நான் கருவாக இருக்கும் போதே அப்பா அம்மாவிடம், ஆம்பிளைப் பிள்ளையெனில் அப்பப்பாவின் பெயரையும் பொம்பிளைப் பிள்ளையெனில் அப்பம்மாவின் பெயரையும் வைப்போமா எனக் கேட்க அம்மாவும் சரியென்று விட்டார். பிறந்தபின் என்ன நினைத்தாரோ தெரியாது. என் முதல் பெயராக அப்பம்மாவின் அரைவாசிப்பெயரையும் இரண்டாவது பெயராக இன்னொன்றையும் வைத்தார். நிச்சயமாக இந்த இரு பெயர்களையும் ஒன்றாகக் கொண்ட வேறொருவர் இல்லை என்றே நினைக்கிறேன். எனது பெயரை எனக்கு மிகவும் பிடிக்கும். I am very much sentimentally attached to it. அன்னா XX அப்பாவின் பெயர் தான் எனது முதல் அடையாளம். இதை மாற்றினாலோ எனது முதற் பெயர்களின் பின் வேறு பெயர் சேர்த்துப் பார்த்தாலோ நானென எனக்குத் தோன்றியதில்லை. என் பெயரோடு அம்மாவின் பெயரையும் எப்படியாவது சேர்க்க வேண்டுமென நினைத்தேனே தவிர, எனக்கு திருமணத்தின் பின் பெயர் மாற்றுவதென்பது எப்போதுமே பிரச்சனையாகவே தோன்றியது.
எனது துணைவன் முதன் முதலில் என்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்ன போது, அவரிடம் முதலில் சொன்னது, ' திருமணம் செய்வது எனது எதிர்காலத் திட்டத்திலேயே இல்லை. :) இரண்டாவது, ' நான் எப்போதுமே அன்னா XX அப்பாவின் பெயர் ஆகத் தான் இருப்பதாக உத்தேசம். மாற்றவே மாட்டேன்' என்றேன். இதை எனது பதிலாக சற்றும் எதிர்பார்க்காத துணைவனோ முதலில் குழம்பி பின், சரி பெயர் மாற்றுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டுவிட்டு, பின் நீ என்ன பெயர் வைத்திருந்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை என்றார். :)Surprisingly என் அம்மா தான் கொஞ்சம் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர். பின் ஒன்றும் சொல்லவில்லை.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் எதற்கோ power of attroney செய்ய வேண்டி இருந்தது. அம்மா போயிருந்த போது அங்கேயே ஒரு வழக்கறிஞரை எழுதித் தரக் கேட்டிருந்தார். அவர் , "திருமணமானவர்களுக்கு அப்பாவின் பெயர் பாவிக்க முடியாது. அது இங்கு செல்லாது, அதனால் துணைவனின் பெயரை இணைத்தே power of attroney எழுதத் தருவேன்" சொன்னாராம். அம்மா எவ்வளவோ கேட்டும் மறுத்து அவ்வாறே எழுதிக் கொடுத்துள்ளார். அன்னா XX துணைவனின் பெயர் கொண்ட ஆள் அநேகமாக உலகில் இருக்க மாட்டார். அப்படியே தற்சமயம் இருந்தாலும் அது நிச்சயமாக நானில்லை. எனது எந்தவொரு ஆவணத்திலும் அவ்வாறு பெயரில்லை.
பழங்காலங்களில்அடிமைகளுக்கெல்லாம் அவர்களின் குடும்பப்பெயராக அவர்களின் எஜமானர்களின் பெயரை வைப்பார்களாம். பெண்கள் பெயர் மாற்றுவதற்கும் இதற்கும் இருக்கும் தெட்டத்தெளிவான தொடர்பும் எனது இந்தப் பெயர் மாற்றமாட்டேன் என்ற முடிவிற்குக் காரணமானது. பின் எனது அறிவியற் பிரசுரங்களில் எனது பெயரை, எனது முதல் இரு பெயர்களின் முன்னெழுத்துக்களுடன் அப்பாவின் பெயராக பிரசுரித்தபோது இம்முடிவு சரியெனப் பட்டது. எம்மை மிகச் சுலபமாக எவ்வளவு முன்கூட்டிக் 'கரை சேர்க்கலாமோ' அவ்வாறே செய்திருக்கலாம். ஒருவரும் கேள்வி கேட்டிருக்க மாட்டினம். அப்படியே தான் செய்ய வேண்டும் என்றே பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் தமது பல ஆசைகளைத் தியாகம் செய்து எமது முன்னேற்றத்திற்கு உதவியவர்கள் அப்பாவும் அம்மாவும். வளர்ந்த பின் நாம் எடுத்த சில முடிவுகளில் அவர்களுக்கு உடன்பாடில்லாவிடினும் எம்பக்கம் நின்றவர்கள். அவர்களின் பெயரில் எனது ஆய்வுப் பிரசுரங்கள் வருவதே மிகச் சரியெனப் பட்டது.
