Thursday, September 6, 2012

Endometriosis - இடமகல் கருப்பை அகப்படலம்


இப்பதிவில் குறிப்பிட்டிருப்பது போல், கரு ஊடுருவி விருத்தியடைவதற்கேற்றவாறு விருத்தியடைந்திருக்கும் திசுவே கருப்பை அகவுறை (endometrium). கருவை எதிர்பார்த்தே ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, விருத்தியடைந்து, பின் கருக்கட்டல் நடைபெறாவிடின், உதிர்வதே மாதவிடாயாக ஒவ்வொரு மாதமும் வெளியேறுகின்றது.

நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த காலங்களில், "நீங்கள் என்னத்தைப்பற்றி ஆய்வு செய்கிறீர்கள்" எனக் கேட்பவர்களிடம் சுருக்கமாக endometrium என்ற திசுவில் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றி விளக்க முற்பட முன் சில பெண்கள், "ஒ எனக்கு அது என்னவென்று தெரியுமே. எனக்கும் இருக்கு", எனச் சொல்லியுள்ளார்கள். முதலில் எனக்குக் குழப்பமாக, "உங்களுக்குமா? எல்லாப் பெண்களுக்கும் (all cis women, to be exact) endometrium இருக்கே", என்று சொன்ன பின்னே விளங்கியது அவர்கள் endometriosis ஜப்பற்றிச் சொல்கிறார்கள் என்று.

அப்போ இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) என்றால் என்ன? பெயரே சொல்வது போல், கருப்பையை விட்டு அகன்று வேறிடங்களில் வளரும் கருப்பை அகவுறையையே endometriosis என்பர். சூல‌க‌ங்க‌ள், இடுப்ப‌றையின் ப‌க்க‌ச் சுவ‌ர்க‌ள், ப‌லோப்பிய‌ன் குழாய்க‌ள் என‌ இந்த‌த் திசுவிற்கு இடுப்ப‌றையில் எங்கெல்லாம் ப‌டிந்து வ‌ள‌ர‌ இட‌மிருக்கிற‌தோ அங்கெல்லாம் இவ்வ‌ள‌ர்ச்சி இட‌ம் பெற‌லாம். க‌ருப்பையினுள்ளே இருக்கும் அக‌ப்ப‌ட‌ல‌த்தில் மாதா மாதம் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ளிற்கு ஒத்த‌வாறு வெளியில் வ‌ள‌ரும் க‌ருப்பை அக‌வுறையிலும் இட‌ம் பெறும். மாதவிடாய் நேரங்களில் அடிவ‌யிற்றில், அங்க‌ங்க‌ளில் இர‌த்த‌ப்போக்கு, அழ‌ற்சி (inflammation), இரத்தம் உள்ள கட்டிகள் இருப்பது மாதிரியான தோற்றம், வயிறு அங்கங்களில் வடுக்கள் போன்றன இதன் விளைவுகளாகும்.

 
 மாதவிடாயின் போது சிதைவடையும் கருப்பை அகவுறையின் சில செல்கள், சிறிய திசுப் பகுதிகள் கருப்பையின் மேற்புறமாகச் சென்று பலோப்பியன் குழாய்களினூடாக இடுப்பறையை அடைவதையே Endometriosis வருவதற்கு முக்கிய காரணமாகக் கூறுவர். இதை retrograde menstruation எனக் கூறுவர். ஆயினும் இந்த retrograde menstruation அநேகமாக மாதவிடாய் வரும் எல்லாப் பெண்களிலும் நடப்பதே. அதனால் ஏன் குறிப்பிட்ட சில பெண்களுக்கு மட்டும் அது endometriosis ஆக விருத்தியடைகிறதென்பது இன்னும் ஒரு புதிராகவே இருக்கிறது.

Endometriosis ஒரு சில சதவீதம் மரபு வழியாகக் கடத்தப்படுகிறது. முதல் நிலை உறவினர்களிடையே அதிகம் காணப்படும் (அம்மா, மகள், சகோதரி).ஆயினும் endometriosis வருவதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. அநேகமாக பல மரபணுக்களுக்கும் சூழலிற்கும் இடையிலான இடைவினைகளோடு கூடிய பல்வேறு காரணங்களால் இந்நோய் விருத்தியடைகிறது எனக் கருதப்படுகிறது.
 
