Monday, January 7, 2013

வன்புணர்வுக் கலாச்சாரம் 2

வரலாறு படம் வந்திருந்த நேரம், வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த ஒரு குடும்பத்தவர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த போது, "நான் பார்த்து விட்டேன், நீங்கள் பார்த்த நீங்களா?" என்று கேட்ட ஒரு பெண்ணிடம். "ஓம். நானும் பார்த்தனான். என்ன நினைக்கிறீர்கள் படத்தைப் பற்றி? பிடித்திருந்ததா?" என நான் கேட்டேன். அதற்கு "ஓம். அஜித் நன்றாக நடிச்சிருக்கிறார் தானே.
உங்களுக்குப் பிடித்திருக்கிறதா" என அவர் கேட்க. நானோ, " இல்லை. படத்தில் பல விடயங்கள் சரியில்லை. அதில் முக்கியமான ஒன்று, பாலியல் வன்புணர்வை நியாயப்படுத்தியது. அது மிகவும் பிழையானது." என்றதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் நம்பவே முடியவில்லை. "அந்தப் பெண்தானே அவரை கல்யாண மேடையில் அவமானப் படுத்தியது. அதனால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார்." இப்படிச் சொன்னது இங்கு சில வருடங்கள் பள்ளி சென்று, பின் இங்கு பல்கலைக் கழகத்தில் பொறியியல் முடித்து, வேலை செய்யும் பெண். இவர் "பாலியல் வன்புணர்வை நியாயப்படுத்துவது தவறு தான், ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படி யாரும் செய்ய மாட்டார்கள் தானே" எனச் சொல்லியிருந்தால் கூட, அதில் உண்மை இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தி அடைந்திருப்பேன். ஏன் இந்தப் பெண்ணிற்கு அக்காட்சியைப் பார்த்தவுடன் கோபம் வரவில்லை? எப்படி அப்பெண் கதாபாத்திரத்திற்கு நடந்தது நியாயமே என நினைக்கத் தோன்றியது? பாலியல் வன்முறையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நியாயப்படுத்தும் சமுகத்தில் வாழ்வதாலா?படத்தைப் பார்த்து விட்டு எனது மகனுக்கு ஒருபோதும் பரத நாட்டியம் பழக்க மாட்டேன் என்று சொன்னவர்களைக் கேட்டுள்ளேன். ஆனால் பாலியல் வன்முறையை நியாயப்படுத்தியதை யாரும் கேள்வி கேட்கவில்லை.
 
அண்மையில் வாசிக்க நேர்ந்த பதிவொன்றில், படங்களில் காட்டப்படும் dating, living together,  ஆண் பெண் சகஜமாக நட்புடன் பழகுதல் போன்றவைகளும் இந்த மாதிரிப் பாலியல் வன்முறை/வன்புணர்வுக் குற்றங்கள் நடக்கக் காரணம் ஆகின்றன என்று ஒரு பெண்ணே எழுதியிருந்தார். இவையெல்லாம் எப்படி இக்குற்றங்களுக்குக் காரணமாகும் என ஒரு கணமேனும் யோசித்தாரா எனத் தெரியவில்லை. இவற்றால் தான் இக்குற்றங்காள் நிகழ்கின்றன எனில், ஏன் சிறுமிகளுக்கும் வயதான பெண்களுக்கும் இவ்வாறு நடக்கிறது? ஆண் பெண் சகஜமாக நட்புடன் பழகுவது நல்லது தானே. அதனால் பெண்ணைப் போகப் பொருளாகவே கற்றுத் தரும் கலாச்சாரத்தையும் மீறி அவளும் தன்னைப் போல் ஒரு மனிதப் பிறவியே என அறிய ஆணுக்கு வாய்ப்புக் கிடைக்குமே.
 
தவிர பாலியல் வன்முறை/புணர்விற்கும் dating, living together க்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன என்று தெரியுமா? உடன்பாடு/சம்மதம். Dating/living together இல் அநேகமாக ஆணும் பெண்ணும் வயது வந்தவர்களாகவும் அவர்களுக்குள் என்ன நடக்கிறதோ அது இருவரின் சம்மதத்துடனுமே நடக்கும். It is somewhat the opposite of violence/rape. இவ்வாழ்க்கை முறையில் கூட வன்முறை நடக்கலாம்/நடக்கிறது. ஆனால் அதன் அடிப்படி இந்த வாழ்க்கை முறை அல்ல. இல்லையென்கிறீர்களா? நான் இங்கு இந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவோ/எதிர்க்கவோ இல்லை, ஆனால் இத்தகைய வாழ்க்கை முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் எந்தவித உடன் தொடர்பும் இல்லை.
 
முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல், dating, living together (இவையெல்லாம் எல்லாத் தமிழ்ப்படங்களிலும் இல்லை),  ஆண் பெண் சகஜமாக நட்புடன் பழகுதல் போன்றவற்றைக் காரணம் காட்டியவருக்கு, கிட்டத்தட்ட எல்லாத் தமிழ்ப்படங்களிலும் நியாயப்படுத்தப்படும், வேடிக்கையானதாக, ரசிக்க வேண்டியவை போல் காட்டப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஏன் காரணமாகச் சொல்லத் தோன்றவில்லை?

சில ஹிந்திப்படங்களை பரீட்சித்த‌ ஒரு ஆய்வில்* அவர்கள் கண்டது, கடுமையான பாலியல் வன்முறைகள் (வன்புணர்வு, கொலை) ஆகியவை அநேகமாக வில்லன்களால் செய்யப்பட்டு கடுமையானதாகவும் குற்றமாகவும் காட்டப்படும் அதே சமயம் இப்படங்களில் அநேகமாக மிதமான பாலியல் வன்முறைகள் (anything other than rape and murder, includes eve teasing, domestic violence, sexual harassment, etc) வேடிக்கையானவைகளாகவும், ரசிக்கக் கூடியவைகளாவும், காதல் அன்பின் சாதாரண வெளிப்பாடுகளாகவும் காட்டப்பட்டன. இவ்வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களாக அநேகமாகப் பெண் கதாபாத்திரங்களே இருப்பர். படத்தின் ஹீரோவே அநேகமாக மிதமான பாலியல் வன்முறை செய்பவன், பின் பாதிக்கப்பட்டவள் காதல் செய்வதும் அவனையே. ஆச்சரியமாக இருக்கிறதா?
 
தமிழ்ப்படங்களை ஆய்வுக்குட்படுதினாலும் கிட்டத்தட்ட இம்முடிவுகளே வரும். அநேகமான தமிழ்ப்படங்களில் பாலியல் வன்முறைகள் வேடிக்கையானவைகளாகவும் ரசிக்கப்பட வேண்டியவைகளாகவுமே காட்டப்படுகின்றன. நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா எனக் கேட்டால் பாலியல் வன்முறை செய்வதையும் நீ எல்லாம் ஒரு பொம்பிளையா எனக் கேட்டால் கூனிக்குருகி காதலில் விழுவதையுமே நியாயப்படுத்துகின்றன. ஏன் பல காட்சிகளும் பாடல்களும் பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றன. இப்போ வெளிவரும் பிரபல ஹீரோக்கள் நடிக்கும் அநேகமான படங்களை உதாரணமாகச் சொல்லலாம். எம்மில் பலர் குழந்தைகளையும் சிறுவர்களையும் தமிழ்ப்படங்கள் பார்க்க ஏன் அனுமதிக்கிறார்கள்? இங்கே பலர் வீட்டில் தொடர்ந்து தமிழ்த் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நாளில் குறைந்தது இரு படங்களாவது போடுவார்கள் என்று கேள்வி. இவ்வாறு பல படங்கள் பார்ப்பதால் மக்கள் (குறிப்பாக இளம் ஆண்கள்) பாலியல் வன்முறைகளுக்கு ஒரு வகையில் உணர்ச்சி அற்றவர்களாக வருவதோடு, அதை நியாயமாக்கவும், பாலியல் வன்புணர்வு மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
 
*Ramasubramanian S and Oliver MB. Portrayals of sexual violence in popular hindi films, 1997-99 (pdf)

Other related articles/posts
Srivastva SK and Agarwal S. Do visual media contributes to violence against women? (pdf)

Hariharan N. The Meek Lambs of Tamil Cinema

Sexism in the Indian cinematic nation

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெபரென்ஸ் எல்லாம் வெளியூர்க்காரங்களுக்குத்தான் வேணும்.. நீங்க சொல்றதைப்போலவே எல்லாப்படமும் பார்த்து பார்த்து மரத்துப்போய்டிச்சுங்க.. அது தான் சரின்னு அந்தம்மா சொன்ன லெவல்க்கு மனப்பாங்கு மாறிடுச்சு..

வருண் said...

நீங்க வன்புணர்வுக்கு கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருப்பதாக சொல்வது என்னால் ஏற்றுக்க முடியாது. அயல்நாட்டில்(அமெரிக்காவில்), வெள்லைக்காரங்க, கருப்பர்கள், லட்டீனொக்களில் இதுபோல் சின்னக் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதும் மிக அதிகமே என்பது எனது புரிதல்.

