Tuesday, January 1, 2013

வன்புணர்வுக் கலாச்சாரம் 1

டெல்லிப் பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தின் மூலம் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையைப் பற்றி அநேகமாக பிழையான கருத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும் சமூகம் கொஞ்சமாவது இதைப் பற்றி அறிவைப்பெற்றால் நன்றாக இருக்கும்.

தனி ஒரு பதிவில் இவற்றை எல்லாம் அலசி விட முடியாது. ஆனால் டெல்லி சம்பவம் நடந்த பின் அவளை யார் இரவு 10 மணிக்கு வெளியில் விட்டது/ 10 மணிக்கு வெளியில் என்ன செய்தாள் என்று முதலில் கேட்டவர்களுக்கு இது.
அநேகமான பாலியல் வன்முறைகள் ஒரு பெண்ணிற்கு நன்கு தெரிந்தவர்களாலே, அநேகமாக அவளின் அன்றாட வாழ்வில் இருப்பவர்களாலேயே நடக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறைகள்/வன்புணர்வுகள் ஒரு குற்றமாகவே கருதப்படுவதில்லை. அநேகமான போர்ச்சூழலில் பல்லாயிரக்காணக்கான பெண்களுக்கு இக்கொடூரங்கள் நடக்கின்றன. ஒரு பொய்யை எத்தனை தடவை திரும்பத் திரும்பச் சொன்னாலும் அது உண்மை ஆகிவிடாது. இவ்வன்முறைகள் நடப்பதற்கு நேரம்,காலம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட வயது கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது. பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கும் வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அநேகமான சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. அதற்கென்ன பதில்? அவள் என்ன உடுத்தியிருந்தாளில் தொடங்கி, அவளின் வாழ்க்கை முறை, அவள் எங்கு சென்றாள், யாருடன் சென்றாள், எந்நேரத்தில் சென்றாள், எப்படி நடந்தாள் என்று தொடர்ச்சியாக அவள் எப்படி இவ்வன்முறையைத் தானே தன்மீது கொண்டு வந்தாள் என்றே யோசித்து வன்முறை செய்தவனின் குற்றத்தைக் குறைக்கவே வழிகாணுவர்.  மூச்சுக்கு முன்னூறு தடவை நாம் மெத்தப் படித்த மேதாவிகள் என்று அறைகூவும் பெண்கள் கூட இதையே தான் செய்கிறார்கள்.

எனது 23 வயதில் முதன் முதலில் குடும்பத்தை விட்டு வேறு நாட்டிற்கு முனைவர் பட்டப் படிப்பிற்குச் சென்றேன். அந்நாட்டில் தனிய வசித்தது மட்டுமன்றி சில பரிசோதனைகள் செய்வதற்கு எமது ஆய்வுகூடத்தில் அந்நேரத்தில் அவ்வசதிகள் இல்லாதபடியால், எத்தனையோ நாட்கள் நாள் முழுவதும் கிட்டத்தட்ட 40-50 நிமிட ரயில் மற்றும் tram பயண தூரத்தில் இருக்கும் இன்னொரு ஆய்வுகூடத்திலேயே பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தது. முடிந்து திரும்ப ரயில் ஏற இரவு 8-8.30 ஆகும். அதுவும் ரயில் நிலையத்திற்கு 10 நிமிடங்கள் நடந்து பின் ரயில் எடுத்து 40 நிமிடங்கள் பயணித்து, பின் பேருந்து பிடித்து வீடு வந்து சேர இரவு 9-9.30 ஆகும். அப்போது எதாவது விபரீதமாக நடந்திருப்பின் அதில் ஏதாவது ஒரு சிறு சதவீதமாவது என் பொறுப்பாகுமா?

