Wednesday, October 12, 2011

நான் ஒரு விஞ்ஞானி

விஞ்ஞானிகள்/அறிவியளாளர்கள் என நீங்கள் நினைக்கும் போதும் உங்கள் மனிதில் தோன்றும் உருவம் என்ன? உங்களுக்கு பல பிரபலமான/மிகுந்த புத்திசாலித்தனமான விஞ்ஞானிகளான நியூட்டன், ஃபரடே, டார்வின் மாதிரியான ஆட்கள் நினைவில் வருவார்களா அல்லது ஒரு வெள்ளை மேற்சட்டை போட்டு ஆய்வுகூடத்தில் மர்மமான வேலைகள் செய்யும் ஒருவரின் உருவம் வருமா? இம்மாதிரி உருவங்களை அடிக்கடி தொலைக்காட்சிகளிலோ வேறு தொடர்பு சாதனங்களின் மூலமோ பார்க்கும் போது இவர்கள் சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டவர்களாகத் தோன்றலாம்.வெள்ளை மேற்சட்டையை எடுத்து விட்டு அவர்களுடன் கதைத்துப் பார்த்தால் அவர்கள் எல்லோரையும் போல் சாதாரணமானவர்களே என்ற முடிவுக்கு வருவீர்கள், என இப்படத்தை எடுத்த பெளதீக‌விய‌லாள‌ர் Stephen Curry கூறுகிறார். இந்தக் குறுகிய படத்தில் அவர் ஆறு வித்தியாசமான விஞ்ஞானிகளுடன் கதைத்து, அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என அறிய முயற்சித்துள்ளார். இந்த ஆறு விஞ்ஞானிகளும் மேலை நாட்டவர்கள். எனவே சிறு வயதில் அவர்களை ஆர்வப் படுத்திய, ஊக்கமளித்த காரணங்கள் எல்லாம் எம்மவர்களின் அனுபவங்களிலிருந்து குறிப்பிட்டளவு மாறுபட்டது என நினைக்கிறேன்.அதனால் Stephen Curry அந்த ஆறு விஞ்ஞானிகளைக் கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன். இதே மாதிரி அறிவியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் அவர்களை ஊக்குவித்தது என்ன, எவ்வாறு அறிவியலை உங்கள் தொழில்துறையாகத் தேர்ந்தெடுத்தீர்கள் என எழுதினீர்களெனில் நன்றாக இருக்கும். அநேகமானவர்களிடம் அவர்கள் இப்போ இருக்கும் நிலைக்கு எவ்வாறு வந்தார்கள் என இது பள்ளிச் சிறுவர்களை மனிதில் கொண்டு எடுக்கப்பட்ட படம்.



இது UK இல் உருவாக்கப்பட்ட I’m a Scientist, Get me out of here என்ற‌ திட்ட‌த்தில் இருந்து உதித்த‌து. இத்திட்ட‌ம் ப‌ல்வேறுப‌ட்ட‌ விஞ்ஞானிக‌ளிட‌ம் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் இணையத்தில் உரையாடி அவ‌ர்க‌ளைப் ப‌ர்றி அறிந்து கொள்ள‌ ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இங்கு என‌து வேலைத் த‌ள‌த்திலும் இது மாதிரி 'meet the scientist' என்றொரு திட்ட‌ம் உண்டு. பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தற்கால அறிவியல் முன்னேற்றங்களை விளக்குவதற்காகவும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படையில் அறிவியல் என்ன என்பதை விளக்குவதற்கும் உருவாக்கப்பட்டது. இதிலிருக்கும் 'meet the scientist' திட்டத்தில் மாணவர்கள் விஞ்ஞானிகளை ஒரு 15 நிமிடம் சந்தித்து அவர்களிடம் உரையாடுவார்கள். இதேமாதிரி ஒரு திட்டம் எம்மூர்களில் இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்று கருதுகின்றேன். நான் எப்போதும் சொல்றனான் எமது கலாச்சாரத்தில் பிள்ளைகளின் இயற்கையான ஆர்வம், கற்பனை, சிந்திக்கும் தன்மைகளை முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது என்று. Phil Pait என்ற வானியலாளர் சொன்ன மாதிரி if you teach a man (or woman) to reason, he (or she) will think for a lifetime. மாணவ மாணவிகளுக்கு அறிவியலினூடக சிந்திக்கும் திறமைப் புகட்டினால் அது அவர்களுக்கு மட்டுமல்ல முழுச் சமூகத்திற்கும் மிக்க பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு திட்டம் ஊரில் நிறுவ விருப்பம். பார்க்கலாம்.

