Tuesday, February 21, 2012

பக்கசார்புடைய உறுதிப்படுத்தல் (Confirmation bias) - மூளையின் வரம்புகளில் ஒன்று


எமது மூளை எத்தனையோ தந்திரங்களைச் செய்யக்கூடியது. அதில் ஒன்றே இந்த பக்கசார்புடைய உறுதிப்படுத்தல். நாம் ஏற்கனவே நம்பும் ஒரு விடயத்திற்கு ஆதரவளிக்கும் விடயங்களை அல்லது தகவல்களை அது எந்தளவு சிறியதாக இருந்தாலும் மிகைப்படுத்தி, அவ்விடயத்திற்கு எதிராக இருக்கும் ஆதாரங்கள் அவை எந்தளவு பலமானவை ஆனாலும் ஒதுக்கி/மறுத்து/புறக்கணிக்கும் போது இந்த உறுதிப்படுத்தல் பாகுபாடு ஏற்படுகிறது. வலுவான ஆதாரங்களற்ற பாரம்பரிய, பாரபட்சமுடைய நம்பிக்கைகளை சரியானவையே என நிரூபிக்கும் முயற்சிகளில் இந்த ஒருதலைப் பட்சமான உறுதிப்படுத்தல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
  • அநேகமாக சோதிடத்தில் நம்பிக்கை உடையவர்கள் தம்மைப்பற்றிப் பிழையாக பல தகவல்கள் சொன்னாலும் அதையெல்லாம் மறந்து சரியாகச் சொன்னதாகக் கருதும் மிகச் சிலவற்றை மட்டுமே நினைவில் வைத்து, அந்தச் சோதிடர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று சொல்வது.
  • பலர் பெளர்ணமி/அமாவாசைகளில் மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைக்கு கொண்டுவரப்படும் நோயாளிகள் அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். எத்தனையோ ஆய்வுகள் இந்நம்பிக்கை பிழையானது என்று நிருபித்திருந்தாலும், அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இந்த நம்பிக்கையால்  பெளர்ணமி/அமாவாசை நாட்களில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அவர்கள் நினைவில் வைத்திருப்பர். சாதாரண நாட்களில் வரும் ஆட்களின் எண்ணிக்கையைப் பர்றிக் கவனம் செலுத்த மாட்டார். இவ்வாறு திருப்பத் திரும்பச் செய்வதால் அவர்களின் நம்பிக்கை மேலும் கூடுகிறதே ஒழிய, அந்த நம்பிக்கையில் எந்தவித உண்மையும் இல்லை.
  • பரிணாமத்தை எப்பாடு பட்டாவது நிராகரிக்க முயற்சி செய்யும் போது பல பிழையான தகவல்களை கொஞ்சமும் யோசனைய‌ற்று தமது முயற்சிக்கு ஆதாரமாகக் கொடுப்பதும் இதற்குள் அடங்கும்.
  • Homeopathy, acupuncture, reiki therapy என அநேகமாக எந்தவித ஆதாரங்களுமற்ற alternative "medicines" பயன்படுத்துபவர்கள், இவையெல்லாம் உண்மையில் வேலை செய்கின்றன என்று சொல்வதையும் இந்த பக்கசார்புடைய உறுதிப்படுத்தலில் சேர்க்கலாம். 
ஒரு நம்பிக்கையை சிறு வயதிலிருந்தே எந்தவொரு சந்தேகமுமற்று வைத்திருந்துவிட்டு பின் வயதானதும் அந்த நம்பிக்கைக்கு எதிராகப் பலர் கருத்துச் சொல்லும் போது எப்படியாவது தனது நம்பிக்கை சரியானதே என நிருபிக்க முற்படுவது ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியது. இக்காரணத்தால் எங்காவது யாராவது அதற்கு ஆதரவாக ஒரு காரணம் எழுதியதும், அதில் என்னவாவது உண்மை உள்ளதா? தருக்க ரீதியாகச் சரியானதா? என்று எதுவுமே யோசிக்காமல், அந்தக் காரணத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி தனது நம்பிக்கையை உறுதி செய்வதும் இதற்குள் அடங்கும். இதற்கு ஒரு இன்னொரு நல்ல உதாரணமாக பலதார மணத்தை (அதுவும் ஆண்கள் பல பெண்களை மணப் புரிவதை மட்டுமே) நியாயப்படுத்தச் சொல்லும் காரணங்களைக் கூற‌லாம்.
  • திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர்.
  •  ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.
  • பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக் காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.
இக்கார‌ண‌ங்க‌ளெல்லாமே உண்மைக்கு முற்றிலும் மாறான‌வை என‌ ஒரு சில‌ நொடிக‌ள் இணைய‌த்தில் தேடினால் தெரிந்துவிடும். இணையத்தில் கூட‌ வேண்டாம். உல‌கின் ச‌ன‌த்தொகை கூடிய‌ இந்தியா, சீனா நாடுக‌ளில் ந‌ட‌க்கும் பெண் சிசுக் கொலைக‌ளால் அங்கு பெண்க‌ளின் விகிதாசார‌ம் ஆண்க‌ளை விட‌ மிக‌க் குறைவு என்ப‌து அநேக‌மாக‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். It's not rocket science. It's just general knowledge and common sense. அத‌ற்காக‌வே  சொல்லும் கார‌ண‌ங்க‌ளை ஒருமுறை ஏன் ச‌ரிபார்க்க‌வில்லை என‌ப் ப‌ல‌ த‌ட‌வை நான் குழ‌ம்பிய‌துண்டு.   ஆனாலும் அந்ந‌ம்பிக்கை கொண்ட‌ சில‌ர் இதே கார‌ண‌த்தைச் சொல்லுவ‌தும் அத‌ற்கு அந்ந‌ம்பிக்கை கொண்ட‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆமாம் போட்டு ஆமோதிப்ப‌தும் ந‌ட‌க்க‌வே செய்கிற‌து.

