Monday, July 11, 2011

44 நிறவுருக்களைக் கொண்ட மனிதன்

அநேகமான மனிதருக்கு தாயிடமிருந்து 23, தந்தையுடமிருந்து 23 ஆக 23 சோடி = 46 நிறவுருக்கள் உண்டு. இதில் அநேகமாக எதாவது நிறவுருக்கள் இல்லாமலோ அல்லது ஒரன்று கூடுதலாகவோ இருந்த்தால் அநேகமாக அந்தக் கரு கலைந்து விடும் அல்லது கரு நிலைத்து பின் குழந்தை பிறப்பின் அதன் உடலில் பல சிக்கல்கள் இருக்கும். உதாரணம்: நிறவிரு 21 மூன்று இருந்தால் அக்குழந்தைக்கு down syndrome நிச்சயம்.

இப்போது முத‌ன் முத‌லாக‌ சீனாவில் 44 நிற‌வுருக்க‌ளைக் கொண்ட‌ ஒரு ம‌னித‌னைக் க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். இவ‌ரின் 15 ஆவ‌து நிற‌வுரு 14 ஆவ‌து நிற‌வுருவோடு இணைந்து விட்ட‌து. அத‌னால் இவ‌ருக்கு நிற‌வுரு 15 இல்லை. ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ர‌ப‌ணுக்க‌ளுக்கும் சேத‌மேதும் ஏற்ப‌ட‌வில்லையாத‌லால் இவ‌ருக்கு குறிப்பிட்ட‌ள‌வு ம‌ருத்துவ‌ச் சிக்க‌ல்க‌ள் எதுவும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை. That's amazing!

இவ‌ருக்கு எப்படி 44 நிற‌வுருக்க‌ள் வ‌ந்த‌து?

இவ‌ரின் குடும்ப‌த்தில் ப‌ல‌ர் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ளுக்குள் திரும‌ண‌ம் செய்திருக்கின்றனர். எங்கேயோ ஒரிட‌த்தில் balanced translocation என்ற‌
நிற‌வுரு ம‌றுசீரமைப்பு நடந்துள்ளது. இதன் படி இரு நிறவுருக்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இதனால் மரபணுக்கள் எதுவும் இழக்கப்படாததால், இப்படி இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது மிகக் கடினம்.
அநேகமாக தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு இந்த மாதிரி நிற‌வுரு ம‌றுசீரமைப்பு நடந்திருந்தால், கருக்கட்டப்படும் இரண்டில் மூன்று கருக்கள் சிதைவடையும். முட்டையும் விந்தும் உற்பத்தி செய்யப்படும் போது நிறவுருக்களை பிரிவடையும் போதே பிரச்சனை வரும்.


சாதாரணமாக எமது உடலில் உள்ள செல்களில் ஒரு சோடி நிறவுருக்கள் இருக்கும். ஆனால் முட்டையிலும் விந்திலும் நிறவுருக்களின் ஒவ்வொரு நகல்களே இருக்கும். முட்டையில் 23 நிறவுருக்களும் விந்தில் 23 நிறவுருக்களும் இருந்து, பின் இராண்டும் இணையும் போது 23 சோடியுடைய உயிர் உருவாகும். இதனாலேயே மேற்சொன்ன நிறவுரு மறுசீரமைப்பு நடந்துள்ளவர்களுக்குப் பிரச்சனை வரும். அவர்களின் முட்டைகளுலும் விந்துகளிலும் சிலவற்றில் ஒரு சோடியற்ற நிறவுருவும் சிலவற்றில் மூன்று நகல்களைக் கொண்ட நிறவுரும் இருக்கும்.