-------------
மேலும் டேட்டிங் செய்து ப்ரேக் அப் செய்தவங்க, அவங்க மாஜி பார்ட்னெரை வன்புணர்வு செய்வதும் ரொம்பவே நடக்கத்தான் செய்யுது.

டேட்டிங், லிவிங் டுகெதெர் க்லாச்சாரத்தில் இதுபோல் நடப்பதில்லை, மனிதன் பண்பட்டுவிட்டான் என்பதுபோல் கருத்தை நீங்க முன்வைப்பதுபோல் எனக்குத் தோணுது. அது உண்மை கெடையாது! நம்ம ஊரில் மட்டுமல்லாமல் அங்கும் (பிற க்லாச்சாரங்களில்) பல உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன என்பதே நான் அறிந்தது.

வேகநரி said...

ஆய்வுகளின் முடிவுகள் உண்மையை தான் சொல்கின்றன. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை ஏற்று கொள்வதும்,பெண்கள் தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லும் மூடநம்பிக்கையாளர்கள் அதிகம் உள்ளார்கள். பிற்போக்குதனத்தில் ஊறியபெண்கள் சிலரே உனது உடையால் தான் ஆணுக்கு உணர்ச்சி வந்துவிட்டது என்று பெண்களுக்கு பாடம் எடுக்கும் கொடுமையும் நடக்கிறது.

Anna said...

திரு வருண்,

டேட்டிங், லிவிங் டுகெதெர் கலாச்சாரத்தில் இதுபோல் நடப்பதில்லை என்று நான் சொல்லவில்லை. நடக்கிறது, ஆனால் அதன் அடிப்படை அந்த வாழ்வியல் இல்லை என்று தான் சொன்னேன்.

எங்கும் பாலியல் வன்முறையின் அடிப்படை பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பது, ஆண்/பெண் சமத்துவம் இன்மை, பெண்ணை மனிதப் பிறவியாகப் பார்க்காமை, தனது ஆதிக்கத்தைக் காட்ட முற்படுவது, அடிப்படைப் பாலியல் கல்வி இல்லாமை என்று பலதைச் சொல்லலாம். அது பல மேற்கத்திய நாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவில் நிறையவே உண்டு. நான் மேற் சொன்ன காரணங்கள் எல்லாம் ஆணாதிக்கச் சமுதாயத்தில் மிகவும் காணப்படுகிறது. அதனால் எமது கலாச்சாரத்திற்கும் பாலியல் வன்முறைக்கும் நிறையவே தொடர்புண்டு.


நன்றி.

Anna said...

அப்படிப் பழக்கப்பட்டுப் போன மனப்பான்மை நிச்சயம் மாற வேண்டும் கயல். நன்றி.

Anna said...

பெண்களையும் அவ்வாறு சொல்லிச் சொல்லியே மூளைச்சலவை செய்து, யோசிக்க விடாமல், அதே ஆணாதிக்கக் கலாச்சாரத்தில் வளர்ப்பது மட்டுமன்றி இத்தனை மூடநம்பிக்கைகளையும் அநேகமாக அவளின் மூலமாகவே அடுத்த தலைமுறைக்கும் பரப்ப வைக்கிறார்கள்.

தங்கள் கருத்துக்கு நன்றி வேகநரி.

Deepa said...

சிறப்பான பதிவு அன்னா!

"நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா எனக் கேட்டால் பாலியல் வன்முறை செய்வதையும் நீ எல்லாம் ஒரு பொம்பிளையா எனக் கேட்டால் கூனிக்குருகி காதலில் விழுவதையுமே நியாயப்படுத்துகின்றன. " Bravo!! :-)

Anna said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தீபா!

நம்பள்கி said...

வருண் சொல்வது மேலோட்டமாகப் பார்த்தல்...சரி என்று தோன்றும். உண்மையில் இது தவறான புரிதல்...

இது ANALYST இடுகை; மேலும், எனது பின்னூட்டம் பெரியதாக இருக்கும் எனபதால், ஒரு தனி இடுகை என் பதிவில் வரும்...அப்போ பேசுவோம் வருண் அவர்களே

[[நீங்க வன்புணர்வுக்கு கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருப்பதாக சொல்வது என்னால் ஏற்றுக்க முடியாது. அயல்நாட்டில்(அமெரிக்காவில்), வெள்லைக்காரங்க, கருப்பர்கள், லட்டீனொக்களில் இதுபோல் சின்னக் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதும் மிக அதிகமே என்பது எனது புரிதல்.]]