பின்வருவது Stephen Curry கேட்ட கேள்விகளுக்கு எனது பதில்கள்.

நீங்கள் அறிவியல் தொடர்பான வேலைகளிளோ ஆய்வுகளிலோ ஈடுபட்டிருக்காத வேளைகளில் என்ன செய்வீர்கள்?
  • எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் இப்ப எனக்கு புத்தகங்கள் வாசிக்க நேரம் பெரிதாகக் கிடைப்பதில்லை. வாசிக்க வேண்டுமென வாங்கி வைத்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை தான் கூடிக்கொண்டே போகுது. ஆனால் இணையத்தில் இயலுமானளவு வாசிக்கிறேன்.
  • இயலுமானளவு பிறருக்கு உதவுவது.
  • எனக்கு சமைக்கவும் மிகப் பிடிக்கும். வித விதமான சாப்பாடுகள் சமைத்துக் கொடுக்கப் பிடிக்கும். ஏழு பேர் இருக்கும் வீட்டில் வளர்ந்ததால் கொஞ்சமாக சமைக்க இப்பவும் கஸ்டப்படுவேன். அம்மா சொல்லுவா "ஏதோ கலியாண வீட்டிற்கு சமைக்கிற மாதிரி சமைப்பாள்" என்று.
  • நீண்ட‌ கார்ப் ப‌ய‌ண‌ம் நியூசிலாந்தில் செய்ய‌ப் பிடிக்கும். ஓக்லாந்த்தைத் தாண்டிய‌வுட‌ன் ஆட்க‌ள் பெரிதும் இல்லாத‌, ப‌ச்சைப் ப‌சேலென‌ புல்வெளிக‌ளும் ம‌லைக‌ளும் ம‌ட்டுமே எல்லாப் ப‌க்க‌மும் சூழ்ந்திருக்க‌ கார் க‌ண்ணாடியைத் திற‌ந்து விட்டு த‌மிழ் பாட்டும் கேட்டுக் கொண்டு கார் ஓட‌ மிக‌ மிக‌ப் பிடிக்கும்.
  • காடுக‌ளுக்குள்/ rain forests க்குள் சென்று ஒரு பாதையும் இல்லாம‌ல், எங்கு செல்கிறோமெனத் தெரியாம‌ல் கால் போன‌ போக்கில் நெடுந்தூரம் ந‌ட‌க்க‌ப் பிடிக்கும். Love Bush walking.