கீழே காட்டப்பட்டவாறு:


முதல் வரிசை சாத்தியமான பெற்றோரைக் குறிக்கிறது. வலப்பக்கத்தில் உள்ளவருக்கு இந்த நிறவுரு மறுசீரமைப்பு உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நிறவுரு மறுசீரமைப்புடையோரது முட்டையோ, விந்தோ காட்டப்பட்டவாறு ஆறு வித்தியாசமான முறையில் இருக்கலாம். இரண்டாவது வரிசை, அவர்களில் இருக்கும் முட்டையிலோ, விந்திலோ உள்ள மறுசீரமைக்கப்பட்ட நிறவுருக்களின் அமைப்பைக் காட்டுகிறது. இந்த இணைப்பால் ஆறு விதமான நிறவுரு அமைப்புக்களுடன் கருக்கள் உருவாக சாத்தியமுள்ளது. அதில் இரு குறிப்பிட்ட அமைப்புக்களால் மாத்திரமே கருக்கட்டியதும் கலையாமல் இருக்க சாத்தியம்.

இந்த‌க் குறிப்பிட்ட‌ ம‌னித‌ரின் குடும்ப‌த்தில் எத்த‌னையோ க‌ருச்சிதைவுக‌ளும் த‌ன்னிச்சையான‌ க‌ருக்க‌லைப்புக‌ளும் ந‌ட‌ந்துள்ள‌ன‌. இவ‌ரின் தாய் த‌ந்தை இருவ‌ரும் first cousins.  இருவ‌ரும் ஒரே நிற‌வுரு ம‌றுசீர‌மைப்பைக் கொண்ட நிறவுருவின் ஒரு நகலைக் கொண்டுள்ள‌ன‌ர். அதனால் இவர்களுக்கு ஒரே ஒரு நிறவுரு 14, ஒரே ஒரு நிறவுரு 15, ஒரே ஒரு மறுசீரமைக்கப்பட்ட நிறவுரு 14 உள்ளது. அத‌னால் இவ‌ர்க‌ள் பிள்ளை பெற‌ நினைக்கையில் அவ‌ர்க‌ளுக்கு பிர‌ச்ச‌னைக‌ள் இர‌ட்டிப்பாகியிருக்கும்.




இவ‌ர்க‌ளால் 36 வேறு வேறு நிறவுரு அமைப்பைக்கொண்ட க‌ருக்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட‌லாம். அவ‌ற்றில் 8 குறிப்பிட்ட நிறவுரு அமைப்புகளைக் கொண்ட குழந்தைகளையே உயிருடன் பார்க்கலாம். அதில் இம்மனிதரை மாதிரி அதே நிறவுரு மறுசீரமைப்பு இரு நகல்களாக/ஒரு சோடியாக வர ஒரே ஒரு சந்தர்ப்பமே உண்டு.

இவருக்கு பிள்ளைகள் பெறுவதில் இவரது பெற்றொர் அளவிற்குப் பிரச்சனை இருக்காது. ஏனெனில் இவரிடம் சோடியற்ற நிறவுருக்கள் ஏதும் இல்லை. அதனால் சாதாரணமாக 46 நிறவுருக்களைக் கொண்ட பெண்ணுடன் குழந்தைகள் பெறலாம். ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் இந்த மறுசீறமைக்கப்பட்ட நிறவிரு ஒன்றே இருக்குமாதலால், அவர்களுக்கு இப்பிரச்சனை நிச்சயம் இருக்கும்.

என்னுடைய பரிணாமம் என்றால் என்ன என்ற பதிவில் எப்படி எமது நெருங்கிய உறவான மனிதக் குரங்குகளுக்கு 48 நிறவுருக்களும் எமக்கு 46 நிறவுருக்களும் இருக்கின்றன என விளக்கியிருந்தேன். எம‌து மூதாதைய‌ருக்கும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஓரு மில்லிய‌ன் ஆண்டுக‌ளுக்கு முன் 48 சோடி நிற‌வுருக்க‌ளே இருந்த‌ன‌ என்ப‌த‌ற்கு சான்றுக‌ள் உள்ள‌ன‌.


3 comments:

saarvaakan said...

அருமையான் பதிவு,
மிக ஆச்சர்யம்.இப்படித்தான் 48 நிறவுறுக்களை கொண்ட நமது முன்னோர்களிடம் இருந்து 46 நிறவுருக்களை கொண்ட நாம் தோன்றினோம் என்று கொள்ளலாமா?
44 நிறவுறுக்கள் கொண்டவர்கள் நம்மிடம் இருந்து வித்தியாசமன்வர்களாக் இருப்பார்களா?
நன்றி

Anna said...

