Monday, October 8, 2012

அறிவியலில் theory/கோட்பாடு என்றால் என்னவென்று பார்க்கலாமா?

"அறிவியலாளார்களால் நிரூபிக்கப்படாத தியரிகளை வைத்து, அவர்கள் சொல்வதெல்லாவற்றையும் முட்டாள்தனமாக நேரில் பார்த்தது போல் நம்புகிறீர்கள். நிரூபிக்கப்படாததால் தான் அது தியரி, நிரூபிக்கப்பட்டால் அதை உண்மையென்று சொல்வார்கள் தெரியுமோ" என்றிருந்த ஒரு பதிவு வாசிக்க நேர்ந்ததால் இந்தப் பதிவு. அந்தப் பதிவு எழுதியவர் மட்டுமல்ல சமூகத்தில் பலர் இவ்வாறே கருத்துக் கொண்டிருப்பதால் இந்த‌ அறிவியல் அடிப்படைப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன்.


மேற்சொன்ன பதிவில் சொல்லப்பட்டிருப்பது மிகப் பிழையான கருத்து. மக்கள் சாதாரணமாக தமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் theory என்ற சொல்லின் அர்த்தமும் அறிவியலில் theory என்ற சொல்லின் அர்த்தமும் மிகவும் வேறுபட்டவை.

அன்றாட வாழ்வில் மக்கள் ஒரு தனிப்பட்டவரின் கருத்தைச் சொல்லவோ, ஒரு அவதானிப்பு/உண்மையை விளக்க முற்படும் அனுமானங்களையோ, ஊகத்தையோ குறிப்பிடவோதான் theory/கொள்கை என்ற சொல்லைப் பயன் படுத்துவர். It is used to point out a hypothesis or a speculation or a set of ideas to explain something.

அறிவியலில்  theory இன் அர்த்தம் இதற்கு நேரெதிரானது.

அறிவியல் என்பது பரிசோதனைகள் மூலம் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தை விளங்க நாம் பயன் படுத்தும் மிகச் சிறந்த சாதனம். அறிவியலில் theory/கோட்பாடு என்பது ஒரு அவதானித்த விடயம் அல்லது உண்மை எவ்வாறு நிகழ்கிறதெனும் விளக்கங்கள். இவ்விளக்கங்கள் சாதாரண அனுமானங்களிலிருந்து கோட்பாடெனும் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட பரிசோதனைகள் மூலம் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப‌ இவ்விளக்கங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். இவ்விளக்கங்களைப் பிழையாக்க எடுக்கும் எந்த முயற்சியும் பயனளிக்காமல் இருக்க வேண்டும். வருமுன் கூறமுடியுமா என்று பார்க்க வேண்டும். பின் இவ்வனுமானம் இன்னும் பலரால் தற்சார்பற்ற முறையில் நிரூபிக்கப்பட வேண்டும். இவ்வாறு பலரால் பல்லாயிரம் தடவை நிரூபிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் முடிவுகள் நிலையாக இருப்பின், அதன் பின் நீண்ட காலத்திற்கும் பிறகே அவ்வனுமானம் கோட்பாடாகின்றது. 
Scientific Method

இதில் ஒரிரு விஞ்ஞானிகள் தமது பரிசோதனைகளிலோ முடிவுகளிலோ பிழை விட்டாலும் மற்றவர்களின் பரிசோதனை முடிவுகள் அவர்களின் முடிவுகளை ஒத்திராவிடில் அம்முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதனாலேயே அறிவியல் தன்னைத் தானே திருத்திக்கொள்ளும் ஒரு ஒழுங்குமுறை எனப்படுகிறது. அறிவியலில் புனிதமானவை என்று எதுவுமே இல்லை.
 
