Saturday, August 4, 2012

நாத்திகத்தை நோக்கிய எனது பயணம் - 1

நான் பிறந்தது ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில். அம்மா, அப்பா இருவரும் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர்கள், இருவரின் குடும்பத்தினரும் பிறவித் தாவரவுண்ணிகள், ஆயினும் they were not overly religious.
அவர்கள் ஒவ்வொரு நாளுமோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலுமோ கோயிலிற்குப் போவதோ அல்லது விரதங்கள் எல்லாம் பிடிப்பவர்களோ அல்ல. தைப்பொங்கல், வருடப்பிறப்பு, நவராத்திரி, பிறந்த நாளென விசேட தினங்களில் செல்வோம். மற்றப்படி வீட்டில் சுவாமி அறையில் காலை, மாலை விளக்கேற்றி கும்பிடுவோம். மற்றப்படி எமக்குப் பரீட்சைகள் இருக்கும் நாட்களில் பள்ளிக்கூடம் போகும் வழியில் கோயிலுக்குப் போய்விட்டுப் பள்ளிக்குச் செல்வது வழக்கம். என‌து அம்மா மிக‌வும் அழ‌காக‌ எல்லா வித‌மான‌ மாலைக‌ளும் க‌ட்டுவார். ப‌ள்ளிக்கூட‌த்தில் ந‌வ‌ராத்திரிக்கு ஒவ்வொரு நாளும் வைக்கும் பூசைக‌ளுக்கு அம்மாவே அழ‌காக‌ மாலை க‌ட்டி வாழைத்த‌ண்டில் வைத்துத் த‌ருவார். மிக‌ப் பெருமையுட‌ன் கொண்டு செல்வேன். ச‌ர‌ஸ்வ‌திப் பூசை நேர‌ங்க‌ளிலும் ச‌ர‌ஸ்வ‌தி ப‌ட‌த்தின் கீழ் பாட‌ப் புத்த‌க‌ங்க‌ள் வைத்து, விர‌த‌மிருந்திருக்கின்றேன். ஒவ்வொரு திருவெண்பாவைக்கும் அதிகாலை எழுந்து சுற்றியுள்ள‌ ம‌ற்றைய‌ சிறுவ‌ர் சிறூமிய‌ருட‌ன் வீதி, வீதியாக‌த் திருவெண்பாவை பாடியுமுள்ளேன். மிகச் சிறு வயதில் கடவுளைப் பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை. என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை. கிட்டத்தட்ட மிகச்சிறு வயதில் எனக்கு நான் நித்திரையில் இறந்து விடுவேன் என்ற பயம் இருந்தது. ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் கடவுளிடம் கேட்கும் வரங்களில் ஒன்று "கடவுளே நான் சாகக் கூடாது.நாளைக் காலை கட்டாய‌ம் எழும்ப வேண்டும்". :)

பின் ப‌தின்ம‌ வ‌ய‌தில் முத‌ன் முத‌லாக ஒரு சமயக் கொள்கையுடன் முர‌ண்பாடு வ‌ந்த‌து. மாத‌விடாய்க் கால‌ங்க‌ளில் கோயில்க‌ளுக்குப் போக‌க் கூட‌தென்னும் கொள்கை. நான் ஒவ்வொரு நாளும் கோயில்க‌ளுகுப் போப‌வ‌ள் இல்லையென்றாலும் அக்கொள்கை மிகவும் நேர்மையற்றதாகவும் பிழையாகவும் பட்டது. மாதவிடாயைப் பற்றி பெரிதாக விளக்கம் தெரியாத அக்காலத்திலே பிழையாகப்பட்டது, இப்போ அதைப்பற்றிய முற்று முழுதான உயிரியல் விளக்கம் தெரிந்திருந்தும் பிழையாகவேபடுகிறது. இராமாயணம், மகாபாரதக் கதைகளிலும் சில முரண்பாடுகள் இருந்தன.

என்ன தான் இந்து மதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எம்மதமும் சம்மதம் என்ற எண்ணமே இருந்தது. அந்நாட்களில் எந்த மதங்களைப் பற்றியும் முழுதான விளக்கம் இருக்கவில்லை. கடவுள் ஒருவரே. ஒவ்வொரு மதமும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாக அந்த ஒருவரைச் சென்றடையவே உதவுகின்றன என்பதே என் எண்ணமாக இருந்தது. நான் O/L, A/L படித்தது கிறிஸ்தவப் பாடசாலைகளில். பாடசாலை வளாகத்திலேயே சிறிய தேவாலயமும் இருந்தது. குறிப்பாகப் பரீட்சை காலங்களில் எனக்கு கோயில்களுக்குப் போக 'இயலாத' வேளைகளில் தேவாலயத்திற்குச் சென்று கும்பிட்டு விட்டே பரீட்சைகளுக்குச் சென்றிருக்கின்றேன். பேருந்துப் பயணங்களின் போது வரும் கோயில்களைக் கும்பிடுவது போன்று தேவாலயங்களைக் கடக்கும் போது பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே சொல்லி cross போட்டுள்ளேன். எனது நெருங்கிய தோழிகளில் ஒருவர் முஸ்லிம். அவர் நெருங்கிய தோழியானதிலிருந்து நியூசிலாந்து வரும் வரையிலும் ஒவ்வொரு வருடமும் ரமலான் பெருநாள் முழு நாளும் அவளின் வீட்டிலேயே இருந்து விருந்துண்டு கொண்டாடியுள்ளேன். இப்போதும் அவள் எனது நெருங்கிய தோழியே.