உங்கள் கேள்விகளுக்கு நன்றி.

இப்படித்தான் 48 நிறவுறுக்களை கொண்ட நமது முன்னோர்களிடம் இருந்து 46 நிறவுருக்களை கொண்ட நாம் தோன்றினோம் என்று கொள்ளலாமா?
அப்படி நடந்திருப்பதற்கு சாத்தியங்கள் உண்டு.இது நமது முன்னோர்கள் மனிதக் குரங்கிலிருந்து பிரிந்த பின், கிட்டத்தட்ட ஒரு மில்லியம் ஆண்டுகளிக்கு முன் நடந்துள்ளது. நடந்த பிறகு எவ்வாறு 46 நிறவுருக்களைக் கொண்டவர்கள் மட்டுமே பிழைத்தார்கள் எனத் தெரியவில்லை. தனிய நிறவுருக்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு இனம் வாழ்வதற்கும் அழிவதற்கும் காரணமாகாது. எப்படியோ அந்த 46 சோடி நிறவுருக்களைக் கொண்டவர்களுக்கு எதோ குறிப்பிட்டளவு கூடிய survival advantages மற்றவர்களை விட இருந்திருக்க வேண்டும். பதிவில் சொன்னது மாதிரி முதலில் மிகவும் அரிதாகச் சிலரிடம் இருந்த இம்மாற்றம், பின் இதனால் வந்த ஏதோ ஒரு சில நன்மைகளால் மற்றவர்கள் அழிய, இவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். என்ன நன்மைகள் இதனால் வந்திருக்குமெனத் தெரியவில்லை. பல சாத்தியக் கூறுகள் உண்டு.

உதாரணத்திற்கு,

Great apes இல் காணப்படும் நிறவுரு 12ம் 13ம் இணைந்து எமது மூதாதையரில் நிறவுரு 2 ஆகியபோது சில நன்மையான மரபணுக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அவற்றால் இந்த புதிய நிறவுரு மறுசீரமைப்பைக் கொண்டவர்களுக்கு சில நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கான சான்றுகள் எதுவும் தற்சமயம் இல்லை.

சிலவேளையில் அதிர்ஸ்டமாகக் கூட இருக்கலாம். இந்த நிறவுரு மறுசீரமைப்பு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கூட்டத்தில் ஏற்பட்டு, அவர்களுக்கும் மற்றையவர்களுக்கும் தொடர்பற்றுப் போயிருந்த வேளையில், மற்றையவர்கள் இருந்த இடத்தில் ஏதாவது இயற்கை அழிவேற்பட்டு அவர்கள் முழுதாக அழிக்கப்பட்டிருக்கலாம்.அவ்வாறு பெரிய இயற்கை அழிவினால் பல இனங்கள் பல சமயம் அழிக்கப்பட்டதற்கு சான்றுகள் உண்டு.

44 நிறவுறுக்கள் கொண்டவர்கள் நம்மிடம் இருந்து வித்தியாசமன்வர்களாக் இருப்பார்களா?

குறிப்பிட்டளவு வித்தியாசம் எதுவும் தற்சமயம் கண்டறியப்படவில்லை. இரு நிறவுருக்கள் எந்த சேதமுமில்லாமல் இணைந்திருப்பது போலுள்ளதால், மரபணுக்களில் ஏதும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மற்றைய 46 சோடி நிறவுருக்களைக் கொண்ட மனிதரோடு இனப்பெருக்கம் செய்யக் கூடியதாக உள்ளது. although, உயிருள்ள பிள்ளைகள் பெறுவது நிறவுருக்குகள் கூடிக் குறைவதால் கடினமாகும். So, பிள்ளைகள் பெறுவதைத் தவிர, மற்றைய விடயங்களில் ஒத்தவர்களே.

saarvaakan said...

நன்றி