நீங்க‌ள் எப்போது முத‌ன் முத‌லில் அறிவிய‌லில் நாட்ட‌ம் கொண்டீர்க‌ள்?
நான் நினைக்கிறேன் முத‌ன் முத‌லில் எப்போது அறிவிய‌ல் ப‌ள்ளியில் ப‌டிக்க‌த் தொட‌ங்கினேனோ அப்போதிருந்தே என்று. ஆனால் அப்ப‌ அநேக‌மாக‌ இர‌சாய‌ன‌விய‌ல் தொட‌ர்பான‌ சிறு சிறு ப‌ரிசோத‌னைக‌ளையே ப‌ள்ளியில் செய்தோம் என‌ ஞாப‌க‌ம். ஒரு ஒன்பது வயதிருக்குமென நினைக்கிறேன், நான் வீட்டிலிருந்த‌ ஒரு அலுமாரியின் கீழ்த்த‌ட்டை என‌து ஆய்வுகூட‌மாக‌ மாற்றியிருந்தேன். :) ஆய்வுகூட‌மென்றால் பெரிசா ஒன்றும் நினைக்காதைங்கோ. ஒரு மெழுகுதிரி, சோடா போத்த‌ல் மூடியைத் த‌ட்டையாக்கி (அதில் தான் என‌க்கு விரும்பிய‌ சாமான்க‌ளைப் போட்டு சூடாக்குவ‌து) ஒரு கத்திரிக்கோல் (this was my bunsen burner :)), ஒரு பெரிதாக்கும் கண்ணாடி (magnifying glass) இந்த‌ மாதிரி வீட்டில் கிடைத்த‌துக‌ளைக் கொண்டு என‌து க‌ற்ப‌னைக் கெட்டிய‌வ‌ரை செய்த‌து. யாருக்கும் பெரிதாக‌க் காட்ட‌வில்லை. But I was absolutely proud of my lab. அப்ப அதற்கு ஆய்வுகூடம் தான் பெயரென்று கூட எனக்குத் தெரியாது. நல்ல காலம் வீடு எரிந்து சாம்பலாகவில்லை.:) நீல CuSO4 ஜ வெப்பமாக்கும் போது நீரெல்ல்லாம் ஆவியாக வேள்ளையாக மாறுவது பார்க்க மிகவும் பிடிக்கும். பொருட்களை வெப்பமாக்கினால் என்னவாகும் (உருகுமா, ஆவியாகுமா, நிறம் மாறுமா) என செய்து பார்க்கப் பிடிக்கும். அப்ப‌ எம்மிட‌ம் தொலைக்காட்சியெல்லாம் இருக்க‌வில்லை. அத‌னால் புத்த‌க‌த்தில் ப‌டிப்ப‌தில் என‌க்குப் பிடித்த‌தை/ செய்யேலுமான‌தை வீட்டில் செய்ய‌ப் பிடித்திருந்தது.இர‌சாய‌ன‌விய‌ல் மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் விஞ்ஞானி என்றெல்லாம் ஒரு வேலை இருக்கென்றே தெரியாது.

உங்களுக்கு nobel prize கிடைத்திருக்கிற‌தா?
:) :) இல்லை.

அறிவிய‌ல் செய்வ‌த‌ற்கு ஒருவ‌ர் மிகுந்த‌ புத்திசாலியாக‌ இருக்க‌ வேண்டும‌ல்ல‌வா?
நான் மிகுந்த‌ புத்திசாலியென‌ ஒருநாளும் நினைத்த‌தில்லை. உண‌ர்ந்த‌தும் இல்லை. அநேக‌மான‌ வேளைக‌ளில் என்னை முட்டாளாக‌வே நினைத்துள்ளேன். என‌க்கு Albert Einstein சொன்ன இரு quotes மிகவும் பிடிக்கும்.
"I have no special talent. I am only passionately curious."
எனக்கு விசேடமான திறமைகள் எதுவும் இல்லை. ஆனால் நான் அறிய மிகுந்த ஆர்வமுடையவன்.
"It's not that I'm so smart, it's just that I stay with problems longer."
நான் புத்திசாலிய‌ல்ல‌, ஆனால் நான் பிர‌ச்ச‌னைக‌ளுட‌ன் நிறைய‌ நேர‌ம் செல‌வ‌ழிப்பேன். அதாவ‌து ஒரு கேள்விக்கான‌ விடையை அறியும‌ட்டும் (அது எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் ச‌ரி) விட‌மாட்டேன்.

