இது பண்புடன் எனும் இதழில் சில வருடங்களுக்கு முன் வெளியான என் கட்டுரை. அத்தளம் இப்போது வேலை செய்யாததால் இங்கு பதிகிறேன்.
மருத்துவம்/மருந்துகள் என்றால் என்ன? எவை குறிப்பிட்ட நோய்களை அல்லது நோய்களின் அறிகுறிகளை இயன்றளவு தீமையின்றி போக்கவோ குறைக்கவோ செய்கின்றனவோ, அவ்வாறு செய்வதற்கு ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றனவோ அவையே மருந்துகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனலாமா? அப்படியாயின் மாற்று மருத்துவம் என்றால் என்ன? உண்மையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளுக்கு முற்றிலும் எதிர்மாறானவையா? மாற்று மருத்துவம் செய்பவர்கள் உறுதியாகக் கூறுவது போன்று அம் 'மருந்துகள்' வேலை செய்வதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா?
ஒரு மருந்து குறிப்பிட்ட ஒரு நோயைக் குணப்படுத்த உதவலாம். அதை அந்நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருந்தாகக் கொடுக்கலாம் என எவ்வாறு முடிவு செய்வர் எனப் பார்க்கலாமா? ஒரு உண்மையான உதாரணத்தைக் கொண்டு விளக்கினால் இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் இதற்கு உதாரணமாக எனது துறையில் தற்போது பரிசோதனையில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் அநேகமாகத் தெரிந்த ஒரு மருந்தை எடுத்துக் கொள்வோம். வயாக்ரா! இது தற்போது ஏன் பயன் படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இடுப்புப் பகுதிக்குச் செல்லும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலம் ஆண்களின் இடுப்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதே வயாக்ரா பயன்படுத்தும் ஆண்களில் வேலை செய்ய முக்கிய காரணம். இதன் இரசாயனப் பெயர் sildenafil citrate.
மேற்சொன்ன விடயத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதற்கு மிக வித்தியாசமான ஒரு விடயத்தைப் பற்றி சுருக்கமாக கீழ்க்காணும் பந்தியில் பார்ப்போம். இரண்டிற்குமான தொடர்பு இதை வாசித்ததும் புலப்படும்.
குழந்தை கருப்பையில் விருத்தியடையும் போது தாயிடமிருந்து தேவையான போஷாக்கு, வாயுக்களை குழந்தைக்குக் கொண்டு செல்லவும் குழந்தையிடமிருந்து கழிவுகளை தாய்க்கு அனுப்பவும் உதவும் அங்கம் சூல்வித்தகம் (placenta). கருத்தரித்த உடனேயே கருவிலிருந்து உருவாகும் சூல்வித்தக செல்கள் தாயின் கருப்பை அகப்படலத்தினூடாக தாயின் கருப்பையிலிருக்கும் இரத்த நாளங்களை ஊடுருவி, அவற்றை முற்றாக மாற்றி மிகவும் விரிவடையச் செய்யும். இதன் மூலம் தாயின் கருப்பை ஊடாக சூல்வித்தகத்திற்கு இரத்த ஓட்டம் மிகவும் அதிகரிக்கும். அதிகரித்த இரத்த ஓட்டத்திலிருந்து குழந்தைக்குத் தேவையானவற்றை உறிஞ்சி எடுக்க சூல் வித்தகத்திற்கு இலகுவாக இருக்கும். குழந்தையின் நல் விருத்திக்கு கருப்பையில் கருக்கட்டிய ஆரம்பத்தில் நடக்கும் இம்மாற்றம் மிகவும் இன்றியமையாதது. கரு வளர்ச்சி தடைப்படுவதால் குழந்தை வளர்ச்சி குன்றிப் பிறத்தல் (fetal growth restriction), மற்றும் pre-eclampsia என்று சொல்லப்படும் முன்சூழ்வலிப்பு/குருதி நஞ்சூட்டுதல் உட்பட கருக்காலத்தில் வரும் பலவகையான நோய்களில் இந்த சூல்வித்தகம், அதன் இரத்த நாளங்கள் எவையும் நன்றாக விருத்தியடைந்து இருப்பதில்லை. இந்நோய்களுக்குத் தற்சமயம் மருந்துகள் எதுவும் இல்லை. இந்நோய்கள் பிறந்த குழந்தைகளைப் பலவகையில் பாதிக்கின்றன. அத்துடன் இந்நோய்களால் தாய்க்கும் குழந்தைக்கும் கருக்காலத்தில் மட்டுமல்ல குழந்தை பிறந்து வளர்ந்து பல வருடங்களின் பின்பும் இருவருக்கும் இதய நோய்கள், நீரிழிவு நோய் என்பன வரும் வாய்ப்பு மிக அதிகம்.
*கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து 'புனித' நீர் எடுத்து வரச் சொல்வார்களாம். கோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம். அந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் (3). இதற்குப் பெயர் தான் placebo effect.
1. Stanley JL, et al., Sildenafil citrate rescues fetal growth in the catechol-O-methyl transferase knockout mouse model. Hypertension (2012); 59 (5): 1021-1028.
2. von Dadelszen P, et al., Sildenafil citrate therapy for severe early-onset intrauterine growth restriction. BJOG (2011); 118(5): 624-628.
3. source: THE MIRACLE OF GANGA WATER by the late Dr Abraham Kovoor
மேற்சொன்ன இரு விடயங்களையும் வாசித்ததும் யாருக்காவது ஒரு திறமான எண்ணம் தோன்றியதா? என்னுடன் வேலை செய்யும் ஒரு மருத்துவ அறிவியலாளருக்கு வந்தது. வயாக்ரா ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்ட பாதுகாப்பான மருந்து. அது ஆண்களில் இடுப்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது தானே மேற்சொன்ன நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் தேவை. கருப்பை இரத்த நாளங்களை விருத்தியடையச் செய்து சூல்வித்தகத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால், சூல்வித்தகம் நன்றாக விருத்தியாததால் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கலாம் இல்லையா?
திறமான எண்ணம் வந்தது சரி, அதற்காக இதற்கு ஒரு ஆதாரமும் இல்லாமல், எவ்வளவு வயாக்ரா கொடுக்க வேண்டும், எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், அதனால் வேறு ஏதாவது பாதிப்பான பக்க விளைவுகள் வருமா என்றெல்லாம் தெரியாமல் இந்நோய்களால் பாதிக்கப்படும் கற்பிணிப் பெண்களுக்கு கொடுப்பது சரியாகாது தானே. வயாக்ரா இரத்த நாளங்களை விருத்தியடையச் செய்வது முதலே ஆய்வுகூட அடிப்படைப் பரிசோதனைகளில் கண்டுபிடித்தாயிற்று. அதனால் அடுத்து கரு வளர்ச்சி குன்றிய கருக்களைச் சுமக்கும் சுண்டெலிகளுக்கு வயாக்ரா கொடுத்துப் பார்த்தார்கள். தாய்ச் சுண்டெலிகளின் சூல்வித்தக இரத்த நாளங்கள் நன்றாக விருத்தி அடைந்தது மட்டுமன்றி பிறந்த குட்டிச் சுண்டெலிகளும் நல்ல நிறையுடன் பிறந்தன (1). இதே மாதிரி எலிகள், கினியாப் பன்றிகளில் செய்த பரிசோதனைகளிலும் வயாக்ரா சாதகமான முடிவுகளையே தந்தது.
சோதனை விலங்குகளில் மருந்து வேலை செய்தால், மனிதரில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பினும், ஒரு ஆதாரங்களும் இல்லாமல் மனிதரில் வேலை செய்யும் என நம்புவது மடைத்தனம். அதனால் இவ்வாய்வின் அடுத்த கட்டமாக கருக்காலத்தில் மிகவும் ஆரம்பத்திலேயே குழந்தையின் வளர்ச்சி குன்றி இருப்பதாகக் சில கண்டறிந்த 10 பெண்களிடம் (இச்சந்தர்ப்பங்களில் சாதாரணமாக பிரசவத்தின் போதே 50 சதவீதளவு குழந்தைகள் இறந்து விடும்) அனுமதி பெற்று அவர்களுக்கு வயாக்ரா கொடுத்தார்கள். அவ்வாறு வயாக்ரா சிகிச்சை அளிக்கப்பட்ட 10 கற்பிணிப்பெண்களில் 9 பேருக்கு குழந்தைகள் பிழைத்தன மட்டுமன்றி வைத்தியசாலையிலிருந்தும் குறைந்த காலத்திலேயே விடுவிக்கப்பட்டும் விட்டனர். ஓரே ஒரு குழந்தை மட்டுமே இறந்து பிறந்தது (2).
