். :)

Unknown said...

//Sequence செய்யப்படும் ஒவ்வொரு புதிய உயிரியின் genome உம் பரிணாமத்திற்கு சாட்சி//

உயிரினங்கள் என்றால் அவைகளுக்கு DNA இருக்கத்தான் செய்யும் அதை sequencing செய்வது ஒருபோதும் ஆதாரம் ஆகாது.

இரு உயிரினங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை என்றுமே அந்த உயிரினத்திளிருந்துதான் இது வந்தது என்பதற்கு ஆதாரம் ஆகாது. ஒற்றுமையை அறிய sequence செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை அவற்றை பார்த்தாலே போதும், அவற்றிகிடையே இருக்கும் ஒற்றுமையை அறியலாம்.

ஒன்றிலிருந்து மற்றொன்று வர வாய்ப்பு இருக்கின்றதா என்பதை நிரூபித்தால் மட்டுமே அதை ஏற்று கொள்ள முடியும். அது யாராலும் எங்குமே நிரூபிக்க படவில்லை, பரிணாமத்திற்கு ஆதாரமாக காண்பிக்க படும் இயற்கையின் தேர்வு என்பது ஒரு கண்மூடி தனமானது. அதற்கான ஆதரமாவது இருக்கிறதா என்று பாருங்கள்.

நாம் எதிர்பார்ப்பது ஒன்றிலிருந்து மற்றொன்று வருவதற்கு அறிவியலில் எங்காவது வாய்ப்பு இருக்கிறதா?

தருமி said...

//பதிவு கொஞ்சம் நினைத்ததை விட நீளமாகி விட்டது. //
நீளம் ஒரு பொருட்டல்ல; நீங்கள் எழுதுவதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம். நீளத்திற்காக விளக்கங்களைக் குறைக்க வேண்டாம்.

//அதனால வல்லுனர் இல்லைன்னு சொன்னா ஒத்துக மாட்டோம். :)//
i second it ...!

//மரபணு பற்றியும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதுங்களேன்."//

நிறைய ஐயங்கள் உண்டு. சீக்கிரம் வாருங்கள் ..

சந்தனமுல்லை said...

அன்பு அன்னா,

பரிணாமத்தைப் பற்றி நன்கு ஒரு துவக்கம். ஒரு தளத்தில் இறக்கைகளுடன் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட‌‌ மீன்கள் பரிணாம வளர்ச்சிக்கு சான்று என்று பார்த்தேன். அப்போதுதான் இதனைப்பற்றி இன்னும் அறிந்துக்கொள்ள விரும்பினேன். பள்ளியோடு உயிரியல் பற்றிய அறிவுகள் முடிவுக்கு வந்துவிடும் என் போன்றவர்களுக்கு தங்களது தொடர் ‍ ஒரு நல்ல செய்தி. தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன். :-‍)

ஜோதிஜி said...

தருமி சொன்னது சரிதான். இது போன்ற கட்டுரைகளுக்கு நீளம் அகலம் பார்க்காதீங்க. இது போன்ற கட்டுரைகள் நீங்க நிறைய எழுத வேண்டும். மரபியல் ஒரு பாடமாகவே கல்லூரியில் படித்ததுஇப்போது நினைவுக்கு வந்து போகின்றது.

Anna said...

உங்கள் கருத்துகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தருமி ஜயா, சந்தனமுல்லை, ஜோதிஜி.

Anna said...

கார்பன் கூட்டாளிக்கு,

"உயிரினங்கள் என்றால் அவைகளுக்கு DNA இருக்கத்தான் செய்யும் அதை sequencing செய்வது ஒருபோதும் ஆதாரம் ஆகாது."

Sequence செய்வது ஆதாரமாகாது. ஆனால் அந்த sequence சொல்லும் விடயங்கள் ஆதாரமாகும். In other words, ஒவ்வொரு உயிரியின் sequence உம் பரிணாமத்தைச் சோதித்துக் கொண்டுதான் உள்ளது. பரிணாமத்தால் முதலே கணிக்கப்பட்ட பல முடிவுகள், இறுதியாக உயிரிகளை sequence செய்து அதை ஆய்வுக்குள்ளாக்கும் போது உறுதிசெய்யப்படுகிறது. இதுவரைக்கும் பரிணாமத்தின் முன் கணிப்புகளை எந்தவொரு உயிரியின் DNA கட்டமைப்பும் உறுதி செய்யாமல் விட்டதில்லை.

