Monday, December 22, 2014

மரபியலுக்கு அப்பால்.............

போன பதிவில் தாய்மார் கற்பமாக இருக்கும் போதோ அல்லது தாயின் தாய் தாயுடன் கற்பமாக இருந்த போதோ அனுபவித்த பஞ்சம், போர் போன்றவற்றால் பிள்ளைகள் அல்லது பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை வருவதற்கான நிகழ்தகவைக் கூட்டுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன். எமது தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டிமார் அனுபவித்த‌ கெடுதலான வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுடன் அவர்களின் எதிர்காலச் சந்ததியினர் வாழாதபோதும் , மரபணு மாற்றங்கள் நடக்காத போதும் அவர்களை எப்படிப் பாதிக்கிறது?
 
ஒத்த இரட்டையரை இயற்கையால் உருவாக்கப்பட்ட நகலிகள் (clones) என்று சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு விந்தும் ஒரு முட்டையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட இணைவுப்பொருள் (zygote) பின் இரு கருக்களாகப் பிரிந்து விரித்தியடைவதால் உருவாக்கப்படுகிறார்கள். அதனால் ஒத்த இரட்டையர் இருவரினதும் மரபு ரேகை (genome) ஒரே மாதிரி இருக்கும். அதனாலேயே அவர்கள் பார்ப்பதற்கு அநேகமாக ஒரே மாதிரி இருப்பார்கள். ஆனால் உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் வளர வளர அவர்களில் பல வித்தியாசங்கள் தென்படும். ஒத்த இரட்டையருக்கு ஒரே மாதிரியான மரபு ரேகை இருப்பதுடன் ஒரே சூல் வித்தகத்துடனேயே கருப்பைக்குள் விருத்தி அடைகிறார்கள். அத்துடன் அவர்களின் சிறு பிராய வாழ்க்கை அநேகமாக ஒரே மாதிரியானதாகவே இருக்கும். அப்படி இருந்தும் எல்லா ஒத்த இரட்டையருக்கும் ஒரே நோய் வருவதில்லை. சில சந்தர்ப்பங்களில் ஒத்த இரட்டையரில் ஒருவருக்கு மட்டுமே புற்றுநோய், autism போன்ற நோய்கள் வருவது, இருவருகிடையில் உடல் எடையில் மிகுந்த வேறுபாடு என வேறுபாடுகளை உணர்த்தும் பல உதாரணங்கள் உள்ளன. ஒரே மரபு ரேகை இருக்கும் போது எப்படி இது சாத்தியமாகும்? ஒத்த இரட்டையருக்கிடையிலான வேறுபாடுகளுக்கான அடிப்படை என்ன?