ஆனால் அதற்கு 12 வருடங்களுக்கு முன் நடந்தது. எனக்கு 11 1/2 வயதிருக்கையில். Abu Dhabi யில் ஒரு 5 மாதங்கள் தங்கியிருந்தோம். அப்போது ஒரு நாள் நாம் இருக்கும் apartment இருந்த கட்டிடத்தின் பக்கத்தில் இருக்கும் இன்னொரு கட்டிடத்தில் இருக்கும் எமது குடும்ப நண்பரின் வீட்டிற்கு எதற்கோ செல்லும் போது. நான் lift இல் நுழைந்து போக வேண்டிய மாடி இலக்கத்தை அழுத்தியதும், அவசரமாக உள்ளே வந்தவன். சில நொடிகளுக்குப் பின் sexually assaulted me. நான் போக வேண்டிய மாடி வந்ததும், lift  திறக்க எத்தனிக்க முன், அது மூடும் பட்டனை அழுத்தி வேறு மாடி இலக்கங்களை அழுத்தினான்.  I stood there incapable of doing anything while some creep violeted me in the most personal way. அதற்கு மேலும் போயிருக்கலாம். கண் முழுக்கக் கண்ணீர் முட்டிக் கொண்டு கன்னத்தில் வழிய, அப்படியே விட்டு விட்டு சென்று விட்டான். அப்போது யாரிடமும் சொன்னதில்லை. ஏனென்று இன்னும் தெரியவில்லை. முதன் முதலில் சொன்னது, கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து என் அந்நேரத்தில் வருங்காலத் துணைவனிடம்.

இதே மாதிரி குறைந்தளவு ஒரு நிகழ்வாவது அநேகமான பெண்களுக்கு நடந்திருக்கும். எத்தனையோ பெண்களுக்கு இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்திருக்கும். டெல்லி சம்பவம் போல் இதையும் விட எவ்வளவோ மோசமான நிகழ்வுகள் எத்தனையோ ஆயிரம் பெண்களுக்கு நடந்துள்ளது/நடக்கிறது. பாலியல் வன்முறை இயல்பென்று ஏற்றுக்கொள்ளும், அவற்றிற்கு எப்போதும் பாதிக்கப்பட்டவளையே எவ்வகையிலாவது குற்றம் சொல்லும் சமூகத்தில் இவற்றை தமக்கு நடந்ததை முன்வந்து சொல்பவர்கள் மிகக் குறைவு. சொன்னால், என்ன உடுத்தியிருந்தாய்/ யாருடன் இருந்தாய்/ எப்படி நடந்தாய்/ எந்நேரம் நடந்தாய்/ எங்கு சென்றாய்/ ஏன் சென்றாய்/ என்ன கதைத்தாய்/ இரவில் சென்றாயா/ தெரியாத இடத்திற்குச் சென்றாயா/ என்ன சூழலிற்குச் சென்றாய்/ யாராவது ஆணுடன் சென்றாயா/ தெரியாதவன் வீட்டிற்கு வந்து கதவு தட்ட ஏன் திற‌ந்தாய்/ திறக்கு முன் யாரெனப் பார்த்தாயா/ உன் நண்பர்கள் யார்/ உதட்டுச் சாயம் பூசியிருந்தாயா/ ஏன் யாரையும் துணைக்குக் கொண்டு வரவில்லை/ ஏன் எப்பொதும் எச்சரிக்கையாக இருக்கவில்லை/ சமுதாயம் சொல்லும்/சொல்லாத 1008 விதிகளையும் பின்பற்றி எப்போதும் எச்சரிக்கையாக விழிப்பாக இருக்காவிடில் பாலியல் வன்முறை/புணர்வு நடந்தால் அது உன் குற்றமே என்று சொல்லும் சமூகத்தை எப்படி மாற்றுவது?

