Friday, December 16, 2011

அப்பாவின் திரட்டுகளிலிருந்து.... சிந்திக்கும் வேளையில்: பெண்கள் - முரண்படும் பெற்றோர்கள்

எங்கட அப்பா சிறந்த வாசிப்பாளர். வீட்டிலிருக்கும் போது அநேகமாக ஏதாவது வாசித்துக் கொண்டே இருப்பார். வாசித்ததெதுவும் எவ்வளவு பழசென்றாலும் எறியவே மாட்டார். அவருக்குப் பிடித்த பல கட்டுரைகளை பத்திரிகைகளிலிருந்தோ புத்தகங்களிலிருந்தோ நகல் எடுத்தும் சேகரித்து வைத்திருந்தார். அவ்வாறான கட்டுரைகளில் அம்மா இன்று கண்டெடுத்து எனக்குக் காட்டிய ஒரு கட்டுரை கீழ்வருவது. இது புரட்டாதி 28, 1993 இல் சென்னையில் வெளியான தினமணிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இதில் சொல்லியிருக்கும் பல‌ கருத்துகள் இக்காலகட்டத்திற்கும் மிகவும் பொருந்தும் என்பதாலும் அப்பாவின் திரட்டுகளில் சிலதையாவது இங்கு சேமிக்கலாம் என்ற நோக்கிலும் இங்கு பகிர்கின்றேன்.

இக்கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் கதைக்கும் ஓரளவு மனமுதிர்ச்சி அடைந்த‌ பெற்றோர்கள் இன்னும் மிகக் குறைந்தளவே எம் சமூகத்தில் உள்ளார்கள். அவ்விதத்தில் இக்காலகட்டத்திலும் ஒரு சிறுபான்மையினரையே இக்கட்டுரை address பண்ணுகிறது. Nevertheless, it's an optimistic view.


சிந்திக்கும் வேளையில்: பெண்கள்
முரண்படும் பெற்றோர்கள்

டாக்டர் அ. சாந்தா

தினமணி புரட்டாதி 28, 1993

எனது ப்ராஜக்டை பிர்லா நிறுவனம் ஒன்றில் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதை நிறைவேற்றுவதற்காக என்னை இரண்டாண்டுகள் வெளிநாடு அனுப்பிப் பயிற்சி தரவும் தயாராக இருக்கிறார்கல். இந்த சந்தோசச் செய்தியை முதன் முதலில் அப்பாவிடம் தான் சொல்ல வேண்டும் என்று ஊருக்குப் போயிருந்தேன். ஆயின் அப்பாவின் பதில் என்னை அதிர்ச்சியடையச் செய்தது. "பாரதி, எனக்கும் வயதாகிக் கொண்டு வருகிறது. நீ படிப்பை முடித்த கையோடு உன் கல்யாணத்தை முடித்து விடலாம் என நினைக்கிறேன். நான்கைந்து இடங்களில் சொல்லியும் வைத்திருக்கிறேன். அதனால் கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க இஸ்டப்படி எதுவும் செய்யம்மா". நான் இதுவரை பார்த்த அப்பா வேறு. இத்தனை ஆண்டுகள் என்னை சுதந்திரப் பறவையாக வளர்த்த அப்பா, என் திறமைகளைத் தட்டிக் கொடுத்த அப்பா, என் தகுதிகளை இனம் கண்ட அப்பா, என் உணர்ச்சிகளை மதித்த அப்பா, என் விருப்பங்களை நிறைவேற்றிய அப்பா - இப்போது என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

என் இளம் தோழி பாரதி எழுதிய கடிதத்தின் ஒரு பகுதிதான் இது. இந்த பாரதியைப் போல 20, 22 வயதுடைய எத்தனையோ பாரதிகள் நம்மிடையே இருக்கிறார்கள்.

பெரும்பாலான வீடுகளில் இப்போது ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பதில்லை. இராண்டு குழந்தைகளையும் ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றியே வளர்க்கிறார்கள். பையனைப் போலவே பெண்ணையும் படிக்க வைக்கிறார்கள். எம்.ஏ., எம்.எஸ்.ஸி., எம்.பி.ஏ., எம்.டெக்., டாக்டர், எஞ்ஜினியர் என எதுவும் பாக்கியில்லை. பெண் என்பதற்காக ஒதுக்குவதில்லை. ஓரம் கட்டுவதில்லை. அடுத்த வீட்டுக்குப் போகப் போகிறவள் என அடிக்கடி சொல்வதில்லை. அவளது அறிவை மெச்சுகிறார்கள். திறமையை மதிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் நிலைமையே வேறு. 'பிறந்து மொழி பயின்ற நாள் முதலே' பெண் ஆணுக்கு அடங்க வேண்டியவள் என்றே போதிக்கப்ப்ட்டது. சொல் பொறுப்பதற்கும் சூடு பொறுப்பதற்கும் அவளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. தற்காத்து, தற்கொண்டார் பேணி, தகை சான்ற சொற்காத்து சோர்விலாது செயல்பட, சொல்லிக் கொடுக்கப்பட்டது. 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்' என்று கூறி பெண்ணின் திறமை திரைக்குப் பின்னால் ஒளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாற்றங்கள் தென்படுகின்றன. பெண்ணின் தனித்துவம் மதிக்கப்படுகிறது. பெண்ணின் அறிவு பெற்றொருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயமாக மாறி வருகிறது. ஆண்களோடு பழகவும் அவர்களோடு தோழமை கொள்ளவும் பெண்களை அனுமதிக்கிறார்கள். 'பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கக்கூடது' என்ற பழைய மதிப்பு மாறிவிட்டது. இது வரவேற்கத்தக்கது.