இளங்கலைப் பட்டம் முடித்து முனைவர் பட்டப்படிப்பு தொடங்கி சிறிது காலத்திற்கு கடவுள், மதங்களின் மேல் மேற்சொன்ன எண்ணமே இருந்தது. படிப்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரமின்மையால் இதைப்பற்றி மேலும் ஆழமாகச் சிந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் எமது சமூக நடப்புகள், எனது பெண்ணிய சிந்தனைகளை இன்னும் ஆழமாக்கின. இச்சிந்தனைகளே இறுதியில் என்னை நாத்திகத்தின் கதைவைத் திறக்க வைத்தன. அது அடுத்த பதிவில்.

கடவுள் இருக்கிறார் என உனக்கு ஒரு நிகழ்வும் உணர்த்தவில்லையா எனப் பலர் கேட்கும் போது எனக்கு நினைவு வ‌ரும் ஒரு ச‌ம்ப‌வ‌த்தோடு இந்தப் ப‌திவை முடித்து, பின் தொட‌ர்கிறேன். ஒருமுறை அப்பா எமது குடும்பத்தின் பெயரில் இங்குள்ள முருகன் கோயிலில் அபிடேகம் செய்யப் பதிவு செய்திருந்தார். இந்த மாதிரி எமது பூசையெனில் எம்மை முன்னுக்கு ஜயருடன் இருக்க விட்டு விட்டு அப்பாவும் அம்மாவும் எங்கையாவது பின்னுக்கே நிற்பார்கள். ஒருநாளும் முன்னுக்கு வந்து தமும் பங்கு கொண்டதில்லை. அதில் எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. அபிடேகத்தின் போது இடையில் தேங்காய் உடைக்க வேண்டும். அதற்கு ஆண்களிடம் மட்டுமே உடைக்கக் கொடுப்பார்கள். அப்பாவிடம் கொடுப்பதில் எனக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்பா முன்னுக்கு நிற்பதில்லை ஆதலால் அருகில் நிற்கும் யாரோ ஒரு ஆணையே ஜயர் உடைக்கச் சொல்வார். எனக்கு நீண்ட காலமாகவே இதில் பிடிப்பு இருந்ததில்லை. இது ஒரு சிறிய விடயம் எனத்தெரிந்திருப்பினும், I could not get over it. அப்பா, அம்மா பக்கத்தில் இல்லாவிடில் அடுத்து என்னிடம் தானே தேங்காய் உடைக்கத் தர வேண்டும். ஏன் கண்டவன், நிண்டவன் எல்லாம் எமக்குத் தேங்காய் உடைக்கவேண்டும் என்பது எனது வாதம். இதை யாரிடமும் சொன்னதில்லை.

அன்றைய அபிடேகத்திற்கும் எனக்குப் போக விருப்பமே இல்லை. வேறு வழியின்றிச் சென்றாலும், நாள் முழுக்க எண்ணம் தேங்காய் உடைப்பதைச் சுற்றியே இருந்தது. கோயிலுக்கு வந்ததும் அப்பாவிடம் சொல்லிப் பார்த்தேன் எங்களுடன் வந்து இருக்குமாறு. அப்பா மறுத்துவிட, வேறு வழியின்றி போய் என் தங்கைகளுடன் முன்னுக்கு இருந்த்தேன். அபிடேகம் தொடங்கி தேங்காய் உடைக்கும் நேரத்தில், ஜயர் யாருக்குக் கொடுக்கப் போகிறார் எனப் பார்ப்போமெனத் நிமிர, மிகச் சாதாரணமாக ஜயர் தேங்காயையும் கத்தியையும் என்னிடம் நீட்டினார். அதிர்ச்சியுடன் ஒருகையில் தேங்காயையும் மறுகையில் கத்தியையும் எடுக்கையில், நொடிப் பொழுதில் மனதில் சில வலுத்த சந்தேகங்கள் எழுந்தன. தேங்காயை ஒழுங்காக உடைக்க முடியாவிட்டால் என்ன செய்வது? அப்படியே உடைத்தாலும் அது பழுதடைந்திருந்தால் என்னிடம் தந்ததால் தான் பழுதடைந்ததென எல்லோரும் சொல்வார்களா? ஆனாலும் கனவில் நடப்பது போல் தேங்காயை கிட்டத்தட்ட சரி பாதியாகவே உடைத்தேன். தேங்காயும் மிக நல்ல தேங்காயே. உண்மையிலேயே ஒருமுறை என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். It was a surreal moment. நம்பவே முடியவில்லை. :)

8 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாக தங்களை பக்திவிஷயமாக
அறிமுகப் படுத்திக் கொண்டு தொடர்வது
தங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது
தாங்கள் புரிந்து கொண்டதை அறிய ஆவல்
தொடர வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அப்பவே ரொம்ப ஜிந்திச்சிருக்கீங்க...

Anonymous said...

http://www.islamic.org.uk/gde.html

Anonymous said...

http://www.islamic.org.uk/gde.html

Anonymous said...

ulagil evarum naaththigaraaga mudiyaadhu andha varththai thevaiyattradhu ungalukku irai vazhipaatil nambikkai illaamal irukkalaam aanaal iyarkaiyedam mandiyittuththaan aagavendum padhivittamaikku nandri
surendranath1973@gmail.com

Unknown said...

சிறந்த பதிவு தொடர்ந்து எழுதுங்கள் என் வாழ்த்துக்கள்.

இனியவன்...

வேர்கள் said...

ஆவலாக காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த பதிவுக்கு

Anonymous said...

Insteresting. Please continue.