Friday, November 4, 2011

வெளிர் நீலப் புள்ளி - எமக்குத் தெரிந்த ஒரே வீடுஇது 1990 ஆம் ஆண்டில் voyager 1 எனும் விண்வெளியூர்தியால், பூமியிலிருந்து கிட்டத்தட்ட 6 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். பரந்த அண்டவெளியில் பூமி ஒரு மிக மிகச் சிறிய புள்ளியாகவே தெரிகிறது. Vayager 1 தன் வேலையை நிறைவேற்றி விட்டு solar sytem இலிருந்து வெளிக்கிடும் போது வானியலாளர் Carl Sagan இன் வேண்டுகோளிற்கேற்ப,இப்படம் எடுக்கப்பட்டது. Carl Sagan ஒரு நல்ல வானியலாளர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளரும் கூட. அறிவியலை மக்களுக்குக் விளக்க பல முயற்சிகள் செய்தவர். அதற்காகப் பல புத்தகங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் செய்தவர். பரந்த சிந்தனையும் எமது அறிந்தவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் நாம் இன்னும் அறிய எந்தளவு முக்கியமென்பதை நன்கறிந்தவர். இவர் தனது 62 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவரின் பிறந்த நாள் நவம்பர் 9. 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 6ஆம் திகதி Carl Sagan க்கும், அறிவியலுக்கும், அறியும் ஆர்வத்திற்குமாக Carl Sagan Day கொண்டாடப்படுகிறது.
அவரது Pale Blue Dot: A Vision of the Human Future in Space என்ற 1994 புத்தகத்தில் இவ்வாறு எழுதியதே பின்வருவது.  It's amazing.
இந்த வெளிர் நீலப் புள்ளியைப் பாருங்கள். அது இங்கே. அது தான் வீடு. அது தான் நாம். அதில் தான் நாம் அன்பு செலுத்துபவர்களும், எமக்குத் தெரிந்தவர்களும், நாம் கேள்விப்பட்டவர்களும், இதுவரை வாழ்ந்த/வாழ்ந்துகொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் இருந்த/இருக்கும் இடம்.
 
எமது ஒட்டுமொத்த மகிழ்ச்சி, துன்பம், ஆயிரக்கணக்கான முனைப்பான மதங்கள்,சித்தாந்தங்கள், வர்த்தகக் கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும்;
இதுவரைக்கும் வாழ்ந்த/ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு வேட்டைக்காரனுக்கும் ஒவ்வொரு உணவு தேடுபவனுக்கும்;
ஒவ்வொரு கதாநாயகனுக்கும்; ஒவ்வொரு வில்லனுக்கும்; ஒவ்வொரு பண்பாடு/கலாச்சாரத்தை ஆக்கியோருக்கும் அழித்தோருக்கும், ஒவ்வொரு அரசனுக்கும்; ஒவ்வொரு விவசாயிக்கும்; ஒவ்வொரு சோடி இளம் காதலர்களுக்கும்; ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும்; ஒவ்வொரு நம்பிக்கையளிக்கும் குழந்தைக்கும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளருக்கும்; தேச ஆராய்ச்சியாளருக்கும்; ஒவ்வொரு போதிக்கும் ஆசிரியருக்கும்; ஒவ்வொரு ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாருக்கும்; ஒவ்வொரு உயர்ந்த தலைவருக்கும்;ஒவ்வொரு மதகுருவுக்கும்; ஒவ்வொரு பாவிக்கும்  இதுவே வீடு.

சூரியக் கீற்றால் தொங்கிகொண்டிருக்கும் ஒரு தூசுத் துகளே எம் வீடு. மிகப் பரந்த அண்டத்தில் பூமி ஒரு மிக மிக‌ச் சிறிய மேடையே. இந்தச் சிறு புள்ளியின் ஒரு சிறு கூற்றை கணப்பொழுது ஆழ்வதற்காக பல படைத்தலைவர்களாலும் சக்கரவர்த்திகளாலும் சிந்தப்பட்ட இரத்த ஆறுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். இப்புள்ளியின் ஒரு மூலையில் வாழும் குடிகளுக்கு அவர்களில் இருந்து பிரித்தரியமுடியாத மற்றொரு மூலையில் உள்ள குடிகளால் நடத்தப்படும் முடிவில்லாத கொடூரங்களை, அவர்களுக்கிடையில் அடிக்கடி ஏற்படும் விளக்கமின்மையை, ஒருவரை ஒருவர் கொல்வதற்கு அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை, அவர்களுக்குள் சுடர் விட்டெரியும் வெறுப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். எமது நிலை, கற்பனையேயான எமது சுய முக்கியத்துவம், இந்தப் பிரபஞ்சத்தில் எமக்கு சிறப்புரிமை இருக்கென்னும் மாயை, இவை அனைத்தையும் இந்த வெளிரிய நீலப் புள்ளி கேள்விக்குள்ளாக்குகிறது. எமது கோள், சூழ்ந்திருக்கும் அபாரமான அண்டவெளி இருட்டில் இருக்கும் ஒரு தனிமையான சிறு துகள். எமது தெளிவற்ற நிலையில், எம்மிடம் இருந்து எம்மைக் காப்பாற்ற, இந்த அண்ட வெளியில் எங்காவதிருந்து எமக்கு உதவி வருமென்பதற்கு எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதுவரைக்கும் எமக்குத் தெரிந்தமட்டில் பூமியில் மட்டுமே உயிர்கள் விருத்தியாகியுள்ளன. அண்மையில் எம்மால் வேறொரு இடத்திலும் சென்று வாழ முடியாது. வேறிடங்களுக்குப் நிச்சயமாகப் போய்வரலாம், ஆனால் நிரந்தரமாக வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இன்னும் இல்லை. விருப்பமோ இல்லையோ பூமியை மட்டுமே எம்மால் இப்போதைக்கு ஆழ முடியும்.  எம்மில் அடக்கமான பண்பை விருத்தியாக்கும் பயிற்சியாக‌ வானியல் இருக்குமெனச் சொல்லப்படும்.  மனிதரின் மடைத்தனமான இறுமாப்பைப் பறைசாற்ற தொலைவிலிருந்து தெரியும் எமது உலகத்தின் இந்த உருவத்தைப் போல் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்த உருவம் எனக்கு, நாம் ஒவ்வொருவரையும் அன்பாக நடத்தவும், எமக்குத் தெரிந்த ஒரே வீடான இந்த வெளிர் நீலப் புள்ளியை பேணிப் பாதுகாக்கவுமான எமது பொறுப்பை வலியுறுத்துகிறது. இதுவே எமக்குத் தெரிந்த ஒரே வீடு.

3 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

வெளுத்த நீலப்புள்ளி என்பதை வெளிர் நீலப்புள்ளி என மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.

Anna said...

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திரு. அரவிந்தன். 'வெளுத்த' வை 'வெளிர்' என மாற்றிவிட்டேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

இந்த பதிவும் தகவலும் அருமை. இப்பதிவை
வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html