சில நோய்கள் சிலருக்கு வரும் சாத்தியக் கூறுகள் கூட. இதற்கு அவர்களின் மரபியல், வாழ்க்கைச் சூழல், அவர்களின் சில வாழ்வியல் தேர்வுகள் (புகைப்பிடித்தல் -> நுரையீரல் புற்றுநோய்), குழந்தை, சிறுவர் பருவத்தில் அவர்களின் வளர்ப்பு முறை என்று பல வகைக் காரணங்கள் இருக்கலாம் என்பது பலரும் அறிந்ததே. பலருக்குத் தெரியாத இன்னொரு காரணி முதல் ஒன்பது மாதங்கள் ஒரு கருவிலிருந்து குழந்தையாக அவர்கள் விருத்தியான கருவறை. அங்கிருக்கும் போது உங்களுக்குக் கிடைத்த உணவு/ஊட்டச்சத்துகள், தாய்க்கு வந்த நோய்கள், தாயின் மனநிலை/மன அழுத்தம், தாய் சுவாசித்த காற்றில் உள்ள மாசுகள், கர்ப்பக் காலத்தில் தாய் வாழ்ந்த சூழலின் தாக்கம் என தாயின் பல வாழ்க்கை அனுபவங்கள் குழந்தையை அந்த ஒன்பது மாதங்கள் மட்டுமல்லாது, அக்குழந்தை வளர்ந்து பெரியவரான பின் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கும் அடிப்படையாக இருக்கலாம்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் Dr David Barker எனும் மருத்துவர் இங்கிலாந்து மக்களில் வைத்திருந்த தரவுகளில் இருந்து ஒரு வித்தியாசமான தொடர்பைக் கவனித்தார். இங்கிலாந்தில் மிக ஏழ்மையான பிரதேசங்களில் உள்ளா மக்களிடையே இதய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இந்தத் தொடர்பு எதிர்பார்க்காதது. ஏனெனில் அநேகமாக வசடி படைத்தவரிடையேயே இதய நோய்கள் அதிகம் காணப்படும். அவர்களின் பெரும்பாலும் உடற் பயிற்சியற்ற (sedentary) வாழ்வியலும் அளவிற்கதிகமான உணவும் உதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் கூட்டுகின்றன. ஆனால் ஏழைகள் வாழும் பிரதேசத்தில் இதய நோயால் பாதிப்படைந்தவர்கள், ஏன் கூடியளவில் இருக்கிறார்கள்? அவரிடம் இருந்த தரவுகளை (data) மேலும் துருவியதில், இப்பிரதேசங்களில் பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நிறைக்கும் (birth weight) இதய நோய்க்கும் உள்ள இடைத் தொடர்பைக் (correlation) கண்டறிந்தார். கிட்டத்தட்ட 15,000 பேர்களின் தேக நலனையும் பிறக்கும் போது அவர்களின் எடையையும் அவதானித்துப் பார்த்ததில், மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் நடுத்தர வயதை அடையும் போது அவர்களுக்கு இதய நோய் வரக்கூடிய நிகழ்தகவு மிகவும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். அநேகமாக தாயிற்கு காணுமானளவு போசாக்கான உணவின்மை குழந்தை குறைந்த எடையுடன் பிறப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அவரின் ஆய்வுகளின் படி David Barker குழந்தை கருப்பையில் இருக்கும் போது கருப்பைச்சூழல் அக்குழந்தை பிறந்து வளரும் போது அதன் சுகத்தை தீர்மானிக்கும் ஒரு காரணி எனக் கூறினார். இதுவே இன்று The Barker theory என அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் செய்யப்பட்ட/இன்னும் செய்து கொண்டிருக்கும் பல ஆய்வுகள் இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவான முடிவுகளைத் தருகின்றன.
