TIme Magazine cover - April 1967
பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளின் பாவனை முதன் முதலாக 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டது. அன்றே முதன் முதலாகத் திட்டமிட்ட பிள்ளை வளர்ப்பும் (planned parenthood) பெண்களால் தமக்கு எப்போ பிள்ளை பிறக்க வேண்டுமென்பதைத் தாமே கட்டுப்படுத்துவதும் சாத்தியமானது. இந்த இரண்டாவது
காரணத்திற்காகவே இன்னும் பல கலாச்சாரங்களிலும் சமயங்களிலும் இம்மாத்திரை பயன்படுத்துவது வரவேற்கப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, முற்றாகத் தடை கூடச் செய்யப்படுகிறது. அதே நேரம் மற்றைய எதிர் முனையில் சிறிதும் மருத்துவர்களுடன் கலந்துரையாடாமல் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டவாறு இனப்பெருக்க வயதில் இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் சில சமயம் கொடுக்கப்படுகிறது. இரண்டுமே மூட நம்பிக்கைகளின் உச்சக் கட்டங்கள். வரலாற்றையும் சமூக, கலாச்சார நோக்குகளையும் மேலும் அலச முன் இம்மாத்திரைகளுக்குப் பின்னாலிருக்கும் அறிவியலையும் அவை எவ்வாறு வேலை செய்கின்றன எனவும் பார்ப்போமா? இம்மாத்திரைகளே இன்று கருக்கட்டலைத் தடுப்பதற்கு உலகில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். 50 வருடங்களில் இந்த மாத்திரை பல பல ஆய்வுகளுக்கும் அதனூடாக பல திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டு இன்று உபயோகத்திலுள்ள மாத்திரைகள் உருவாக்கப்பட்டன.
போன பதிவில் பெண்ணியக்க நீரினதும் (estrogen) கருப்பை இயக்க நீரினதும் (progesterone) அளவுகள் எவ்வாறு ஒரு மாதத்தில் மாறுகிறதெனவும் அதனால் கருப்பை அக உறையிலும் சூலகத்திலும் நடைபெறும் மாற்றங்களைப் பார்த்தோம்.
கருத்தடை மாத்திரைகளில் செயற்கையான பெண்ணியக்க நீரும் கருப்பை இயக்க நீருமே வெவ்வேறு அளவுகளில் காணப்படுகிறது. இரு வகை கருத்தடை மாத்திரைகள் தற்போது பாவிக்கப்படுகிறது. ஒன்றில் இரு இயக்க நீர்களும் வெவ்வேறு அளவுகளில் உண்டு (combined oral contraceptive pill). மற்றையதில் கருப்பை இயக்க நீர் மட்டுமே உண்டு (progestin only contraceptive pill). இவற்றின் வேலை மேற்சொன்ன மேற்கூறிய சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சியில் மாறுபடும் இயக்கநீரின் அளவுகளைத் தடுப்பதே.
சுருக்கமாக, மாதத்தின் கிட்டத்தட்ட முதல் 11 நாட்களும் பெண்ணியக்க நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து, பின் முட்டை வெளியேறுவதற்கு சற்று முன் குறைதல் லூட்டின் ஊக்கி இயக்க நீரின் (Luteinizing Hormone; LH)எழுச்சியைத் தூண்டும். LH இன் எழுச்சி முட்டை வெளியேற்றத்திற்குக் காரணமாகிறது.
கருக்கட்டலிற்கு இந்த முட்டை வெளியேற்றம் அவசியம். அதனால் கருக்கட்டலைத் தவிர்க்க ஒரு வழி இந்த முட்டை வெளியேற்றத்தைத் தடுப்பது. தடுப்பதற்கு வழி? LH இன் எழுச்சியைத் நிறுத்துவது. Amazingly simple.