இந்த‌ பக்கசார்புடைய உறுதிப்படுத்தல் எல்லோருக்கும் ந‌ட‌க்க‌க் கூடிய‌தே. ஒரு ந‌ம்பிக்கையை நீங்க‌ள் நீண்ட‌ கால‌மாக‌ வைத்திருந்தாலோ அல்ல‌து ஒரு விட‌ய‌ம் உங்க‌ளுக்குப் பிடிக்க‌வே இல்லை என்றாலோ நிச்ச‌ய‌ம் மூளை முத‌லில் நீங்க‌ள் வைத்திருக்கும் பார‌ப‌ட்ச‌மான‌ க‌ருத்துக்கே ஆதர‌வான‌ நியாய‌ங்க‌ளைத் தேடும். இதைத் த‌விப்ப‌தற்கு ஒரு வ‌ழி being very self critical. ஒன்றிற்கான உண்மை தெரிய வேண்டும் என்பதே எமது குறிக்கோளாயின் எம‌து முடிவுக‌ளை/ந‌ம்பிக்கைக‌ளை நாமே கேள்வி கேட்டு அத‌ற்குரிய‌ ஆத‌ர‌வான‌/எதிரான‌ க‌ருத்துக‌ளை ச‌ம‌மாக‌ ஒரே இட‌த்தில் வைத்து தற்சார்பற்று ம‌திப்பிட்டால் ம‌ட்டுமே முடியும்.
அறிவிய‌ல் ஆய்வுக‌ளில் கூட‌ அவ்வாறே செய்ய‌ அறிவிய‌லாள‌ர்க‌ளுக்குப் ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌டுகிற‌து.  எனது பயிற்சியின் போது சில சமயம் திரும்பத் திரும்ப செய்த‌ பரிசோதனைகளின் முடிவுகள் நான் எதிர்பார்த்த மாதிரி வராவிடில், மிகுந்த frustration ஆக இருக்கும். எனது மேற்பார்வையாளாரிடம், எனக்குத் தேவையான முடிவுகள் வரவே மாட்டுதாம் என ஒரு முறை சொல்ல, அவரோ "எமக்கு என்ன முடிவுகள் வர வேண்டும் என முதலே தெரிந்தால் ஏன் பரிசோதனை செய்ய வேண்டும்? Don't get emotionally attached to the results. Take a step back and look at them objectively" என்றார். பல நாட்கள் செலவிட்டு, இராப் பகலாகப் பரிசோதனை செய்யின், முடிவுகளோடு sentimetally attach ஆவது சில சமயம் நடக்கவே செய்யும். அதனாலேயே நாம் அம்முடிவுகளின் உட்பொருளை விளக்க முற்படும் போது அவற்றை தற்சார்பற்ற குறிக்கோளுடன் அணுக வேண்டும்.