நான் முன்பு எழுதிய இதய நோய்க்கும் இனப்பெருக்கத்திற்குமான தொடர்பு என்ற பதிவில், கருவுற்றிருக்கும் காலத்தில் முன்ச்சுழ்வலிப்பு/குருதி நஞ்சூட்டுதல் (preeclampsia/toxaemia) எனும் நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் குழந்தைக்கும் பிற்காலத்தில் அதிக இரத்த அழுத்தம், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் கூட எனக் கூறியிருந்தேன். அதே போல் கருக்காலத்தில் மட்டுமே வரும் நீரிழிவு நோய் (gestational diabetes) கூட பிற்காலத்தில் தாயிற்கும் பிள்ளைக்கும் நீரிழிவு நோய் வருவதற்கும் உடற் பருமன் அதிகரிப்பதற்குமான சாத்தியத்தைக் கூட்டுகின்றது.
1944-1945 (இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலகட்டத்தில்) காலகட்டத்தில் ஜேர்மனியின் கட்டுப்பாடிற்குள் இருந்த நெதலாந்துப்பகுதிகளில் மிகக் கடுமையான பஞ்சம் நிலவியது (the Dutch famine). ஜேர்மனி இப்பகுதிக்கு உணவுப் பொருட்கள் போவதற்குத் தடை விதித்ததால் பல மில்லியன் மக்கள் பாதிப்பிற்குள்ளானார்கள்.இப்பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட/பாதிக்கப்படாதவர்களின் பிள்ளைகளிலும், அவர்களின் பிள்ளைகளிலும் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளின் படி இப்பஞ்சம் நடந்த காலகட்டத்தில் கற்பிணியாக இருந்த பெண்களின் பிள்ளைகள் மட்டுமன்றி, அப்பிள்ளைகளின் பிள்ளைகள் கூட இதய நோய்கள், நீரிழிவு நோய், உடற்பருமன் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளால் இந்தப் பஞ்சத்தால் பாதிக்கப்படாதவர்களின் வாரிசுகளை விட மிகக் கூடுதலானளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம்.
அதிகளவில் சூழல் மாசடைந்துள்ள இடங்களில் தமது கற்ப காலத்தில் வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு அதிகளவில் Attention-deficit hyperactivity disorder (ADHD)வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.
குழந்தை கருவிலிருக்கும் போது, கருப்பையில் அதன் சூழலை வைத்து, கருப்பைக்கு வெளியே வாழ்வு எவ்வாறு இருக்கும் என ஓரளவிற்கு மதிப்பிடுகிறது.இதனால் வரும் விளைவுகள் என்ன என்பதை குறிப்பாக உடற்பருமன் கூடுதல், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வருவதற்கான காரணியாக ஏன் அமையலாம் என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் தர முயற்சிக்கிறேன்.
இந்தக் காரணிகளை ஆராய்ந்து அறிவதன் முக்கியத்துவம்: தற்போது உலகில் தொற்று நோயற்ற (non-communicable), அநேகமாகத் தவிர்க்கக் கூடிய நோய்களான நீரிழிவு நோய், இதய நோய்களால் பாதிப்படையும், மரணமடையும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. குறிப்பாக இந்திய/ஆசிய இன மக்களிடையே இந்நோய்களின் எண்ணிக்கை மற்றைய இன மக்களை விட மிகக் கூட. உதாரணத்திற்கு இங்கு ஓக்லாந்து, நியூசிலாந்தில் வாழும் கற்பிணிப்பெண்களில் இந்திய இனப் பெண்களில் ஜந்தில் ஒருவருக்கு (20%) கற்பகாலத்தில் நீரிழிவு நோய் வரும் சாத்தியம் உண்டு. அதுவே சீனப் பெண்களில் 16% வீதமானோருக்கும் ஜரோப்பியர்களில் 3% வீதமானோருக்குமே வரும் சாத்தியம் உண்டு. இது ஏன் என ஆராய்வது, இதைத் தடுப்பதற்கு/குறைப்பதற்கான வழிக்ளைக் கண்டறிய மிகவும் உதவும்.
Image: Cover page of the Time Magazine 4th October 2010.
Image: Cover page of the Time Magazine 4th October 2010.
0 comments:
Post a Comment