உதாரணத்திற்கு, நான் ஏற்கனவே பதிவில் சொன்னபடி, மனிதக் குரங்குகளும் நாமும் ஒரே மூதாதையினத்தின் வழித்தோன்றல்களெனப் பரிணாமத்தால் பல காரனங்களுக்காக எப்பவோ கணிக்கப்பட்டுவிட்டது. மனிதக் குரங்குகளில் 24 சோடி நிறவுருக்கள் (chromosomes) உண்டு (மனிதக்குரங்களில் மட்டுமல்ல மற்றைய great apes இலும்). எம்மில் 23 சோடி. இரு இனமும் ஒரே மூதாதையரிலிருந்து தான் வந்ததாயின் எமது ஒரு சோடி நிறவுருவிற்கு என்னவாயிற்று? ஒரு முழு நிறவுருவும் இழக்கப்பட்டால் அது அநேகமாக அழிவில் தான் முடிந்திருக்கும். அதனால் ஒரே வழி மனிதக்குரங்கிலுள்ள இரு நிறவுருக்கள் எம்மில் ஒன்றாகி இணைந்திருக்க வேண்டும் (chromosome fusion)மனிதக்குரங்கினதும் எமதும் DNA கட்டமைப்பில் இதற்கு விடை இல்லாவிடில் பரிணாமத்தை சுலபமாகக் கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் இரு இனத்தின் DNA கட்டமைப்பிலுள்ள sequences ஜ பரிசோதித போது கண்டறிந்தது, எமது இரண்டாவது நிறவுரு மனிதக்குரங்குகளிலுள்ள‌ இரு நிறவுருக்கள் இணைந்ததால் உருவானது. மிகச்சரியாக அந்த இணைப்பு நிறவுருவில் எந்த இடத்தில் நடந்ததெனவும் இப்போது தெரியும். இதைப் பற்றிய கூடிய விளக்கத்தை மற்றைய பதிவுகளில் தருகின்றேன்.

அதோடு உயிரிகளுக்கிடையிலுள்ள ஒற்றுமையை மட்டுமல்ல வேற்றுமைகளையும் மிகச் சரியாகப் பரிணாமத்தால் மட்டுமே விளக்க முடியும். இதையும் நான் பின்வரும் பதிவுகளில் விளக்குகின்றேன்.


"ஒன்றிலிருந்து மற்றொன்று வர வாய்ப்பு இருக்கின்றதா என்பதை நிரூபித்தால் மட்டுமே அதை ஏற்று கொள்ள முடியும்.அது யாராலும் எங்குமே நிரூபிக்க படவில்லை."

நான் பதிவில் கொடுத்த காணொளிகளைப் பார்த்தீர்களா? அதிலேயே சில உதாரணங்கள் சொல்லப்பட்டதே. நான் கொடுத்த சுட்டிகளிலும் உண்டு.


"பரிணாமத்திற்கு ஆதாரமாக காண்பிக்க படும் இயற்கையின் தேர்வு என்பது ஒரு கண்மூடி தனமானது."

இய‌ற்கைத் தேர்வு (natural selection) ப‌ரிணாம‌த்திற்கு ஆதார‌ம‌ல்ல‌. ப‌ரிணாம‌ம் எப்ப‌டி ந‌ட‌க்கிறது என‌ விள‌க்கும் கோட்பாடுக‌ளில் அதுவும் ஒன்று. It is one proposed way of how evolution happens. இயற்கைத் தேர்வால் பரிணாமம் நடக்கிறதென்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன. கண்மூடித்தனமானதென எப்படிச் சொல்கிறீர்கள்?

உமர் | Umar said...

சிறப்பான கட்டுரை, சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் The Analyst .