என‌து ஆராய்ச்சி முடிவுக‌ளை நான் பிழையாக்க‌ வேண்டுமெனில் என்ன‌ செய்ய‌ வேண்டும்? அவ‌ற்றிற்கு மாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் எல்லாவ‌ற்றையும் முறையாக‌ சோத‌னை செய்தேனா? இதற்கு இருக்கும் பிறர் முதலில் செய்த ஆய்வுகள் உட்பட எல்லாத் த‌க‌வ‌ல்க‌ளையும் நான் மிக‌ நுட்ப‌மாக‌ வாசித்து விள‌ங்கினேனா? என‌ப் ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டு அத‌ற்குரிய‌ ஆய்வுக‌ள் செய்து பின் அந்த‌ ஆய்வு, அத‌ன் முக்கியத்துவ‌ம், இல‌க்கு, அதைக் க‌ண்ட‌றிய‌ நான் செய்த‌ ப‌ரிசோத‌னைக‌ள், அத‌ன் முடிவுக‌ள், அந்த‌ முடிவுக‌ள் சொல்லும் க‌ருத்து என‌ எல்லாவ‌ற்றையும் சீராக‌ எழுதி அதை ஒரு அறிவிய‌ல் இத‌ழுக்கு அனுப்பும் போது, அவ்வித‌ழ் ஆசிரிய‌ர், நான் செய்த‌ ஆய்வுத் துறையில் வ‌ல்ல‌மை கொண்ட மூன்று அல்ல‌து நான்கு அறிவிய‌லாள‌ர்க‌ளிட‌ம் என‌து ஆய்வுக் க‌ட்டுரையை மீள்பார்வை செய்ய‌ அனுப்பி அவ‌ர்க‌ளின் க‌ருத்துக‌ளையெல்லாம் உள்வாங்கி அவ‌ர்க‌ள் எல்லோரும் இந்த‌ ஆய்வு த‌குதியான‌தே என்று சொன்ன‌ பின்ன‌ரே பிர‌சுரிக்க‌ப்ப‌டும். அத‌ன் பின் கூட‌ வாசிப்ப‌வ‌ர்க‌ள் அதை கேள்விக்குட்ப‌டுத்த‌லாம். இவ்வாறே அறிவியலில் இந்த‌ பக்கசார்புடைய உறுதிப்படுத்தல் த‌விர்க்க‌ப்ப‌டுகிற‌து. இத‌னாலேயே அறிவிய‌ல் த‌ன்னைத் தானே ச‌ரி பார்த்துக் கொள்ளும் ஒரு ஒழுங்குமுறை என்று சொல்ல‌ப்ப‌டும். ஆய்வுக‌ளின் மூல‌ம் நாம் எடுக்கும் முடிவுக‌ள் நம் ந‌ம்பிக்கைகுரிய‌வை என்ப‌தை விட‌ அவ‌ற்றிற்கான ஆதார‌ங்க‌ளால் அம்முடிவுக‌ளை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்றே பொருள்ப‌டும்.
என் சொந்த‌ வாழ்க்கையில் கூட பல விடயங்களில் நான் வைத்திருக்கும் கருத்துகள், குறிப்பாக என்னைப் பாதிக்கும் விடயங்களில் (issues that affect me personally or I have personal interests in; e.g. பெண்ணியம், கடவுள், racism, மதங்கள், etc) அதற்கு நான் கொடுக்கும் ஆதாரங்கள், விளக்கங்கள் உண்மையில் சரியானவையா என முடிவு செய்ய இயலுமானவரை இந்த self criticizing செய்வேன்.
எமது மூளையின் வரையறைகளைத் தெரிந்து வைத்திருப்பின் இம்மாதிரி பக்கசார்புடைய உறுதிப்படுத்தலைத் தவிர்க்கலாம்.

I know that most men, including those at ease with problems of the greatest complexity, can seldom accept the simplest and most obvious truth if it be such as would oblige them to admit the falsity of conclusions which they have proudly taught to others, and which they have woven, thread by thread, into the fabrics of their life. - Leo Tolstoy

Image Courtesy: Google‌

1 comments:

சார்வாகன் said...

அருமையான் பதிவு சகோ.

மூன்று முறை படித்துதான் கருத்துகளை உள் வாங்க முடிந்தது.
பக்க்ச்சார்பு உறுதிப் படுத்தலை பல முறை இணைய விவாதங்களிலும் உணர்ந்தது உண்டு.
ஒரு எ.கா
"பரிணாமக் கொள்கை என்பது இறை மறுப்பாளர்களின் மதம்"

மதவாதிகளின் கருத்துகள் அப்ப்டி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
நம்பிக்கை மட்டும் மட்டும் ஒரு கருத்தை உறுதிப் படுத்த முடியாது.

****************
சிறுவயது முதல் கொண்டிருந்த மத நம்பிக்கைகள் வரலாற்றுரீதியாக் ஆதாரம் தேடும் போது அப்புனைவு கதைகள் உண்மையாக் இருக்கவே முடியாது என்பது வெட்ட வெளிச்சமான‌து.மதங்கள் நீடிப்பதன் காரணம் அவை ஒரு கலாச்சார அடையாள்மாகிப் போனதுதான்.

பக்கசார்புடைய உறுதிப்படுத்தல்[ப.சா.உ] என்பது எப்படி ஒருவருக்கு வருகிறது?.பிறப்பிலா?வளப்பிலா?.ப.சா.உ குறித்து இன்னும் கொஞ்சம் தகவல்கள் அளிக்க இயலுமா? சுய சிந்தனை மனிதனுக்கு உண்டா என்பதும் இந்த பக்கச்சார்பு உறுதிப் படுத்தலில் அதன் பங்கு என்பது பற்றி கூட ஒரு பதிவு எழுத ஒரு வேண்டுகோள்.

அறிவியல் பக்கச்சார்பு உறுதிப்படுத்தல் விளைவுகளை தவிர்க சில செயல்பாட்டு முறைகளை கையாளுவது அறிந்தும், மத்வாதிகள் எதிர்க் கொள்கையாளர்களை பக்கச்சார்புடைய உறுதிப்படுத்தலினால் இப்படி செய்கிறார்கள் என்று கூறும் நகைச்சுவை விளைவும் உண்டு.

நன்றி