Endometriosis மிகவும் சிக்கலான, வேதனை நிறைந்த நோயாகும். இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்களை வலுவீனப்படுத்தும் காரணிகளில் முன்னிலையில் நிற்பது இந்த நோயே. சமூகத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதமான பெண்களுக்கு இந்நோய் இருக்கும் எனக் கொண்டாலும்,உண்மையில் இதனையும் விட மிகக் கூடியளவு பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் அநேகமான இளம் பெண்களுக்கு/சிறுமியருக்கு இந்நோய் இருக்கிறதென்றே தெரியாது. அதோடு கருத்தரிக்க இயலாமை, நீண்ட கால இடுப்பு வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 சதவீதமானொருக்கு இந்நோய் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.சிகிச்சையின்றி இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கைத் தரம் (quality of life) மிகவும் குறையும். இந்நோயின் மூலம் மனச்சோர்வு (depression), வேலை செய்ய இயலாமை (inability to work), தாம்பத்திய உறவில் பங்குபற்ற முடியாமை (sexual dysfunciton), கருத்தரிப்பதில் பிரச்சனைகள் (sub fertility) எனப் பல பாதகமான விளவுகளுக்கு ஆளாகின்றனர்.
 
துரதிஸ்டவசமாக பல‌ பிரச்சனைகளால்/நோய்களால் சமூகத்திற்கு எந்தளவு பாதிப்பென்பதைப் பண அளவால் சொன்னால் தான் அதன் முக்கியத்துவம் விளங்கும் நிலை. அமெரிக்காவில் Endometriosis இன் சிகிச்சையாலும்  அதன் மறைமுக விளைவுகளான‌ பெண்கள் வேலை செய்ய இயலாமை போன்றவற்றால் வரும் செலவு வருடத்திற்கு கிட்டத்தட்ட 22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என‌ அண்மையில் வெளியிடப்பட்ட இரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Endometriosis இன் மறைமுக விளைவுகளால் மட்டுமே நியூசிலாந்தில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்கள் இழக்கப்படுகின்றதெனவும் கணித்துள்ளார்கள்.
 
Endometriosis நோயின் பல அறிகுறிகள் வேறு பல நோய்களின் அறிகுறிகளுக்கு ஒத்து இருப்பதாலும் (உதாரணம் irritable bowel syndrome), மாதவிடாயின் போது மிகவும் வலிப்பது சாதாரணம் என்று சமூகத்தில் பலர் நினைப்பதாலும் தமக்கோ தம் மகள்மாருக்கோ இந்நோய் இருக்கலாமா என்றுகூடப் பலர் யோசித்தும் பார்ப்பதில்லை. ஏன் பல இடங்களில் மருத்துவர்களும் gynaecologists உம் கூட யோசிப்பதில்லை. இதனால் மேலை நாடுகளிலேயே இந்நோயைக் கண்டறியக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகலாம். இக்கால தாமதத்தால் நோயின் கடுமை கூடுகிறது.

அண்மையில் ஒருவருடன் எனது ஆய்வுகளைப் பற்றிக் கதைக்கையில் இந்நோயைப் பற்றிச் சொன்னவுடன் அவர் சொன்னது  இது. தனது குடும்பத்தில் தனக்கும் தன் தங்கைக்கும் இந்நோய் இருக்கு. தங்கைக்கு முதலில் இந்நோயைச் சரியாகக் கண்டு பிடிக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடித்த போது மிகவும் கால தாமதமாகிவிட்டது. இந்நோயால் அவரின் பலோப்பியன் குழாய்களும் சூலகங்களும் மிகவும் பாதிப்படைந்து இருந்ததால் அவற்றை அவற்றை அகற்ற வேண்டியதாகிவிட்டது. அவர் தற்போது IVF இன் மூலம் குழந்தை பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பல பெண்களின் கதைகள் உண்டு.
 
இந்நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்திற்கு இன்னொரு காரணம். இந்நோய் இருக்கிறதெனக் நிச்சயமாகக் கண்டறிவதற்கான ஒரே வழி ஊடறுவைச் சிகிச்சையான laproscopy செய்வதன் மூலமே. இதன் படி வயிற்றில் சிறிய துளைகள் இட்டு,  அதனூடு சிறிய கமெராவை இடுப்பறைக்குள் செலுத்தி, அங்கெங்காவது கருப்பை அகவுறை படிந்து வளர்கிறதா என்று பார்ப்பதன் மூலமே இந்நோயைக் கண்டறியலாம். இது மிகவும் இலகுவான செய்முறை ஆயினும் எதற்குச் சும்மா ஊடறுவைச் சிகிச்சை செய்வானென ஒதுக்கி ஒதுக்கியே அநேகர் இந்நோயைக் கண்டறிவதைப் பிற்போடுகின்றனர்.