பொதுவாக பரிணாமவியலை எதிர்ப்பவர்கள், உயிரினங்களின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமே பரிணாமவியல் கருத்தை ஆதரிக்கின்றது; உள்ளுறுப்புகள் அவ்வாறு இல்லை என்று கூறுவார்கள்.

அவற்றை மறுக்கும் விதமாக அமைந்திருக்கும் உங்களுடைய கட்டுரை உயிரினங்களின் DNA பற்றி பல தகவல்களை அளிப்பதன் மூலம், உண்மையான கற்கும் ஆர்வம் உடையோருக்கு பயனளிக்கும்.

நீங்கள் அளித்திருக்கும் பல சுட்டிகள் மிகவும் பயனுள்ளவை. நன்றி.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு கட்டுரை, பரிணாமம் கண்ணுக்கு முன்னால் நடைபெறுவதை விளக்கியது.

.

Anna said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கும்மி. That is one neat example of evolution. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

NO said...

நல்ல பதிவு திருமதி அனலிஸ்ட் அவர்களே,

பரிணாமத்தை புரிந்து கொள்ளாதவர்கள் மூன்று வகை!!

முதல் வகை, அது கடவுளின் ஆளுமையை மற்றும் இருப்பை ஒரு விதத்தில் தேவை இல்லாதது போல ஆக்கிவிடுவதால், தன்னின் கடவுள் மற்றும் மத நம்பிக்கையின் மீது உள்ள ஆழ்ந்த பற்றால் பரிணாமத்தை நிராகரிப்பவகள். தங்களின் மத புத்தகங்களின் உள்ள முக்கிய கருத்துக்களை - அதாவது மனித தோற்றம் மற்றும் மனிதத்தன்மையின் மூலக்காரனகளை - பரிணாமம் சுக்குநூராக்குவதை தாங்கிக்கொள்ளாதவர்கள் இவர்கள். The explanatory power of evolution by natural selection about the structure of life and that of Human's place in this web of life disposes almost all explanations that the prophets and philosophies of almost all the religions seem to have propounded for thousands of years. When this is taken as a stab in the core of a society's historical beliefs that are believed to be a part of the tradition, history and a meaning giver for those societies it becomes just too much for them to bear. Negation of myth, which is the core of science and of course core of the theory of natural selection is a real enemy of tradition or so feel the religious one. In this case, since it goes right deep into the question of Human's place among the living things, the religious one's are not able to see it as a science (whose results have been happily enjoyed by every religious one - for example, imagine a religious leader waiting for god's vehicle to fly him out instead of an Aeroplane) and hence are very much eager to de-couple it from science. Not stopping at that, at every given opportunity they try to impart maximum notoriety to the explanation of natural selection by repeating a well stated lie that evolution is only a theory and such explanations about life will lead the corrupt civilizations and much more!!

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்களின் உள்மனதில் உள்ள ஆழமான கடவுள் மற்றும் மத பிடிப்புகள் பரிணாமத்தை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்று உந்துவதால், அதை கடுகளவும் அங்கீகரிக்க மறுப்பவர்கள். ஞாயமாக பேசாதவர்கள். மனதை மூடிக்கொண்டவர்கள். என்ன சொன்னாலும்
கேட்ட்காதவர்கள். இவர்களிடம் பேசி பயனில்லை. தப்பித்தவறி நீங்கள் அவர்களுடன் வாதாடினால், தங்களின் கடவுள் பக்தி வீரியத்தையும் தங்கள் மதத்தின் "உண்மை" நிலையையும் அடித்து சொல்லுவதற்கு ஒரு தளமாக அதை உபயோகிப்பவர்களே இவர்கள்! இவர்களுடம் வாதாடி இவர்களை அங்கீகரிக்க தேவையே இல்லை!