முனைவர் பட்டப் படிப்புத் தொடங்கி இரு வருடங்களிற்குப் பின் நான் சென்ற‌ முதல் சர்வதேசக் கருத்தரங்கு அமெரிக்காவில் Los Angels இல் இடம்பெற்றது.கருத்தரங்கு நடப்பதிற்கு ஒரு 5-6 நாட்கள் முன்பாகவே சென்று அங்கு சில ஆய்வுகூடங்களுக்குச் சென்று எனது ஆய்வு பற்றிச் சொல்தோடு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என முடிவு செய்தேன். போவதற்குப் பயணச்செலவிற்கு எனக்குக் கிடைத்த student travel award மூலம் ஓரளவு சமாளிக்கலாம் என்றாலும் LA இல் ஜந்தாறு நாட்கள் நிற்பது, இடையில் San Fransisco போவது என்ற எனது பயண ஒழுங்குகளுக்கும் பணம் தேவையாதலால் இயலுமானளவு மலிவான விலையிலேயே விமானச்சீட்டுகளும் நிற்கும் இடங்களும் பார்த்தேன். அதனால் நிற்க முடிவு செய்தது ஒரு back packers இல். அதுவரைக்கும் ஒரு backpackers இலும் நின்றதில்லை. விலையும் மற்ற இடங்களை விடக் குறைவாக இருந்தது. அங்கும் பிரேத்தியேக அறை இல்லை, பல பேர் தங்கக் கூடிய dometry ஏ பதிவு செய்தேன்.
விமானம் LA போய்ச் சேர்ந்தது இரவு 10 மணியளவில் பின் அங்கிருந்து shuttle bus எடுக்க இரவு 11-11.30 ஆகிவிட்டது. shuttle bus இல் எனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் நான் தனியவே பயணம் செய்கிறேன், அதுவும் இந்நேரத்தில் போய் back packers இல் நிற்கப் போகிறேன் என்றதை அறிந்ததும் மிகவும் அதிர்ந்து, "உனக்கு இங்கு வேறு யாரும் தெரிந்தோர் இல்லையா? உனக்காக நான் பயப் படுகிறேன். பாதுகாப்பாக இரு. என்று ஆளுக்காள் சொல்ல கொஞ்சம் பயம் வந்தது. அங்கு போய் இறங்கியதும் அங்கிருந்த நிறைய ஆட்களைப் பார்த்ததும் பயம் இன்னும் கொஞ்சம் கூடியது. எனக்காக ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றது இன்னும் கொஞ்சம் அதிர்ந்தேன். ஏனெனில் அங்கு இரண்டு மூன்று தட்டுகளைக் கொண்ட bunk beds இருந்தது.நானும் இன்னொருவரும் பெண்கள், மற்றைய நால்வரும் ஆண்கள். இந்தறைக்குள் எப்படி ஜந்தாறு நாட்கள் தங்குவது என்று யோசித்து, shuttle bus இல் ஆட்கள் சொன்னதால் இன்னும் பயம் அதிகமாகி, "காசைப் பார்த்து, இடம் எப்படி இருக்கும் என்று உருப்படியாக யோசிக்காமல் விட்டு விட்டேனே" என்று உடனே back packers நடத்துவோரிடம் சென்று ஏதாவது தனி அறை இருக்கிறதா எனக் கேட்க, அவர்களோ "yes. but none are availbale right now." என்றார்கள். வேறு வழியில்லை. அங்கு நின்று தான் ஆக வேண்டும். முதல் நாள் இரவு பயத்தில் நித்திரையே வரவில்லை. நின்ற நாட்களில் இரவு படுக்க மட்டும் தான் அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. என்னவும் நடந்திருக்கலாம். But they all minded their own business. ஒரு விவரீதமும் நடக்கவில்லை. The point is அப்படியே ஏதும் நடந்திருப்பினும் அது எனது பிழையாக நிச்சயம் இருந்திருக்காது.