இப்போது எனது குடும்பத்திற்கு வரும் திருமண/அரங்கேற்ற/விழா அழைப்பிதலில் ( எல்லா தமிழ் நிகழ்ச்சிகளுக்கும்) அநேகமாக திரு. திருமதி துணைவன் பெயர் தான் போடப்பட்டிருக்கும். இதுவரைக்கும் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அண்மையில் நான் பெயர் மாற்றிவிட்டேன் என நினைத்து என்னுடன் வேலை செய்யும் ஒருவர் தனது திருமண அழைப்பிதலில் Dr. and Mr. appa's name என எழுதி எனக்குத் தந்திருந்தார். முதலில் இது என்ன புது combination ஆக இருக்கென ஒரு நொடி யோசித்து, பின் புரிந்ததும், wow! cool! எனச் சிரிக்க, எனது துணைவனோ, "இதில் என்ட பேரே இல்லை. அதனால நான் வரவில்லை" என்று சிரித்தார்.
PS:
சில வருடங்களுக்கு முன் எனது மராத்தி நண்பி ஒருவர் தமது சமூகத்தில் திருமணத்தின் பின் கடைசிப் பெயர் மட்டுமல்ல முதற்பெயரையும் மாற்றுவார்காள் என்ற போது நம்பவே முடியவில்லை. அது உங்களையே மாற்றுவது போலாகாதா? எப்படி பிறந்ததிலிருந்து ஒரு பெயருடன் பல வருடம் வாழ்ந்துவிட்டு பின் முற்றாகப் பெயரை மாற்றுவது? கண்ணை மூடி புதுப்பெயரைச் சொன்னால் மனதில் அவரின் உருவம் தோன்றுமா?
4 comments:
நல்லதொரு பதிவு சகோதரி !!! பொதுவாக மேற்கு சமூகங்களில் குடும்ப பெயர்கள் இருக்கின்றன.. அப்பாவின் பெயர் இருப்பதில்லை என்பதால் குடும்பம் விட்டு குடும்பம் மாறும் பெண்கள் குடும்ப பெயரை எடுத்துக் கொள்வதுண்டு ... !!! தந்தை வழி சமூகங்களில் நிச்சயம் பெண்கள் ஆண்கள் பெயரையே பாதியாக கொண்டுள்ளனர் !!! தந்தை / கணவன் பெயரைக் கொண்டுள்ளார்கள் .. இப்போது தமிழ்நாட்டில் தந்தையின் பெயருக்குப் பதிலாக குழந்தைகள் தாயாரின் பெயரையும் கூட வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கின்றது ..
தாய் வழி சமூகங்களில் ஆண்கள் தமது குடும்ப பெயரை மாற்றிக் கொள்வதும் உண்டு... தரவாட்டுப் பெயர் ( வீட்டுப் பெயர் ) என கேரளாவில் இருக்கும், குறிப்பாக தாய் வழி சமூகம் கொண்ட பிரிவினர்களில் அவைக் காணப்பட்டது ... ஆண் மணமாகி பெண் வீட்டில் இணைந்த பின் அவனது குடும்ப பெயர் பெண்வீட்டாரின் பெயராலேயே அழைக்கப்படும். இப்படியான பழக்கம் மேகாலாயவில் சில இனங்களிலும் காணப்படுகின்றன.
யாரும் தொடாத ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் !
த.ம. 1
அரபு பெயர்களில் அன்றைய காலம் தொட்டே தந்தை பெயர் இணைந்து வருவதே வழக்கம். அபு அப்துல்லாஹ் என்றால் அப்துல்லாஹ்வின் தந்தை என்று பொருள் வரும். இப்னு அப்துல்லாஹ் என்றால் அப்துல்லாஹ்வின் மகன் என்று பொருள் வரும். முகமது நபியை பலர் 'அபுல் காசிமே!' என்று அழைத்த பல நபி மொழிகள் கிடைக்கிறது. காசிம் என்ற ஒரு மகன் முகமது நபிக்கு இருந்ததை அறியலாம். இன்றும் இந்த பழக்கம் அரபு மக்களிடத்தில் தொடர்ந்து வருகிறது.
உண்மைதான்ப்பா.. வடநாடுகளில் பெயரையே மாற்றும் பழக்கம் இருக்கிறது.. புதுபிறப்பே ஆகிடும்போல..
Post a Comment