மேலுள்ள படம் சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சியின் போது இயக்க நீர்களின் அளவுகள் மாறுபடுவதைக் காட்டுகிறது. கீழுள்ள படம் கருப்பை இயக்க நீர் மட்டுமே உள்ள கருத்தடை மாத்திரை எடுக்கும் போது எவ்வாறு இயக்க நீர்கள் மாறுபடுமெனக் காட்டுகிறது.
கருத்தடை மாத்திரைகளில் உள்ள பெண்மை இயக்க நீர் முட்டை வேளியேற்றத்தை தடுக்கும். கருப்பை இயக்க நீர்,கருப்பை வாயின் திரவத்தை தடிப்புறச் செய்வதால் விந்து நீந்திச் செல்வதைக் கட்டுப்படுத்தும். கருப்பை இயக்க நீர் மட்டுமே கொண்ட மாத்திரை எடுக்கும் போது 50% ஆன நேரம் முட்டை வெளியேறும். ஆயினும் விந்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் கருக்கட்டல் நடைபெற முடியாது.
அநேகமாக முட்டை வெளியேறா விடில், மாத்திரைகள் எடுக்கும் போது ஏன் மாதவிடாய் சாதாரணமாக வருவது போல் வருகிறது? combined oral contraceptive pills இல் அநேகமான ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் வரும் பெட்டியில் 21 மாத்திரைகள் ஒரு நிறத்திலும் மற்றைய ஏழு மாத்திரைகள் வேறொரு நிறத்திலும் இருக்கும். அந்த 21 மாத்திரைகளிலுமே இயக்க நீர்கள் உண்டு. மற்றைய ஏழும் வெறும் சீனி மாத்திரைகளே. அவற்றை நீங்கள் எடுக்காமல் கூட விடலாம். உங்கள் நாளாந்தப் பழக்கத்தில் மாற்றம் வராமல் (அதனால் பின் நீங்கள் மறக்காமல் இருக்க) இருக்கவே இந்த ஏழு மாத்திரைகளும். 21 மாத்திரைகளும் முடிந்ததும் மற்றைய மாத்திரைகள் எடுக்கத் தொடங்கும் போதும் இயக்க நீர்களின் அளவு சாதாரண மாதவிடாயின் போது நடப்பதைப்போன்று குறைவதால் மாதவிடாய் ஏற்படுகிறது. ஆனால் இரத்த வெளியேற்றம், சாதாரண சுழற்சியின் போது இடம் பெறுவதைவிட அநேகமாக மிகக் குறைவாகவே இருக்கும். ஏனெனில் கருப்பை அகவுறை சாதாரண சுழற்சியில் வளார்வதை விட மிகக் குறைவாகவே வளரும். ஆனால் கருப்பை இயக்க நீர் மட்டுமே கொண்ட மாத்திரைகளில் இவ்வாறு சீனி மாத்திரைகள் இல்லை. அவற்றைத் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
இம்மாத்திரைகள் ஒழுங்காக வெலை செய்வதற்கு அதை ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும். கண்டபடி இயக்க நீர்களைக் கூட எடுப்பதால் ஒரு பிரச்சனையும் வராதா என்ற கேள்வி எழுவதில் தவறேதும் இல்லை. முட்டை வெளியேற்றத்தைத் தடுக்க எவ்வளவு குறைவானளவு இயக்கநீர்கள் தேவையோ அவ்வளவே இந்த மாத்திரகளில் உண்டு. இம்மாத்திரைகள் 50 ஆண்டுகளுக்கு முன் தாயாரிக்கும் போது பயன் படுத்திய இயக்க நீர்களின் 1.2% அளவே தற்போது தயாரிக்கப்படும் மாத்திரைகளில் உண்டு.
இப்பதிவின் தலைப்பில் இம்மாத்திரைகள் நஞ்சுமல்ல அதேநேரம் ஒரே வகை எல்லோருக்கும் உகந்ததுமல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அது ஏன் என அடுத்த பதிவில் பார்க்கலாமா?
0 comments:
Post a Comment