இத‌ற்கு ஒரு உதார‌ணம்.நான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தது அவுஸ்ரேலியாவில். எனது முதல் பரிசோதனைக்குத் தேவையான tissues எல்லாம் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால். அங்கு போன முதல் ஆறு மாதத்திலேயே முதல் பரிசோதனை முழுதாகச் செய்து நிறைய முடிவுகள் எடுத்திருந்தேன். நான் பாவித்தது அப்போது ஓரளவிற்கு புதிய தொழில் நுட்பம். அந்த முடிவுகளை எப்படி ஆராய்வது/அதன் பொருள் என்ன என எனது ஆய்வுகூடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.முதல் ஆறு மாதத்தில் எடுத்த முடிவுகளை ஆராய்ந்து விளக்க‌ எனக்கு அடுத்த ஒன்றரை வருடங்கள் பிடித்தன. முதலில் கவலைப்பட்டு, என்னால் செய்ய முடியாது, என்ன இது எதுவுமே தெரியவில்லை எனப் பல தடவை புலம்பிய‌தும் உண்டு. நான் அங்கு த‌னிய‌வே இருந்தேன். என‌து மேற்பார்வையாளர் ஒரு முறை என்னைப் பார்த்து க‌வ‌லைப்ப‌ட்டு இருத்தி வைத்து, எப்படி அறிவியல் ஒரு roller coster ride எனவும், அநேகமானவற்றைப் புரிய பல காலம் எடுக்கும் எனவும், எப்படி நாம் யாரும் ஒருபோதும் கேட்டிராத கேள்விகளைக் கேட்கும் போது அதன் விடை யாருக்கும் தெரியாது ஆனால் அதில் நேரடியாக எவரொருவர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறாரோ அவருக்கே மற்றவர்களைவிட கூடுதல் அறிவு அதில் இருக்கும் எனவும் விளக்கினார். அதன் பின் பலதடவை யோசித்தேன். அந்த முடிவுகளை ஆராயத் தேவையான மென்பொருள் எமது departmental laptop இல் மட்டுமே இருந்தது. அதனால் பலமுறை பின்னேரங்களில் வீடு செல்லும் போது lap top ஜயும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து பல இரவுகள் யோசித்து, ஆராய்ந்து இறுதியில் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் எனது ஆராய்ச்சிக்குப் பதில் (எனது மூளையில் light bulb எறிந்தது :)) கிடைத்தது. அது தான் எனது முதல் Eureka moment. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அறைக்குள் தனிய, யாருடமாவது சொல்லவேண்டுமென்று உடனே அம்மாவிற்கு தொலைபேசி அடித்தேன். அம்மா நித்திரைத் தூக்கத்தில் ஊரிலிருந்து யாராவது அவசரமாக எடுக்கினமோ என எண்ணி வந்து தொலை பேசியை எடுக்க நான் "அம்மா இப்ப தான் முதன் முதலா ஒரு விஞ்ஞானியாக உணர்கின்றேன்" என்று கத்தினேன். அது வரைக்கும் ஆட்கள் "ஒரு தமிழ் பெண்பிள்ளைக்கு ஆராய்ச்சி எல்லாம் சரிவராது. அதுகள் இதுலேயே ஊறி விசராகிடுங்கள், பிறகு குடும்பம் எல்லாம் பார்க்கேலாது" என்ற போது கொஞ்சம் யோசித்த அம்மா, அந்நேரத்தில் அது சரியாகிவிடுமோ என ஒரளவுக்குப் பயம் வருகுதென்றார். :) It trully was an amazing feeling to have figured out something that nobody has before.