இந்த ஆதாரம் போதுமா? இல்லவே இல்லை. ஒரு நோயைக் குணப்படுத்த ஒரு மருந்து அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் இதற்கும் மேலாக இன்னுமொன்று செய்ய வேண்டும். அது தான் double blinded randomised clinical trial. வேறெந்தக் காரணிகளின் தாக்கமும் அற்று வயாக்ரா கொடுத்ததன் விளைவால் மட்டுமே குழந்தைகள் நற்சுகத்துடன் பிறந்தார்கள் என்பதை உறுதிப் படுத்த இது அத்தியாவசியமானது. அதாவது வயாக்ரா உண்மையில் இப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுமா எனப் பார்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு கட்டங்களில் பல நூறு கரு வளர்ச்சி குன்றி இருக்கும் கர்ப்பிணிப் பெண்களை எடுத்து அவர்களின் அனுமதியுடன் சிலருக்கு வயாக்ராவும் சிலருக்கு வயாக்ரா மாதிரியே இருக்கும் சும்மா ஒரு மாத்திரையும் கொடுக்க வேண்டும். இதில் மாத்திரை கொடுக்கும் மருத்துவருக்கோ எடுக்கும் பெண்ணுக்கோ அது மருந்தா அல்லது சும்மா மாத்திரையா என்று தெரிந்திருக்கக் கூடாது - அது தான் double blinding. ஏனெனில் மருத்துவருக்குத் தெரிந்தால் அவரை அறியாமலே அவரின் செய்கைகளும் உணர்ச்சிகளும் மருந்து கொடுக்கும் போது மாறுபடலாம். சில மருத்துவர்களிடம் போனால் அவர் மருந்து ஒன்றும் கொடுக்காமலே உங்களுக்கு வருத்தம் கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா? அதே போல் மருந்து தான் எடுக்கிறேன் என உண்மையில் நினைத்து சீனிக் குலுசையைப் போட்டாலும் சிலருக்கு சில நோக்கள் மாறிவிடும்*. அதோடு வயாக்ரா மருந்து எடுக்கும் குழுவில் நோயின் வீரியம் அதிகம் இருக்கும் பெண்களும் சும்மா மாத்திரை எடுக்கும் குழுவில் நோயின் வீரியம் குறைந்த பெண்களும் கூட இருக்கக் கூடாது. இரண்டு குழுக்களில் கிட்டத்தட்ட எல்லா விதத்திலும் சமத்துவமான பெண்கள் இருக்க வேண்டும் - அது தான் randamisation. ஒரு நோயின் வீரியம் குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுப்பவரினதும் நோயாளியினதும் மனநிலை/காட்டும் உணர்ச்சிகள், நோயின் வீரியம், நோயாளியின் வயது, வாழ்க்கை நிலை என்று எந்தக் காரணிகளும் அன்று அந்த மருந்து மட்டுமே காரணமாகுமா என அறிவதற்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் இன்றியமையாதது. இந்த பரிசோதனையிலும் உண்மையில் வயாக்ரா கரு வளார்ச்சி குன்றிய குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்கிவிக்கின்றது எனக் கண்டால், அதன் பின் வயாக்ரா கருக்காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருந்தாக ஆதார பூர்வமாக அங்கீகரிக்கப்படும். தற்போது ஜரோப்பாவிலும் நியூசிலாந்திலும் இந்த double blinded randomised clinical trial செய்வதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வளவு பாடுபடுவதற்கு முக்கிய காரணம் உலகில் எங்கோ ஓரிடத்தில் இவ்வாறான நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கற்பிணிப் பெண் இறக்கிறாள். இந்த வகையான ஒவ்வொரு ஆராய்ச்சியின் இலக்குமே இந்த இறப்பு விகிதத்தைத் குறைப்பதுவும் இதனால் தாயினது சேயினதும் வாழ்க்கைத் தரத்தை நோயின்றி உயர்த்தவுமே.
வழக்கமான மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் மருந்துகள் எவ்வாறு உடலில் வேலை செய்கின்றன? உடலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வருகின்றன? அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன? பக்க விளைவுகளை விட அவற்றால் ஏற்படும் நன்மைகள் அதிகமானவையா? அம்மருந்துகள் உபயோகிப்பதால் எதேனும் நீண்ட காலத்தாக்கங்கள் உள்ளனவா? என்பதெல்லாம் அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டறியந்து பத்திரப்படுத்தப்படும். அதோடு தொடர்ந்து அவற்றின் உபயோகம், விளைவுகளை பார்வையிட்டுக்கொண்டே இருப்பர்.