உதாரணத்திற்கு நீங்கள் கையிலிருந்து ஒரு பொருளை விட்டால் அது கீழே விழும் என்பது ஒரு அவதானிப்பு/உண்மை. அந்த உண்மை எப்படி சாத்தியமாகின்றது என்பதை விளக்குவது theory of gravity/ஈர்ப்பு விசைக் கோட்பாடு. ஆம். ஈர்ப்பு என்ற உண்மையை விளக்கும் அறிவியல் விளக்கங்கள் ஈர்ப்பு விசைக் கோட்பாடுகளே. அது கோட்பாடுகள் என்பதற்காக ஈர்ப்பு விசையை ஏற்றுக் கொள்ளாதவர் யாரும் இருக்கின்றீர்களா?
 
அதே மாதிரி நாம் இருக்கும் சூரியக் குடும்பத்தில் சூரியனே நடுவில் இருக்க கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதை விளக்குவது Heliocentric theory. பரிணாமம் என்ற உண்மையை விளக்கும் அறிவியல் விளக்கங்கள்  theory of evolution/பரிணாமக் கோட்பாடுகள்.
 
ஒரு நிறுவப்பட்ட அறிவியல் கோட்பாடென்பது ஒரு உண்மை/நிகழ்வுக்கான விளக்கங்கள். இக்கோட்பாடு அக்குறிப்பிட்ட நிகழ்வுக்கான முழு விளக்கத்தையும் அளிப்பது மட்டுமல்லாது அந்நிகழ்வை ஒட்டி எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றும் கணிக்கக் கூடியது. கோட்பாடே அறிவியல் பரிசோதனைகளின் இறுதி இலக்கு. ஒன்றைக் கிட்டத்தட்ட 100 வீதம் நிரூபிப்பதற்கு சமமானது.

இன்னொரு முக்கியமான விடயம், அறிவியலில் ஒன்றையும் 100% நிரூபிக்க முடியாது. அது கணிதவியலில் மட்டுமே சாத்தியமாகும். எமக்கு இருக்கும் ஆதாரங்களை வைத்து ஒரு 100% சாத்தியமில்லை - 100% சாத்தியமாகும் என்ற அளவுகோலில் ஒரு நிகழ்தகவாகவே எல்லா அறிவியல் விளக்கங்களும் இருக்கும். ஏனெனில் எமது பரிசோதனைகளில் எல்லா மாறிகளுக்கும் எம்மால் கணக்கு வைக்க முடியாது. அத்தோடு சில சமயம் எதிர்காலத்தில் எம்மிடம் இப்போ இருக்கும் கருவிகள்/சாதனங்களை விட மிக நுணுக்கமாக அளக்கக் கூடிய/பரிசோதிக்கக் கூடிய வசதிகள் வருமெனில் எமது இப்போதைய முடிவுகள் கொஞ்சம் மாற்றப்படலாம். அம்மாற்றங்களையும் சேர்ப்பதற்காகவே அந்த 100% வீதம் சாத்தியம் என்பதற்கு கிட்டக் கிட்ட போகலாமே தவிர 100% அடைய முடியாது. இது ஈர்ப்பிற்கும் பொருந்தும் பரிணாமத்திற்கும் பொருந்தும். இரண்டும் அறிவியலைப் பொருத்த மட்டில் 99.9999% உண்மையே. ஆனாலும் நம் அன்றாட வாழ்வைப் பொருந்த வரையில் அவை உண்மையே.
 
நீங்கள் விடும் பொருள் நாளை கீழே விழாமல் மேலே எழலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில் இருக்கும் ஆதாரங்களை வைத்து அவ்வாறு நடக்க மாட்டாது என ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் இதை வாசித்துக் கொண்டுருப்பது கூட அறிவியலின் உண்மை நிலையிலிருந்து 100% என்று கூற முடியாது. நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கலாம் அல்லது நீங்கள் வாசிப்பது ஒரு பிரமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அறிவியல் வார்த்தைகளால், இருக்கும் ஆதாரங்களை வைத்து அநேகமாக (99.99999999999%) அவ்வாறு இருக்க முடியாது என்றே கூறலாம்.

இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகின்றேன். அண்மையில் சில மதம் சார்ந்த பதிவுகளின் கடைசியில் 'எந்தவித முன் முடிவுகளும் இன்றி திறந்த மனதுடன் படியுங்கள்" என்றும் "ஒரு மதத்தைப் பற்றி அம்மதப் 'புனித' நூலின் மூலமும் அதைச் சரியாகப் பின்பற்றுபவர் மூலமுமே அறிய வேண்டும் வேறொருவர் மூலமல்ல" என்றும் வாசித்தேன். It's a fair point. அமெரிக்காவிலிருக்கும் ஒரு கத்தோலிக்க அடிப்படைவாதியோ இந்தியாவிலிருக்கும் ஒரு இந்து அடிப்படைவாதியோ எழுதுவதை மட்டும் வாசித்து விட்டு இஸ்லாமென்றால் இதுதானென நம்புவது முட்டாள்தனம். முற்று முழுதாக ஒத்துக் கொள்கின்றேன். அதே போல் நான் கேட்பதெல்லாம், please follow what you preach/ தயவு செய்து ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்பது போலல்லாமல் நீங்கள் போதித்ததை நீங்களும் பின்பற்றி, அறிவியலை உங்கள் மதத்தைப் பின்பற்றுபவர் என்பதற்காக யார் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளாமல் அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பார்க்கலாமே?
image: Google

5 comments:

கையேடு said...

வணக்கங்க அனா,

//இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகின்றேன். அண்மையில் சில மதம் சார்ந்த பதிவுகளின் கடைசியில்//

மார்க்கங்களில் காதுள்ளவர்கள் எவரேனும் இருப்பர் என்ற "நம்பிக்கையில் அந்தப் பத்தியைச் சேர்த்திருப்பீர்கள் போலும்" .. :)


அறிவியல் ரீதியாக இவ்விடுகை ஒரு அறிவியல் கட்டுரையையும் அதனைத் தொடர்ந்த உரையாடல்களையும் நினைவுக்கு கொண்டுவந்த்துவிட்டது..

கொள்கை, விதி இவற்றை ஒரு அறிவியலாளன் எப்படிப் பயன்படுத்துகிறான், வெகுசனங்கள் அதனை எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்று நெடிய உரையாடல் நிகழ்ந்தது கடிதங்கள் வாயிலாக.

கட்டுரையில் மூலத்திற்கான சுட்டி இதோ..

http://scitation.aip.org/getpdf/servlet/GetPDFServlet?filetype=pdf&id=PHTOAD000060000001000008000001&idtype=cvips&doi=10.1063/1.2709533&prog=normal

அதனைத் தொடர்ந்து நடந்த உரையாடல்களும் மிகவும் ஆர்வமூட்டுபவையாக இருந்தது.

நேரமிருந்தால் ஜூலை அதே ஆண்டின் ஜூலை மாத இதழில் வந்த உரையாடல்களையும் வாசித்துப் பாருங்கள்..


Iniyavaniniyavan Iniyavan said...

வணக்கம் நண்பரே,

சி(தி)றந்த அறிவியல் பார்வை,மதங்கள் சொல்வதுதான் உண்மை அதன் குருக்கள் கூறுவதுதான் ஏற்கத் தகுந்தாது என்றில்லாமல் ஆராய்ந்து அரிந்தால் உண்மை என்னவென்று புரியும்.

//அறிவியலை உங்கள் மதத்தைப் பின்பற்றுபவர் என்பதற்காக யார் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளாமல் அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பார்க்கலாமே?//

அதெப்படி.. என் மத குருவும் வேதங்களில் இருப்பதுவும் தான் உண்மை என நம்பிக்கை கொள்பவர்களிடம் ஆராய்ந்து பார்க்கவும் கேள்விகள் கேட்கவும் சொல்வது நம்முடைய அறியாமை என்றுதான் நொந்து கொள்ள வேண்டும்!!!!

இனியவன்....

The Analyst said...

எல்லாம் ஒரு அற்ப நம்பிக்கையில் தான் கையேடு. சுட்டிக்கு மிக்க நன்றி. நிச்சயம் பார்க்கிறேன்.

The Analyst said...

க‌ருத்திற்கு மிக்க‌ ந‌ன்றி இனிய‌வ‌ன்.

sujeevan thavarajah said...

அருமை நண்பா