"Research is to see what everybody else has seen, and to think what nobody else has thought"
ஆய்வு என்ப‌து எல்லோரும் பார்க்கும் ஒன்றைப் பார்த்து யாரும் சிந்திக்காத‌ ஒன்றை சிந்திப்ப‌து.
Albert Szent-Gyorgyi, Hungarian Biochemist


ஒரு ந‌ல்ல‌ விஞ்ஞானிக்கு என்ன‌ இருக்க‌ வேண்டும்?
அறிய‌ மிகுந்த‌ ஆர்வ‌ம் வேண்டும்.
கேள்விக‌ள் கேட்க‌ வேண்டும்.
பரந்த சிந்திக்கும் தன்மை வேண்டும்.
உங்க‌ள் ஆய்வின் முடிவுக‌ளையே ப‌ல‌முறை உங்க‌ளுக்குள்ளேயே கேள்வி கேட்டுத் தெளிய‌ வெண்டும்.
விடா முய‌ற்சி வேண்டும். அநேக‌மாக‌ ஒவ்வொரு ஆய்வும் தெரியாத‌ ஒரு பாதையில் கால் வைப்ப‌து போல‌வே தொட‌ங்கும். அத‌னால் அநேக‌மாக‌ முத‌லில் எத்த‌னையோ தோல்விக‌ளைச் ச‌ந்திக்க‌ வேண்டிவ‌ரும். அத‌னால் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் க‌ற்க‌க் கூடிய‌தைக் க‌ற்று, விடாம‌ல் முன்னேற‌ வேண்டும். It is a roller coster ride.
க‌டின‌ உழைப்பு வேண்டும்.

Was your PhD fun/Did you enjoy it? உங்களின் ஆய்வு எதைப் பற்றியது?
ஓம். I can honestly say that they were few of my best years in my life. அறிவிய‌லில் நான் க‌ற்ற‌ திற‌மைகள் என்னிலேயே ப‌ல‌ மாற்ற‌ங்க‌ளைக் கொண்டு வ‌ந்த‌து. நான் சாதார‌ண‌மாக‌ப் பார்த்த பல விட‌ய‌ங்க‌ளைப் புதிய‌ கோண‌த்தில் பார்க்க‌ வைத்த‌து. அறிவிய‌ல் செய்யும் போது விருத்தியாகும் திற‌மைக‌ளை பல் வேறு துறைக‌ளில் ப‌ய‌ன் ப‌டுத்த‌முடியும்.

என‌து ஆய்வு endometrium என்றோரு tissue ப‌ற்றிய‌து. க‌ருப்பையின் outer most layer தான் endometrium. இதுவே மாத‌விடாயின் போது உதிர்ந்து பின் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்ந்து/ஒவ்வொரு மாத‌மும் ஒரு க‌ருவிற்கு வீடாகுவ‌த‌ற்கு த‌ன்னைத் த‌யார் செய்து, அவ்வாறு க‌ரு த‌ங்காம‌ல் போகுமிட‌த்து ஒரு சிறு basal layer ஜ‌த் த‌விர‌ ம‌ற்றெல்லாவ‌ற்றையும் முற்றிலும் உதிர்த்து திரும்ப‌வும் அடுத்த‌ cycle இல் த‌ன்னை ஒரு க‌ருவிற்காக‌ த‌யார் செய்ய‌ வ‌ள‌ரும் tissue. உட‌லில் வேறெந்த‌வொரு tissue ஆலும் இவ்வாறு செய்ய‌ முடியாது. இந்த‌ tissues இன் வ‌ள‌ர்ச்சியை estrogen, progesterone எனும் ஒரு ஹார்மோன்க‌ள் க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌. என‌து ஆய்வு ஒவ்வொரு மாத‌மும் endometrium இன் வ‌ள‌ர்ச்சியில் ப‌ங்குப‌ற்றும் ம‌ர‌ப‌ணுக்க‌ளைப் ப‌ற்றிய‌து. அவை எவ்வாறு மாறுகின்ற‌ன‌. Steroid hormones அவ‌ற்றை எவ்வாறு க‌ட்டுப்ப‌டுத்துகின்ற‌ன‌. இவ‌ற்றின் செய்கைக‌ளில் பிழைக‌ள் ஏற்ப‌டின் அத‌னால் வ‌ரும் விளைவுக‌ள் என்ன‌? இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ புதிய‌ முக்கிய‌மான‌ ம‌ர‌ப‌ணுக்க‌ள் ஏதாவ‌து இந்த‌ tissue இன் வ‌ள‌ர்ச்சிக்கு அவ‌சிய‌மா? க‌ருத்த‌ரிக்க‌ முடியாத‌ பெண்க‌ளில் இம்ம‌ர‌ப‌ணுக்க‌ள் எவ்வாறு மாறுப‌டுகின்ற‌ன‌?

