Shakti Community Council நியூசிலாந்தில் இருக்கும் ஆசிய, ஆபிரிக்க, மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து இங்கு புலம்பெயரும் பெண்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம். கடந்த 16 வருடங்களாக நியூசிலாந்தில் இயங்குகிறது. இந்நிறுவனத்திற்குக் கீழே பல் வேறு உப குழுக்கள் உள்ளன.
வீட்டில் நடக்கும் வன்முறைகளிலிருந்து தப்பிய பெண்களுக்கு புகலிடம் கொடுத்தல், counselling, immigration உட்பட சட்ட சம்பந்த மான உதவிகள், மொழிபெயர்ப்பு உதவிகள் என்பவை இவற்றில் சில. ஒவ்வொரு மகளிர் தினத்தன்றும் இவர்கள் நிகழ்காலத்தில் புலம்பெயர்ந்த பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிகள், வேறு செய்யக்கூடியவை போன்றவற்றைக் கலந்துரையாட பயிலரங்கு நடத்துவார்கள். கடந்த ஒரிரு வருடங்களாக மகளிர் தினத்தில் இந்த பயிலரங்குகளுக்குச் செல்கின்றேன்.
இவ்வருடம் சக்தியின் தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் பிரியங்கா ராதாகிருஸ்ணன் தான் அண்மையில் முடித்த தனது masters degree க்குச் செய்த ஆய்வைப் பற்றி உரையாற்றினார். கடந்த சில வருடங்களில் அவர்களின் சேவையினூடக தெரிய வந்த பல நிர்ப்பந்திக்கப்பட்ட திருமணங்களாலும் சிறுவர் திருமணங்களாலும் தூண்டப்பட்ட அவர், நியுசிலாந்தில் அவை எங்கு, எப்படி நடக்கின்றதெனவும் அதனால் பாதிக்கப்படும் சிறுவர்களினதும் பெண்களினதும் வாழ்க்கையையும் பற்றி ஆய்வு செய்தவர். அவ்ர் சொன்னதை, பின் கலந்துரையாடியதை இங்கு பதிவிடுகின்றேன்.
பல்வேறு ஆசிய நாடுகளிலும் ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறுவர் திருமணங்கள்/கட்டாயத்திருமணங்கள் நிறையவே நடைபெறுகின்றன. பிறந்த நாட்டுக் கலாச்சாரமும் புகுந்த நாட்டுக் கலாச்சாரமும் கிட்டத்தட ஒன்றுக்கொன்று எதிர்மாறாதலால், குடும்பமாகப் புலம்பெயர்பவர்கள் பலர் தங்களுக்குள்ளேயே குழுக்களாகவே வாழ்வார்கள். புகுந்த நாட்டவர்களுடன் பழகுவது குறைவு. அதனால் அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள் வெளியில் வருவது மிகக் குறைவு. அதோடு அநேகமான வெளிநாடுகளில் அவரவர் கலாச்சாரம் அவரவர்களுக்கு, அதைக் கேள்வி கேட்கத் தேவையில்லை என்ற ஒரு எழுதப்படாத விதியும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சிறுவர் திருமணங்கள்/கட்டாயத்திருமணங்கள் பின்வரும் காரணங்களுக்காக நடைபெறுகிறது.
- அநேகமாக இச்சிறுமிகள் இந்நாட்டிலேயே பிறந்தவர்கள் அல்லது மிகச் சிறு வயதிலேயே இங்கு வந்தவர்கள். அதனால் அவர்கள் இந்நாட்டின் காலாச்சாரத்தால் பாதிக்கப் பட்டு அவர்களினதும் குடும்பத்தினது கெளரவத்தை சமூகத்தில் இழக்கக் கூடாதென்பதற்காக (ஏனெனில் பெண்களின் நடை, உடை, செய்கைகளிலாலேயே எமது அரும்பெரும் கலாச்சாரமும் குடும்பத்தின் கெளரவமும் கட்டிக் காக்கப்படுகின்றது!?)
