Thursday, January 10, 2013

மனிசனும் ஒரு குரங்கு தான் தெரியாதா?

என் மகனிற்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனின் அநேகமான கற்பனை விளையாட்டுகளில் அவனுக்கு ஏதாவது ஒரு விலங்காகவே இருக்கப் பிடிக்கும்.

Meteorite பூமிக்கு அடிக்க வரும் போது Dinosaurs ஆக, சிங்கமாக, யானையாக‌ ஆபிரிக்கக் காடுகளில், பென்குயினாக‌ அந்தாட்டிக்காவில், பல சமயம் நாயாகக் கூட நடிப்பான். அண்மையில் Rio படம் பார்த்து விட்டு அடுத்தநாள் முழுதும் Macaw வாகவே திரிந்தான். இவன் பாடு தாங்காமல் சில சமயம் நானே அவனிடம், "எனக்கு மனிச அகரனோட விளையாட விருப்பமாய் இருக்கு. வருவானா?" என்று கேட்கிறனான்.
 
இரண்டு வ‌ய‌தில் வளர்ந்து என்ன வேலை செய்யப் போறாய் என்று கேட்டால்,  நாயை ந‌ட‌த்தும் ஆளாக (dog walker) வ‌ர‌ப் போகிறேன் என்பான். இப்போ த‌னக்குத் தானே ப‌த‌வியுய‌ர்வு கொடுத்து, அந்தாட்டிக்காவில் போய் பென்குயின்க‌ளைப் பார்த்துக் கொள்ள‌ப் போகிறானாம். உனக்கு விருப்பமெனில் நீ David Attenborough ஆக‌வே வ‌ர‌லாம் என்பேன்.
 
விளையாடி, விளையாடியே கொஞ்சம் கொஞ்சம் என்னாலான மிருகங்கள் பற்றிய விளக்கங்கள், அறிவியல் உண்மைகளை அவனுக்குச் சொல்வேன். மிக‌வும் ஆர்வ‌மாக‌க் கேட்பான்.
 
போன கிழமை மிருகக் காட்சிச் சாலைக்குப் போய் நிறைய நாட்களின் பின் அங்கிருந்த மூன்று புலிகளையும் பார்த்த பின், அடுத்த நாள் முழுக்க புலி பற்றியே கற்பனை ஓடியது. அப்போது ஒரு முறை, "அம்மா எனக்குப் புலிப் பல் இருக்குத் தெரியுமா?" என்றான். உனக்கா? இருக்காதே என்று நான் சொல்ல. அவன், "நான் உண்மையான புலி இல்லை. புலிப் பல் இருக்கிற குரங்கு" என்றான். அதற்கு நான், "நீ குரங்கில்லடா, மனுசன்" என, அவனோ, "தெரியும் எனக்கு. மனிசனும் ஒரு குரங்கு தான் தெரியாதா உங்களுக்கு?" என்றான். :) Loved it.
 
அண்மையில் இணையத்தில் கண்டு பிடித்த, அவனுக்கு வாசித்துக் காட்டவிருக்கும் புத்தகம் Little Changes by Tiffany Taylor. ப‌ரிணாம‌த்தின் அடிப்ப‌டையை மிக‌ இல‌குவாக‌க் குழ‌ந்தைக‌ளுக்குச் சொல்லிக் கொடுக்க‌ உத‌வும்.

1 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புலிக்கு பிறந்தது பூனையாகுமா...?
பொருத்தமா கிடைச்சிருக்கு அனிமல் பழமொழி..:)