அறிவிய‌ல் உல‌கில் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ எல்லாவ‌ற்றையும் க‌ண்ட‌றிந்து விட்ட‌தா?
கொஞ்ச‌மும் இல்லை. இன்னும் நிச்ச‌ய‌மாக‌க் 'க‌ற்ற‌து கை ம‌ண் அள‌வு க‌ல்லாத‌து பிர‌ப‌ஞ்ச‌ம‌ள‌வே'. நாம் செய்யும் ஒவ்வொன்றாலும் ஒரு மிக‌ப் பெரிய‌ புதிரில் மிக‌ச் சிறிய‌ ப‌குதிக‌ளையே க‌ண்ட‌றிகின்றோம். இன்னும் எவ்வ‌ள‌வோ செய்ய‌ இருக்கிற‌து.

11 comments:

கல்வெட்டு said...

அன்னா,
உங்களின் துறைசார்ந்த தகவல்களாகவும் மற்றும் உங்களைப்பர்றி மேலும் அறியவும் உதவியது.

நிறைய சாதிக்க வாழ்த்துகள்

தருமி said...

முதல் கேள்விக்கான பதில்களைப் பார்க்கும் போது ‘பொறாமை’யாக இருந்தது!

Ph.D.யும் தொடர்ந்த ஆய்வுகளும் வெற்றியும், மக்களுக்குப் பயனும் தர வாழ்த்து.

Anna said...

மிக்க நன்றி கல்வெட்டு, தருமி Sir.

Thekkikattan|தெகா said...

அன்னா,

முழுமையாக தங்களின் ஆராய்ச்சி தளத்தை அறிந்து கொள்ள முடிந்தது. Endometrium தொடர்பான விசயங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் படியாக உங்க ஆராய்ச்சி பார்வை சார்ந்து அதனை இழைத்து, குழைத்துக் கொடுத்தது ரொம்ப அருமை.

என்னோட ஆராய்ச்சி காலத்தில் இந்த யுரேகா momentக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்தது. காரணம் அனலைசிஸின் பொழுது கிடைக்கும் ரிசல்ட்டை கொண்டே அது என்ன காரணமாக இருக்கும் என்று மற்ற விசயங்களை கணக்கில் கொண்டு வெளிக் கொணரப்பட்டது.

உங்க ஆராய்சி பொது ஜனத்திற்கு சென்றடையும் முயற்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

baskar said...

கற்பித்தல் முறைகள் தான் நமது கல்வி முறையின் மாற்றவேண்டிய முக்கிய அம்சமாக கருதுகிறேன். உதாரணதிற்கு வகைபடுத்துதல்(integration), தொகைபடுதுதலை(differentiation) கணக்கு பாடங்களில் படிக்கும் நமது மாணவர்கள் வெறும் சூத்திரங்களை மனபாடம் செய்து கேட்கப்படும் கணக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். அதன் பயன்பாடுகள் பற்றி எந்த அறிவும் இல்லாததால் அவர்கள் அதனை உணர்ந்து படிக்கமுடிவதில்லை . அதுவே ஒரு பெரிய இரும்பு துண்டை சூடேற்ற தேவையான ஆற்றலை கணக்கிட மொத்த பகுதிக்கும் கணக்கிடாமல் ஒரு சிறு பகுதிக்கு மட்டும் கண்டறிந்து அதை மொத்த பகுதிக்கும் நீடிப்பு செய்ய தொகைபடுதுதல் பயன்படுகிறது, அதே போல அந்த இரும்பு துண்டின் சிறு பகுதியின் ஆற்றலை அறிய வகைபடுத்துதல் பயன்படுகிறது என கற்பிக்கும் போது மாணவர்கள் மிக நெருக்கமாக உணர்ந்து படிப்பார்கள். அப்போது ஏன் வகைபடுதுதலில் எல்லைகள், வகைபடுத்தபடும் பொருள், அதில் மாற்றத்திற்கு உள்ளாகும் பண்பு உள்ளன என்பதை தெளிவாக உணரவும் முடியும் இல்லையேல் வெறும் கணித சூத்திரங்கலாகவே மனனம் செய்து மறந்து போவார்கள்.