இனிக் கட்டுரையின் முதலில் கேட்டிருந்த கேள்விக்கு வருவோம். மாற்று மருத்துவம் செய்பவர்கள் உறுதியாகக் கூறுவது போன்று அம் 'மருந்துகள்' வேலை செய்வதற்கு என்னவாவது ஆதாரங்கள் உள்ளனவா? என்று. எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாகும். அநேகமான மாற்று மருத்துவ முறைகளில் மேற்சொன்ன வகையான ஆய்வுகள் எதுவுமே நடைபெறவில்லை. ஆய்வுகள் நடந்த பலவற்றில் நோயின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையில் கொடுத்த மருந்துக்கும் சும்மா மருந்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. பல சமயம் இந்த மாற்று மருத்துவ முறைகளைச் செய்பவர்கள் இந்த மாதிரியான ஆய்விற்குத் தமது மருந்துகளை உட்படுத்த விரும்புவதுமில்லை.உலகில் எத்தனையோ வகையான மாற்று மருத்துவங்கள் உண்டு. ஆனால் இந்திய/இலங்கைச் சமூகத்தில் அதிகம் உபயோகத்தில் இருப்பவை ஆயுர்வேதம், யோகா, உனானி, சித்த வைத்தியம், ஹொமியோபதி. சுருக்கமாக AYUSH (Ayurveda, Yoga, Unani, Siddha, Homeopathy).
இக்கட்டுரைக்கு ஆயுர்வேதத்தையும் ஹொமியோபதியையும் உதாரணமாக எடுப்போம். முக்கியமாக ஆயுர்வேதத்தின் அடிப்படையான வதா, பிதா, கப்பா தோஸாக்கள் இருப்பதற்கே எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆயுர்வேதத்தில் இருக்கும் சில மருந்துகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணமாகுமென ஆதாரங்கள் உண்டு. ஆனால் பலவற்றிற்கு இல்லை. அதோடு வழக்கமான மருந்துகளிற்கு இருக்கும் சட்ட திட்டங்களுக்கேற்ப இவ்வாயுர்வேத மருந்துகள் மதிப்பிடப்படுவதில்லை. வெளிநாடுகளிற்கு இவை உணவுக் கூடுதல்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் வெளிநாடுகளில் மருந்துகளிற்கு இருக்கும் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பல ஆயுர்வேத மருந்துகளில் ஆபத்தான அளவுகளில் செம்பு, ஆசனிக் போன்ற இரசாயன மூலகங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஹோமியபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹொமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை. அவர்கள் நோயைப் போக்கும் கூலகத்தை நீரில் பல்லாயிரம் தடவை ஜதாக்கி (ஏனெனில் நீருக்கு ஞாபக சக்தி உண்டென்பது அவர்களின் 'நம்பிக்கை') அதன் பின் அந்நீரை மாத்திரையாக்குவார்கள். அம்மருந்தை எடுப்பதற்கும் நீங்கள் ஒரு சீனி மாத்திரையை எடுப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் ஹோமியோபதி மருந்துகள் பாவிப்பதால் உங்களுக்கு பெரிதாக ஒரு தீங்கும் வராது. ஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள். ஹோமியோபதி சிகிச்சையாளர்கள் தமது சிகிச்சை முறை உண்மையில் வேலைசெய்கிறது என விஞ்ஞான ரீதியில் ஆதாரபூர்வமாகக் காட்டினால் 10,000 பெளண்டுகள் பரிசாகத் தருவதாக Trick or Treatment என்ற புத்தகத்தின் எழுத்தாளார்கள் சவால் விட்டுள்ளனர். இதுவரைக்கும் யாரும் வெற்றி பெறவில்லை.
இம்மாதிரியான மாற்று "மருத்துவ" முறைகள் மக்களைக் கவர்வதற்கு முக்கியமாக நான்கு காரணங்களைக் கூறலாம்.