இரண்டாவது வகையும் கடவுள் நம்பிக்கை உடையவர்களே. ஆனால் இவர்களிடம் அந்த தீவிர மத வெறி இருக்காது. தங்கள் மதம் வேறு வகையாக இதை சொல்லுகிறது, அதாவது பரிணாமத்தை, எண்டெல்லாம் நம்புபவர்கள் இவர்கள். பரிணாமம் பற்றி படிக்கலாம் அதில் தவறில்லை, ஆனால் அது உண்மையாக இல்லாமலும் போகலாம் என்றெல்லாம் நினைப்பவர்கள். இந்துக்கள் சிலர் பரிணாமத்தைதான் தசாவதாரக்கதை சொல்லுகிறது என்று நினைப்பது போல ஒரு மத்திய நிலையில் இருப்பவர்கள். இவர்களுடன் ஓரளவுக்கு பேசலாம். கருத்தை சொல்லலாம். புரிந்தாலும் புரிந்து கொள்ளுவார்கள். இவர்களில் பலர் கடவுள் நம்பிக்கையும் பரிணாமம் சொல்லுவது என்பதையும் குழபிக்கொள்ள மாட்டார்கள்.

NO said...

மூன்றாவது வகை பரிணாமத்தை பற்றி அரைகுறையாக படித்து, சரிவர புரிதல் இல்லாமல், அது எப்படி சாத்தியம் என்று ஒரு நிலைக்கு வந்தவர்கள். அதாவது அவர்களால் அதை visualize மற்றும் கிரகிக்க முடியாத நிலைமையில் உள்ளவர்கள். ஒரு மிருகம் இன்னொரு மிருகமாக எப்படி மாறும், வாய்ப்பே இல்லையே, ஏனென்றால் நம்மால் அதை பார்க்க முடியவில்லையே என்று மேலோட்டமாக சிந்தித்து, பரிணாமம் என்பது எப்படி செயல்படுகிறது என்பதை உள்வாங்காமல், அதே சமயம் மதத்தின் பெயராலோ அல்லது கடவுளின் பெயராலோ அதை மறுக்காதவர்கள். Inshort these people are not just smart enough, atleast in understanding what this is all about and how evolution operates at all levels. When I say they are not smart enough, it doesnt mean that they are not intelligent. It just means that their intelectual power have not been applied enough to understand it as they might not have seen the need to do so. இவர்களுக்கு பரிணாமத்தை பற்றி பொறுமையாக சொல்லுவது பயன் தரும். புரிந்தாலும் புரிந்து கொள்ளவார்கள்.

மேலே சொன்ன மூன்று வைகை மனிதர்களை தாண்டி பரிணாமத்தை முழுவதும் புரிந்து கொண்டு ஆனால் அது சில இடங்களில் இல்லை என்று மறுத்து பேசும் பலரும் இருக்கிறார்கள். இவர்கள், politically right எனும் இடத்தில் இருப்பவர்கள். விஞ்ஞானியான உங்களுக்கு தெரிந்திருக்கும், E O Wilson தன்னுடைய socio biology புத்தகத்தை எழுபதுகளில் வெளியிட்டவுடன் அவருக்கு வந்த எதிர்ப்பு எப்படி பட்டதென்று! இந்த வித மனிதர்கள், அதாவது பரிணாமும் மற்றும் அதன் உண்மை மற்றும் அதன் ஆக்கத்தை நன்றாக புரிந்து தெளிந்து ஆனாலும் அதன் முக்கிய செயல்பாடான shaping of Human nature இல் அதன் ஆக்கம் இல்லை என்று தவறாக நம்புபவர்கள்!

Theodosis Dobzhansky - Nothing in biology makes sense when not seen in the light of evolution!!

What I am adding is that - Human Nature that exhibits itself thro brain which inturn is a product of proteins and enzymes, which in turn is the product of the genes that you hold is all again nothing but a part and parcel of biology. Hence human nature if not seen in the light of evolution will also not make any sense.

நீங்களும் திரு தருமி அவர்களும் இதற்க்கு என்ன கம்மென்ட் கொடுப்பீர்கள் என்று எண்ணத்துடன் முடிக்கிறேன்.

நன்றி

வினவு said...