இதே மாதிரி அநேகமாகத் தனியவே இன்றளவிலும் பல வேலைகள் செய்கிறேன். பல இடங்களிற்குச் செல்கிறேன். அண்மையில் ஒரு தமிழ்ப் பெண்ணிற்கு பிரசவ வலி வந்து மருத்துவனமைக்குக் கொண்டு சென்ற போது, அவர்களுக்கு ஆங்கிலம் பெரிதாகத் தெரியாது என்பதால் கூட உதவிக்குச் சென்றிருந்தேன். மருத்துவமனைக்குப் பக்கத்திலேயே எனது வேலைத் தளம் இருப்பதால், எனது வேலைத் தள car park இலேயெ எனது வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்றேன். குழந்தை பிறந்து, செய்யவேண்டியதெல்லாம் செய்துவிட்டு வீட்டிற்குப் போக வெளிக்கிடுகையில் நேரம் அதிகாலை 3.30-4 மணி. தனியவே நடந்து வந்து வாகனம் எடுத்தேன்.
பல நாட்களில் குழந்தைகளைத் தூங்க வைத்ததும் எனக்கு வேலைகள்/பரிசோதனைகள் இருப்பின் இரவு வேலைக்கு வருவேன். இவ்வாறு எனது அன்றாட வாழ்வில் நான் தனியாகவே பல வேலைகள் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் என்ன ஒரு personal security guard ஆ வேலைக்கு வைத்திருப்பது? ஆனாலும் ஒரு பெண்ணாக எனது நடமாட்டம் ஓரளவிற்கு ஒரு rape shedule இன் படியே இருக்கும். தனியே இரவில் எங்காவது நடக்கிறேன் எனில், எனது சாவியை எப்போது கையிலேயே வைத்திருப்பது, இரவில் எங்காவது ஒரு park இனூடு சென்றால் குறைய நேரம் எடுப்பினும் அவ்வாறு செல்லாமல் நீண்ட தூரம் எடுத்துச் செல்வது, அப்படியே செல்ல வேண்டும் என்றால், சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டு யாராவது சந்தேகமாக இருக்கிறார்களா? could someone be a potential rapist here? எனக் கணித்த பின்னெ செல்வது என்று சில. ஆனால் அநேகமாக வன்முறை செய்பவன், எழுதி முதுகில் ஒட்டிக்கொண்டு செய்ய மாட்டான். அவன் செய்த பின்பே எமக்குத் தெரியும் அவனால் செய்ய முடியும் என்று.இவையெல்லாம் சிறு வயதிலிருந்தே செய்வதால் அதுவே சாதாரணமாகிவிட்டது. போர்ச் சூழலில் இருந்து வந்தவர்கள் இதையும் விட முன்னெச்சரிக்கையாக இருப்பார்காள். ஆனால் யோசித்துப் பார்த்தால் விளங்கும் எந்தளவு இயல்பாகப் பாலியல் வன்முறைக் கலாச்சாரத்தில் வாழ்கிறோம் என. 
நாம் எங்கேயும் எப்போதும் மற்றவர்களுக்குத் தீங்கிளைக்காமல் பாதுகாப்பாகச் செல்வதற்கு எமக்கு உரிமை ஏன் இல்லை?  Shouldn't my right to walk safely anywhere, anytime take more precedence over some else's right to assault me? SHOULDN'T IT?

பாலியல் வன்முறைக்கு எப்போதும் முழு முதற்காரணம் வன்முறை செய்தவனே தவிர பாதிக்கப்பட்டவள் ஒரு போதும் இல்லை.

9 comments:

பழமைபேசி said...

தங்களுடைய வினாக்கள் நியாயமானவையே. நாம் நினைக்கும்படியான உலகம் இருந்து விட்டால் மிகவும் அழகாயும் என்றும் இனிமையாவும்தான் இருக்கும்.

ஆனால் அது அப்படி இருக்கவில்லை எனத் தெரிந்த பிறகு, நான் எப்படி என் மனைவியையோ, மகளையோ பின்னேர இரவில் தனித்து விட முடியும்? ”இயன்ற வரை” அதற்கான வாய்ப்புகளைக் குறைத்திடவே முயல்வேன்.

இடம் பெறுகிற குற்றங்களுக்குத் தீர்வாக நான் இதை முன்மொழிந்தாலோ, அல்லது பரிந்துரை செய்தாலோ அது நியாயமான ஒன்றல்ல.