முதலாவது காரணம்: இம்முறைகள் எல்லாம் இயற்கையானது/ இரசாயனங்கள் ஏதும் அற்றது என இம்முறைகளைச் செய்பவர்கள் கூறுவது. இக்கூற்று மிகவும் கேலிக்குரியது. ஏனெனில் நீங்கள் அருந்தும் தண்ணீர் கூட ஒரு இரசாயனப் பொருள் தான். அதன் இரசாயனக் குறியீடு H2O. தண்ணீர் இரு ஜதரசன் அணுக்களையும் ஒரு ஒக்சியன் அணுவையும் கொண்டது. அநேகமான மாற்று 'மருத்துவங்களில்' உபயோகிக்கப்படும் மூலிகைகளும் இரசாயனக் கூட்டுகளே. அதுமட்டுமல்ல எமது உடலே ஒரு இரசாயனத் தொழிற்சாலையே. ஒரு கூறு இயற்கையானது என்றால் அது நமக்கு நன்மையானதாகவே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கூட மிகத் தவறானதே. பாம்பின் நஞ்சு கூட இயற்கையானதே. அதற்காக நஞ்சு குடித்தால் உடலிக்கு நன்மை அளிக்கும் என யாராவது சொல்வார்களா? எத்தனையோ புழக்கத்தில் இருக்கும் மருந்துகள் பல மூலிகைகளிலிருந்தே முதலில் தயாரிக்கப்பட்டன. மூலிகைகளில் ஆயிரக்கணக்கான இரசாயனக் கூட்டுகள் உள்ளன. அதில் எந்தக் கூட்டு ஒரு குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணமாகலாம் என பரிசோதித்து, பின் அதைத் தனிமைப்படுத்தியே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் மருந்துகள் வீரியம் கூடியவையாகவும் ஆபத்துக் குறைந்தவையாகவும் உள்ளன.
முதலாவது காரணம்: இம்முறைகள் எல்லாம் இயற்கையானது/ இரசாயனங்கள் ஏதும் அற்றது என இம்முறைகளைச் செய்பவர்கள் கூறுவது. இக்கூற்று மிகவும் கேலிக்குரியது. ஏனெனில் நீங்கள் அருந்தும் தண்ணீர் கூட ஒரு இரசாயனப் பொருள் தான். அதன் இரசாயனக் குறியீடு H2O. தண்ணீர் இரு ஜதரசன் அணுக்களையும் ஒரு ஒக்சியன் அணுவையும் கொண்டது. அநேகமான மாற்று 'மருத்துவங்களில்' உபயோகிக்கப்படும் மூலிகைகளும் இரசாயனக் கூட்டுகளே. அதுமட்டுமல்ல எமது உடலே ஒரு இரசாயனத் தொழிற்சாலையே. ஒரு கூறு இயற்கையானது என்றால் அது நமக்கு நன்மையானதாகவே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கூட மிகத் தவறானதே. பாம்பின் நஞ்சு கூட இயற்கையானதே. அதற்காக நஞ்சு குடித்தால் உடலிக்கு நன்மை அளிக்கும் என யாராவது சொல்வார்களா? எத்தனையோ புழக்கத்தில் இருக்கும் மருந்துகள் பல மூலிகைகளிலிருந்தே முதலில் தயாரிக்கப்பட்டன. மூலிகைகளில் ஆயிரக்கணக்கான இரசாயனக் கூட்டுகள் உள்ளன. அதில் எந்தக் கூட்டு ஒரு குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணமாகலாம் என பரிசோதித்து, பின் அதைத் தனிமைப்படுத்தியே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் மருந்துகள் வீரியம் கூடியவையாகவும் ஆபத்துக் குறைந்தவையாகவும் உள்ளன.
இரண்டாவது காரணம்: இம்முறைகள் பண்டைய காலந்தொட்டு எம்சமூகத்தில் உபயோகிக்கப்படுகிறது. ஒரு முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்தற்காக அம்முறை சரியானதாகவோ நன்மையானதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. எமது உடல் எவ்வாறு வேலை செய்கிறது என்று தேவையான அறிவு இல்லாத காலத்தில் உருவான முறைகளை உண்மையில் நன்மை செய்கிறதா என முழுமையாக ஆராயாமல் பயன்படுத்துவது பாதமான விளைவுகளையே தரும்.
மூன்றாவது காரணம்: தாம் முழு மனித உடலையும் பார்த்து மனிதரின் வாழ்க்கை முறையையும் கேட்டே மருத்துவம் அளிப்பதாக மாற்று "மருத்துவர்கள்" சொல்வது. இது கூட கேலிக்குரியதே. ஏனெனில் அதைத் தான் வழக்கமான மருத்துவர்களும் செய்கிறார்கள்.