அன்னா,
சில நண்பர்கள் சொன்னது போல இது நீளமான இடுகை என்றெல்லாம் அறிவுப்பசியுள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள். அருமையான துவக்கம், தொடர்ந்து எழுதுங்கள்
அறிவியலை முதன்மையாக வைத்து எழுதப்படும் இக்கட்டுரையில் கொஞ்சம் சமூக ரீதியான கருத்துக்களை சேர்த்து எழுதலாம் என்று தோன்றுகிறது. எனினும் அது குறையல்ல நன்றி

Anna said...

கலையரசி சொன்னது:

தங்களது அறிவியல் கட்டுரை எளிமையாகவும், அனைவரும் விளங்கிக் கொள்ளும்படியாகவும், விளக்கமாகவும் உள்ளது. நீளத்தைக் குறைத்தீர்கள் என்றால் விளக்கமும் குறைந்து விடலாம். இவ்வாறான அறிவியல் கட்டுரைகள் நீளமாக இருப்பதால் கூடிய பலன்தான். எனவே நீளத்தைக் குறைக்க நினைக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.

நல்ல தகவல்களுடன் இருந்த உங்களது இந்தக் கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் படிவளர்ச்சிக் கொள்கை என்ற தகவல் பக்கத்தின், 'இவற்றையும் பார்க்க' என்ற பகுதியில் இணைப்புக் கொடுத்துள்ளேன். பாருங்கள்.

நான் நினைப்பதுண்டு, உண்மையில் விடயங்களை அறியும் ஆர்வத்திற்காக அல்லாமல், தான் நினைப்பதையே மீண்டும் மீண்டும் "நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு :) விளக்கம் அளிப்பதில் பலனில்லை என்று. ஆனால், உங்கள் கட்டுரையில் அப்படி கேள்வி கேட்பவரிடம் மிகவும் விளக்கமாக நீங்கள் கூறும்போது, அவர்கள் அதை புரிந்து ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ, அறியும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கின்றது. எனவே விவாதத்திற்காக (அல்லது விதண்டாவாதத்திற்காக) கேள்வி கேட்பவர்களாலும் நன்மையே விளைகின்றது :).

கல்வெட்டு said...

அன்புள்ள அன்னா,
நீங்கள் உங்கள் தளத்தில் தமிழில் எழுதுவது மிக்க மகிழ்ச்சி.
என்னளவில் இணையத்தில் அறிவியல் பரிணாமம் மற்றும் அது சார்ந்த அறிவியல் கருத்துகளைப் பேசுபவர்கள் சிலரே. அதில் துறை சார்ந்த அறிவியலார்கள் என்று மிகச்சிலரே(நானறிந்த வரையில்)தமிழ்ப்பதிவுலகில் உள்ளனர். அப்படி நான் அறிந்தவர்கள் கையேடு,தருமி,தெகா,நீங்கள் மற்றும் ecortext http://ecortext.blogspot.com/

நான் ,வால் மற்றும் கும்மி (இன்னும் பலர்) என்னதான் அறிவியல் விரும்பிகளாக இருந்தாலும் , உங்களைப் போன்றவர்களின் கட்டுரை ஒரு ஆய்வுக்கட்டுரை போன்றது.

**

உங்களின் துறைகள் நூற்றுக்கு நூறு பரிணாமம் சார்ந்தது இல்லை என்றாலும் (நாங்க நம்ப மாட்டோம்ல) உயிரியல் சார்ந்த துறையாக இருக்கிறது என்றே நம்புகிறேன்.

கதை,கவிதை சினிமா, இலக்கிய மொக்கை என்று மட்டுமே இருக்கும் கயாலன்கடையில் மிகச்சிலரே அறிவியல் பேசுகிறார்கள்.

பின்னூட்டங்கள், நீளம் , அகலம் என்றெல்லாம் பார்க்காமல் தொடரவும். கையேடு சொன்னபடி இது பல மாணவர்களுக்கு பயன்படும். உங்களுக்கே தெரியாது எங்கு எப்போது யாருக்குப் பயன்படும் என்று. கட்டுரை முடிவில் ப்டிஎஃப் கோப்பாக எளிதில் யாரும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் போட்டுவிடலாம்

**

Unknown said...