ஆனால், ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக அதை மேற்கொள்ளுங்கள் என என் வீட்டாருக்கோ, உங்களைப் போன்ற நண்பர்களுக்கோ சொல்லத்தான் செய்வேன். நான் ஒரு எளியன். அவர்கள் செல்லும் இடத்துக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுக்க என்னாலும் இயலாதல்லவா??

Unknown said...

//பாலியல் வன்முறைக்கு எப்போதும் முழு முதற்காரணம் வன்முறை செய்தவனே தவிர பாதிக்கப்பட்டவள் ஒரு போதும் இல்லை.//

இது சத்தியம் நண்பரே!

வேகநரி said...

சிறந்த கட்டுரை. நீங்க சொன்னது போல் பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கும் வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நல்ல நாடுகளில் இரவு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு பெண் தன்னம் தனியாக ரெயின் பஸ்சில் செல்வதை சாதரணமாக காணலாம். ஆனால் பெண்கள் முகத்தை மூடிவைத்திருக்கும் நாடுகளிலேயே பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பெருந் தொகையாக நடைபெறுகிறது. இத்தகையநாடுகளில் பெண் தனக்கு நடந்த கொடுமையை சொல்ல முற்பட்டால் பெண்ணே தண்டிக்கபடும் அபாயமும் உள்ளது.

J.P Josephine Baba said...

அருமையான பதிவு. நீங்கள் கூறும் கருத்துக்களும் முற்றிலும் உண்மை.

Anonymous said...

//1008 விதிகளையும் பின்பற்றி எப்போதும் எச்சரிக்கையாக விழிப்பாக இருக்காவிடில் பாலியல் வன்முறை/புணர்வு நடந்தால் அது உன் குற்றமே என்று சொல்லும் சமூகத்தை எப்படி மாற்றுவது?//

Excellent Words.
அருமையாக கூறினீர்கள்.

தருமி said...

நல்ல ஆய்வுக் கட்டுரை. ஆனாலும் வாசிக்கும்போதே நல்ல வேளை நான் ஆணாகப் பிறந்தேன் என்ற ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லையே!

Thekkikattan|தெகா said...

அவசியமான கட்டுரைத் தொடர்... தொடர்ந்து எழுதுங்க இந்த சீரிஸ்ல. இதனை ப்ளஸுக்கும் கொண்டு சென்று பகிர்ந்துள்ளேன்.

Anna said...

எல்லோருடைய கருத்துகளுக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நேரம் கிடைக்கவில்லை.

திரு. பழமைபேசி, இதைப்பற்றி மேலும் கதைக்கலாம். முயன்றால் நாளை என் கருத்துகளை எழுதுகிறேன். நன்றி.

ஓலை said...

அமெரிக்காவிலும் கனடாவிலும் வேற்று நிறத்தவர்களை பாலியல் தொல்லை செய்ய மாட்டார்கள். அதை வைத்து முழுவதும் சொல்ல முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்த அதே நிறத்தினரைக் கேட்க வேண்டும்.

ஒன்று உறுதி. அமெரிக்காவிலும் கனடாவிலும் இரவில் பெண்கள் நடமாட முடியும். இங்கும் ஓரிரு இடங்களில் இரவில தனியாகவோ, சில சமயம் பகலிலும் ஆண்கள் கூட செல்லாதீர்கள் என்று சொல்வார்கள். அது வழிப்பறி சம்பந்தப் பட்டது.

டெல்லி தலை நகர் பகுதியில் நடப்புது முற்றிலும் கண்டிக்கத் தக்கது. எண்பது தொன்னுருகளிலேயே சாலை ஓரத்தில் நிற்பவர்களை eve -டீசிங் செய்யும் கொடுமை நேரில் பார்க்கலாம். ஓடும் பஸ்ஸில் படியில் நிற்பவன் செய்வது அருவருக்கத் தக்க வகையில் இருக்கும். நான் இருந்த ஒரு வாரத்தில் பார்த்தது.

ஒரு கடுமையான சம்பவத்தின் மூலம் இந்த அளவுக்கு மக்கள் அங்கு வெளியே வந்து போராடியிருக்கார்கள் என்று பார்க்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.