நான்காவது காரணம்: இம்மாற்று 'மருத்துவத்தில்" பக்க விளைவுகள் இல்லை என்று மக்கள் நம்புவது. இந்நம்பிக்கை கூட மிகவும் பிழையானதே. எல்லா மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் நிச்சயம் உண்டு. வழக்கமான மருத்துவர்கள் எம்மருந்துகள் தீமைகளை விட மிக அதிகம் நன்மை கொடுக்கின்றனவோ அவ்ற்றைப் பயன் படுத்துகின்றனர். மிக முக்கியமாக மருந்துகளால் வரும் நன்மைகள், தீமைகள், நீண்ட கால விளைவுகள் எல்லாவற்றிற்கும் இயன்றளவு ஆதாரங்களைத் தொடர்ந்து பத்திரப்படுத்திக் கொண்டிருப்பர். அவ்வாறான ஆராய்ச்சிகளால் பல வருடங்களின் பின் ஒரு மருந்து நன்மையை விடத் தீமையே செய்கிறது எனக் கண்டால், அதன் பின் அம்மருந்து உபயோகப் படுத்துவது தடைப்படுத்தப்படும்.ஆனால் இம்மாற்று மருத்துவத்தால் வரும் பக்க விளைவுகளை யாரும் பத்திரப்படுத்துவதில்லை.
இச்சிகிச்சை எல்லாவற்றிற்கும் அநேகமானோர் ஆதாரமாகக் கொடுப்பது பல மூன்றாம் மனிதர்கள் கொடுத்த வாக்குமூலங்களையே. தனி மனிதர்களின் வாக்குமூலம் மிகப் பிழையானதானதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவுமே அநேகமாக இருக்கும். அதற்காகவே தற்சார்பற்ற முடிவு என்ன என்று காண்பதற்காகவே இந்த randominsed double blinded trials அவசியமாகின்றது. அதோடு இந்த மாற்று மருத்துவம் செய்யும் அநேகமானோருக்கு சரியான மருத்துவப் பயிற்சியே இல்லை. பிறகு எவ்வாறு என்ன நோய், எப்படி மருத்துவம் செய்வது எனத் தெரியும்?
"மருந்துகள் என்றால் மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்டவை. மாற்று 'மருந்துகள்' எல்லாம் கீழைத்தேய நாடுகளில் தோன்றியவை. அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு" என்று எம் நாடுகளில் நினைப்பவர்கள் பலர்.மருந்துகள் என்றால் தற்சார்பற்ற, ஆதாரபூர்வமாக, இயன்றளவு பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்குபவை அல்லது அந்நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துபவை. சரியான அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளின் ஊடாக அவற்றால் வரும் தீய பக்க விளைவுகளை விட நன்மைகள் குறீப்பிட்டளவு அதிகம் என முடிவு செய்வதால் அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரம்பங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை. எத்தனையோ மருந்துகள் கிழைத்தேய நாடுகளில் பயன்படுத்திய மூலிகைகளில் இருந்தே உருவாக்கப்பட்டவை. அம்மூலிகைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மூலகங்களில் அக்குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணியான குறிப்பிட்ட மூலகத்தைத் தனிப்படுத்தி மாத்திரையாக்குவதே மருந்தாகிறது. நோயைக் குணப்படுத்தத் தேவையான இரசாயனக் கூறுகள் மட்டுமே இருப்பதால் மூலிகையாக எடுப்பதை விட மருந்தாக எடுப்பது பாதுகாப்பானதும் விரைவில் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அவ்வளவே.
உண்மையான மருத்துவம் மாற்று மருத்துவத்தை விட எல்லா விதத்திலும் உயர்ந்ததென பல ஆய்வுகள் காட்டி விட்டன. ஏனெனில் அவை எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறையாகும். எப்போ மாற்று மருத்து முறைகள் நோய்களைக் குணப்படுத்தப் பயனுள்ளவை என ஆதாரங்கள் கிடைக்கிறதோ அன்றே அவை மாற்று மருத்துவத்திலிருந்து உண்மை மருத்துவ முறையாக அங்கீகரிக்கப்பட்டுவிடும். இருப்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமும் போலிகளுமே. போலிகளை மாற்று 'மருத்துவம்' எனச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்பதோடு அது மக்களுக்கு ஒரு பிழையான புரிதலையும் கொடுக்கிறது.