இந்நோயை குணப்படுத்தும் வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அறுவைச்சிகிச்சையினாலும் மருந்துகளாலும் ஒரளவுக்குக் கட்டுப்படுத்தப்படுகிறது. அறுவைச்சிகிச்சையின் மூலம் வேறிடங்களில் வளரும் கருப்பை அகவுறை நீக்கப்படுகிறது. நீக்க முடியாவிடில் எரிக்கப்படுகிறது. ஆனாலும் அநேகமானோருக்கு அறுவைச்சிகிச்சை பல தடவை செய்ய வேண்டி வரலாம்.

Endometriosis ஆல் ஏற்படும் வலியைக் (குறிப்பாக மாதவிடாயின் போது) கட்டுப்படுத்த அநேகமாக steroids (உதாரணம்: கருத்தடை மாத்திரைகள்) கொடுக்கப்படுகிறது. அதிலும் இம்மருந்துகள் கிட்டத்தட்ட அரைவாசிப் பெண்களுக்கே வேலை செய்கிறது. அத்தோடு ஒரே மருந்தை நீண்ட நாட்கள் எடுப்பதால் சில வேளை மருந்துகளுக்கு தடுப்பாற்றல் (resistance) கூட வர வாய்ப்பிருக்கிறது.

அதனால் இந்நோயைக் இலகுவாகக் கண்டறிவதற்கும் கண்டறிந்ததும் சிகிச்சையளிக்க பயனுள்ள முறைகளையும் கண்டறிதல் மிக முக்கியமாகும். எனது ஆய்வின் ஒரு பகுதியின் குறிக்கோள் இதுவே.

மேலை நாடுகளில் தற்போது சிறிது சிறிதாக சமூகத்தில் இந்நோயைப்பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டுவருகிறார்கள். அதனால் பதின்ம வயதுச் சிறுமியருக்கும் ஒரளவு இந்நோயைப் பற்றிய அறிவு கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருக்கிறது. நியூசிலாந்தில் பங்குனி மாதம், endometriosis விழிப்புணர்வு மாதமாக இவ்வாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5 comments:

megala said...

எனக்கும் இந்த நோய் இருகின்றது என வைத்தியர்கள் சொல்லி உள்ளனர். ஆயினும் எனக்கு அறுவை சிகிச்சை ஏதும் செய்யவில்லை அவசரம் இல்லை என சொல்லி என்னை அனுப்பி விட்டனர் எனக்கு வலி அதிகரித்து வைத்தியசாலை சென்றும் எனக்கு வலி நிவாரண மாத்திரை தந்து அனுபிவிடனர் எனக்கு இன்னும் திருமணம் ஆகா வில்லை. இலங்கையில் இதற்கான அறுவை சிகிச்சை முறை இல்ல்லையோ தெரியவில்லை எனக்கு திருமணத்தின் பின் கரு தரிப்பில் பிரச்சனைகள் ஏற்படும் என்ற பயம் உள்ளது. எனக்கு உதவி என்று ஏதும் உள்ளதா?

Anna said...

உங்களுக்கு laproscopy செய்து பார்த்தவையா? உங்களுக்கு கருப்பைக்கு வெளியே திசு வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பின் சிலசமயம் சிகிச்சை தேவையில்லை என்பார்கள். எங்கு சென்று காட்டினீர்கள்? கருத் தரிப்பில் சில கடினங்கள் வரலாம், ஆனால் அநேகமாக முற்றிலும் கருத்தரிக்க முடியாமல் போகாது. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நான் வேறெங்காவது காட்டலாமா என விசாரித்து விட்டுச் சொல்கிறேன். இங்களின் மின்னஞ்சலைத் தருகிறீர்களா?

Unknown said...

HI...
4 months before am conceived then only noticed I have endometriosis ...now am getting laproscopy tat endometriosis now 7mm my left overy affected ...In future ll i get pregnant in naturals way?

Unknown said...

HI...
4 months before am conceived then only noticed I have endometriosis ...now am getting laproscopy tat endometriosis now 7mm my left overy affected ...In future ll i get pregnant in naturals way?

esh said...

Hello, thank you for the detailed explanation.

Recently I have been having one sided left abdominal pain and left leg pain. Mensuration has been irregular, I am spotting most of the days in a month. Doc did a vaginal and ultrasound scan but no indication of endometriosis. He suggested that I undergo laparoscopy to check throughly.

I am confused on if to proceed with the op. Kindly advise.