சஹோதரி the analyst,

நான் கேட்ட கேள்விக்கான உங்களுடைய பதில் முழுமையானதாக இல்லை அதனாலயே நான் அதற்கு பதிலளிக்க வில்லை, ஆனால் எதற்காக பதில் பதிலளிக்க வில்லை என்பதை என்னுடைய facebookல் ஒருவர் கேள்வியாக கேட்டார், அதனாலயே பதிலளிக்கும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.

//Sequence செய்வது ஆதாரமாகாது. ஆனால் அந்த sequence சொல்லும் விடயங்கள் ஆதாரமாகும். In other words, ஒவ்வொரு உயிரியின் sequence உம் பரிணாமத்தைச் சோதித்துக் கொண்டுதான் உள்ளது.//

Sequence சொல்லும் விடயங்களும் ஆதரமாகாது. அதாரம் இருந்தால் தெளிவாக கூறவும்.

//மனிதக் குரங்குகளில் 24 சோடி நிறவுருக்கள் (chromosomes) உண்டு (மனிதக்குரங்களில் மட்டுமல்ல மற்றைய great apes இலும்). எம்மில் 23 சோடி. இரு இனமும் ஒரே மூதாதையரிலிருந்து தான் வந்ததாயின் எமது ஒரு சோடி நிறவுருவிற்கு என்னவாயிற்று?//

இதற்கான பதிலை பதிவாக காணலாம்.
http://carbonfriend.blogspot.com/2011/06/blog-post.html

//ஆனால் இரு இனத்தின் DNA கட்டமைப்பிலுள்ள sequences ஜ பரிசோதித போது கண்டறிந்தது, எமது இரண்டாவது நிறவுரு மனிதக்குரங்குகளிலுள்ள‌ இரு நிறவுருக்கள் இணைந்ததால் உருவானது. மிகச்சரியாக அந்த இணைப்பு நிறவுருவில் எந்த இடத்தில் நடந்ததெனவும் இப்போது தெரியும். இதைப் பற்றிய கூடிய விளக்கத்தை மற்றைய பதிவுகளில் தருகின்றேன்.//

அதை பார்த்தபின் பதில் தருகிறேன்.

//அதோடு உயிரிகளுக்கிடையிலுள்ள ஒற்றுமையை மட்டுமல்ல வேற்றுமைகளையும் மிகச் சரியாகப் பரிணாமத்தால் மட்டுமே விளக்க முடியும்.//

Missing link இதுவரையிலும் missing link காகத்தான் உள்ளது.

//இய‌ற்கைத் தேர்வு (natural selection) ப‌ரிணாம‌த்திற்கு ஆதார‌ம‌ல்ல‌. ப‌ரிணாம‌ம் எப்ப‌டி ந‌ட‌க்கிறது என‌ விள‌க்கும் கோட்பாடுக‌ளில் அதுவும் ஒன்று//

இயற்கை தேர்வு என்று ஒன்று கிடையாது, தெளிவாக சொல்வதென்றால் mutation தவிர வேறு எந்த வகையிலும் மரபு மாறாது.

Dr.Dolittle said...

கார்பன் கூட்டாளியின் சில கேள்விகளுக்குபதில் அளித்து உள்ளேன் , படித்து பாருங்களேன்
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html

Dr.Dolittle said...

கார்பன் கூட்டாளியின் சில கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளேன் , படித்து பாருங்களேன்
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html

Anna said...

மன்னிக்கவும் முதல் பின்னுட்டத்தை இப்ப தான் பார்த்தேன். ஏனோ spam இல் போய்விட்டது. உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு அங்கு பின்னுட்டம் இடுகின்றேன். மிக்க நன்றி.

yasir said...

பதிவு மிக தெளிவாகவும் எளிமையாகவும் எம் போன்றோர்க்கு பயனுள்ளதாகவும் உள்ளது. பல அரிய தகவல்களைக் கற்றுக் கொண்டேன். ஆன்மீக படைப்புக் கொள்கை சொல்லும் கட்டுக் கதைகளைவிட,இது போன்ற ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்து ஏற்றுக் கொள்வது வீணல்ல. இன்னும் விரிவாக ஆய்வு செய்து பல தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். நன்றி சகோதரரே.