எந்தவித ஆதரங்களுமின்றிய இம்மாதிரியான மாற்றுமருத்துவங்களை விளம்பரப்படுத்துவோர் பணம் நிறையக் கொண்ட பிரபல ஆட்களே. ஜரோப்பாவில் இதில் முதன்மையானவர் இளவரசர் சார்ல்ஸ். இம்மாற்று மருத்துவ முறைகளை விளம்பரப்படுத்தும் எவரும் தமக்கென வரும் போது, முதலில் இந்த மருத்துவத்தை நாடுவதே இல்லை.இவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் நோய் வரின் மிகச்சிறந்த மருத்துவர்களிடம் எவ்வளவு பணம் செலவழித்தும் போக இவர்களுக்கு வசதி உண்டு. இந்த விளாம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது பொது மக்களே. தயவு செய்து இனி எதாவது மாற்று மருத்துவமுறையை ஊக்குவிப்பர்களிடம், அம்மருந்து எமது உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்.
இந்திய அரசாங்கம் அண்மையில் இந்த AYUSH மருத்துவ முறைகளுக்கு அளித்த 1,000 கோடிகளுக்கும் மேலான பணத்தை வைத்து சரியான தற்சார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு இம்முறைகளுக்கு உண்மையில் எதாவது ஆதரங்கள் உண்டா எனக் கண்டறிந்தால் மிக நன்று.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------
எந்தவித ஆதரங்களுமின்றிய இம்மாதிரியான மாற்றுமருத்துவங்களை விளம்பரப்படுத்துவோர் பணம் நிறையக் கொண்ட பிரபல ஆட்களே. ஜரோப்பாவில் இதில் முதன்மையானவர் இளவரசர் சார்ல்ஸ். இம்மாற்று மருத்துவ முறைகளை விளம்பரப்படுத்தும் எவரும் தமக்கென வரும் போது, முதலில் இந்த மருத்துவத்தை நாடுவதே இல்லை.இவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் நோய் வரின் மிகச்சிறந்த மருத்துவர்களிடம் எவ்வளவு பணம் செலவழித்தும் போக இவர்களுக்கு வசதி உண்டு. இந்த விளாம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது பொது மக்களே. தயவு செய்து இனி எதாவது மாற்று மருத்துவமுறையை ஊக்குவிப்பர்களிடம், அம்மருந்து எமது உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்.
இந்திய அரசாங்கம் அண்மையில் இந்த AYUSH மருத்துவ முறைகளுக்கு அளித்த 1,000 கோடிகளுக்கும் மேலான பணத்தை வைத்து சரியான தற்சார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு இம்முறைகளுக்கு உண்மையில் எதாவது ஆதரங்கள் உண்டா எனக் கண்டறிந்தால் மிக நன்று.
------------------------------
படங்கள் கூகிளின் உதவியுடன் எடுக்கப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
*கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து 'புனித' நீர் எடுத்து வரச் சொல்வார்களாம். கோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம். அந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் (3). இதற்குப் பெயர் தான் placebo effect.
1. Stanley JL, et al., Sildenafil citrate rescues fetal growth in the catechol-O-methyl transferase knockout mouse model. Hypertension (2012); 59 (5): 1021-1028.
2. von Dadelszen P, et al., Sildenafil citrate therapy for severe early-onset intrauterine growth restriction. BJOG (2011); 118(5): 624-628.
3. source: THE MIRACLE OF GANGA WATER by the late Dr Abraham Kovoor
மாற்று மருத்துவத்தைப் பற்றிய விபரமான தகவல்களுக்கு:
- The state of Ayurveda - Examining the evidence by Meera Nanda
- Science-Based Medicine
- Trick or Treatment? - Book by Professor Edzard Ernst and Simon Singh - உலகின் முதலாவது மாற்று மருத்துவப் பேராசிரியராலும் ஒரு அறிவியல் பத்திரிகையாளராலும் எழுதப்பட்ட, மாற்று மருத்துவ முறைகளுக்கான ஆதாரங்களை அலசும் சிறந்த புத்தகம்.
- The Strange Powers of the Placebo Effect
0 comments:
Post a Comment