- குடிநுழைவுத் தேவைகளுக்காக - தாய்நாட்டிலிருக்கும் தமது தூரத்து உறவினர்களை இங்கு கூட்டிவருவதற்காக
- ஒரு பெண் குடும்பத்திற்குப் பிடிக்காதவரைக் காதலித்துக் கொண்டிருந்தால் அந்தத் திருமணத்தைத் தடுப்பதற்காக
- தம் பிள்ளைகள் ஓரினச்சேர்க்கையாளர் எனப் பெற்றோர் சந்தேகித்தால்
சக்தி நிலையத்தில் புகலிடம் கேட்டவர்களிலிருந்து சில உதாரணங்கள்:
- ஒரு 14 வயதுச் சிறுமி- பாலியல் வன்புணர்வால் கருத்தரித்தவள். கெளரவம் போய்விடும் என்பதற்காக வன்புணர்வு செய்த கயவனுக்கே முழுக் குடும்பமும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துவிட்டனர். இப்போது 19 வயது. மூன்று குழந்தைகள். வீட்டில் அடி, உதைகள் சர்வ சாதாரணம்.
- 16 வயதுச் சிறுமி - பெற்றோரால் பார்த்து 60,000 சீதனத்துடன் கட்டாயத் திருமணம் செய்துவைத்து, ஒவ்வொரு நாளும் வீட்டில் வன்முறை அனுபவித்து, இயலாமல் எங்கோ தண்ணீரில் மூழ்க முயற்சித்தபோது பொலிஸ் பிடித்து சக்தியிடம் சமர்ப்பித்தனர்.
பிரியங்காவின் ஆய்வின் படி 20% (1 in 5) ஆன புலம்பெயர்ந்த பெண்கள் கட்டாயத்திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இவர்களில் மணமகன் இங்கிருந்து தாய்நாட்டிற்குச் சென்று ஒன்றும் சந்தேகிக்காத ஒரு பெண்ணை மணந்து இங்கு கூட்டி வந்து கொடுமைப்படுத்துபவர்களும் அடக்கம். இவ்வாறு நடக்கும் பல பெண்களினது கடவுச்சீட்டும் கணவனிடமே இருக்கும். பலர் வெளியேற நினைக்கும் போதும் விசா பிரச்சனைகள், இந்நாட்டு சட்ட முறைகள் தெரியாமை, யாருடனும் மனம் விட்டு கதைக்க முடியாமை என்று பலவாறு அவதிப்படுகின்றனர்.
இப்போ சக்திக் குழுவினர் இந்நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த சிறுவர்கள் படிக்கும் பாடசாலைகளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஒவ்வொருவரும் தாமாகவே குடும்ப அனுமதியின்றி திருமணம் செய்யலாம். 16 தொடக்கம் 18 வயதினருக்கு பெற்றோர் அனுமதி வழங்கவேண்டும். இந்த இரு சட்டங்களாலும், குடும்பத்தின் கட்டாயப்படுத்தலாலும் பயமுறுத்தலாலும் திருமணம் செய்யும் பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாக்க முடியாது என்பதால் இவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டங்கள் மாற்றியமைக்க வேண்டுமென சக்தி நியூசிலாந்து அரசுக்கு மனுக் கொடுத்துள்ளது. அதற்கு இன்னும் ஒரு மாதமளவில் பதில் வருமென எதிர்பார்க்கப் படுகிறது.
எமது சமூகங்களில் இவ்வாறு நடைபெறுவது தெரிந்தால் தயவு செய்து பூசி மெழுகாதீர்கள். தயவு செய்து பிரச்ச்னையை வெளிக் கொண்டுவாருங்கள். இது மிகவும் அடிப்படையான மனித உரிமை மீறல். பெண்களைத் தியாகம் செய்து சமூக/குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுதல் எந்தளவுக்குக் கொடுமையான செயல் என எப்போ சனத்திற்கு விளங்கும்?
0 comments:
Post a Comment