baskar said...

ஆய்வில் ஈடுபடுபவர்களும் அறிந்து கொள்ள பலவிசயங்கள் இதில் உள்ளன. அறியத்தந்தமைக்கு நன்றி. கற்பித்தல் முறைகள் தான் நமது கல்வி முறையின் மாற்றவேண்டிய முக்கிய அம்சமாக கருதுகிறேன். உதாரணதிற்கு வகைபடுத்துதல்(integration), தொகைபடுதுதலை(differentiation) கணக்கு பாடங்களில் படிக்கும் நமது மாணவர்கள் வெறும் சூத்திரங்களை மனபாடம் செய்து கேட்கப்படும் கணக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். அதன் பயன்பாடுகள் பற்றி எந்த அறிவும் இல்லாததால் அவர்கள் அதனை உணர்ந்து படிக்கமுடிவதில்லை . அதுவே ஒரு பெரிய இரும்பு துண்டை சூடேற்ற தேவையான ஆற்றலை கணக்கிட மொத்த பகுதிக்கும் கணக்கிடாமல் ஒரு சிறு பகுதிக்கு மட்டும் கண்டறிந்து அதை மொத்த பகுதிக்கும் நீடிப்பு செய்ய தொகைபடுதுதல் பயன்படுகிறது, அதே போல அந்த இரும்பு துண்டின் சிறு பகுதியின் ஆற்றலை அறிய வகைபடுத்துதல் பயன்படுகிறது என கற்பிக்கும் போது மாணவர்கள் மிக நெருக்கமாக உணர்ந்து படிப்பார்கள். அப்போது ஏன் வகைபடுதுதலில் எல்லைகள், வகைபடுத்தபடும் பொருள், அதில் மாற்றத்திற்கு உள்ளாகும் பண்பு உள்ளன என்பதை தெளிவாக உணரவும் முடியும் இல்லையேல் வெறும் கணித சூத்திரங்கலாகவே மனனம் செய்து மறந்து போவார்கள்.

Anna said...

தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தெகா.

Anna said...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி பாஸ்கர். எனது மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே கூறியுள்ளீர்கள்.

முகுந்த்; Amma said...

Anna,

I am so impressed about your field. I have heard about the problems created by endometrium during the attachement of fertilized egg on the uterus wall. What I learnt is " If the endometrium lining is not proper that leads to infertility". It must be a fun field I hope.

Have you already completed your PhD. Whats your thesis about?

Anna said...

Thanks Mukund amma. Yes, endometrium plays a huge part in establishing pregnacy.

I have completed it. It was on gene expression profile in human endometrium during the menstrual cycle.

Radhakrishnan said...

மிகவும் பயனுள்ள விசயங்களை தங்களது ஆராய்ச்சி பற்றி அறிந்து கொண்டேன். விரைவில் இந்த கேள்விகளுக்கு பதில் எழுதி விடுகிறேன். மிக்க நன்றி. வலைச்சரத்தில் தங்களது வலைப்பூ அடையாளம் கண்டு வந்தேன்.