பெற்றோரின் இந்தத் தாராளப் போக்கு, ஆரோக்கிய மனப்பான்மை, பெண் தனது படிப்பை முடித்தவுடன் அடியோடு மாறிவிடுவது ஜீரணிக்க முடியாத விடயம். திடீரென அவள் கட்டுப்படுத்தப்படுகிறாள். ஆண்களோடு 'அளவோடு பழகுமாறு' ஆலோசனை வழங்கப்படுகிறது. என்ன இருந்தாலும் பெண் சற்று அடங்கித் தான் இருக்க வேண்டும் என்ற போதனை ஆரம்பமாகிறது.

சுதந்திரச் சூழலில் வளர்ந்த பெண்கள் இந்தத் திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்து போகிறார்கள். தமது தொழில் பற்றி அவர்கள் கண்ட கனவுகள் நொருங்கிப் போகின்றன. தன் கண் முன்னால் படிப்பில் தன்னை விட ஒரு படி குறைந்த ஆண்கள் விரும்பிய வேலையைத் தேடி விரும்பிய இடத்திற்குச் செல்வதைப் பார்க்கிறார்காள். "ஒழுங்கான வேலையில் நிரந்தரமாக அமர்ந்த பின்தான் திருமணம்" என அவர்கள் தீர்மானமாகச் சொல்வதையும் கேட்கிறார்கள். அதே சமயம் ஒரு பெண், " வேலைக்குப் போய் நிரந்தரம் ஆன பின் திருமணம் செய்து கொள்கிறேன். இரண்டாண்டுகள் கழியட்டும்" என்று சொன்னால் - பெற்றோரின் சந்தேகக் கணைகள் அவர்களைச் சரமாரியாகத் தாக்குகின்றன. நீ யாரையாவது விரும்புகிறாயா? யாரது? போன்ற வினாக்கள் அவர்களை வேதனையடையச் செய்கின்றன.

பெண் 20, 22 வயதை அடைந்தவுடன் அவளது திருமண‌க் கவலை பெற்றோரைப் பிடித்துக் கொள்கிறது. அப்போது திருமணம் என்பதை பெண்ணின் நோக்கிலிருந்து பார்ப்பதை விட சமுதாய நோக்கிலிருந்தே பார்க்கிறார்கள். திருமணம் பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். அவளது உணர்ச்சி சம்பந்தப்பட்ட விடயம் என்பதெல்லாம் ஒருகணம் மறந்து போகிறது. நாலு பேர் மெச்சும்படியாகப் பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே இவர்களின் ஒரே குறியாகி விடுகிறது.

இத்தனை நாட்கள் தமது மனக்குரலுக்கு மட்டுமே செவி சாய்த்து வந்த பெற்றோர் இப்போது சமுதாயத்தின் குரலையும் கேட்கத் தொடங்குகிறார்கள். சமுதாயத்தின் சட்ட வரம்புகளை தன் மகள் தாண்டிவிடுவாளோ என்ற அச்சம் இவர்களை ஆட்டத் தொடங்குகிறது. சாதி மாறித் துணை தேடுவாளோ, தலைகுனிவைத் தருவாளோ, திருமணமே செய்து கொள்ள மாட்டாளோ, செய்து கொண்டாலும், கணவனோடு ஒத்துப் போக மாட்டாளோ, நாம் தட்டி வளர்க்கத் தவறி விட்டோமோ, அதிக இடம் கொடுத்தது ஆபத்தில் முடிந்து விடுமோ என்று பலவாறு குழம்புகிறார்கள். அசம், கவலை, திகைப்பு, தடுமாற்றம், சுயநிந்தனை, சுய பச்சாதாபம் ஆகியவற்றால் தம்மைத்தாமே வதைத்துக் கொள்கிறார்கள். ஒந்த மனக் கலக்கங்களெல்லாம் பிரசர் என்றும், ஸுகர் என்றும், நெஞ்சிவலி என்றும், மூட்டு வலி என்றும் உடல் உபாதைகளாக உருவெடுத்து வாட்டுகின்றன.

பெண்ணின் தெளிவான சிந்தனை இவர்களைத் திகைக்க வைக்கிறது. அவர்களது அறிவார்ந்த பேச்சு இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவளுக்கு ஏற்ற துணையை எங்கே தேடுவது என்ற ஆதங்கம் எழுகிறது. இவளது அறிவையும் திறமையையும் ஆண்மகன் மதிப்பானா என்ற கலக்கம் தோன்றுகிறது. "உன் பெண்ணை ரொம்பத்தான் சுதந்திரமாக வளர்த்து விட்டாய்" என்று அக்கம் பக்கத்ஹ்டில் உள்ளோர் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய்த் தெரிய ஆரம்பிக்கிறது. இப்படித் தன் பெண்பால் எழுந்த அக்கறையே அடக்குமுறையாக மெல்ல மெல்ல மாறுதல் அடைகிறது.

பெற்றோர்களே! சமுதாயம் என்பது ஒரு சட்டை. அதை வேண்டுமானால் போட்டுக் கொள்ளவும், வியர்த்தால் கழற்றிவிடவும் தெரிய வேண்டும். கிழிந்த சட்டையை மாற்றி விடவும் மனம் வர வேண்டும். மனிதருக்காக சமுதாயமா? சமுதாயத்திற்காக மனிதரா? சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஆரோக்கியமானதோர் உளவியல் சூழலை உங்கள் மகளுக்கு உருவாக்கித் தந்துள்ளீர்கள். அவளை சிந்திக்கத் தெரிந்த ஒரு மனிசியாக உருவாக்க்கி இருக்கிறீர்கள். இதுதான் உங்கள் பெண்னுக்கு நீங்கள் தேடி வைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து. கிடைத்தற்கரிய சீதனம். இதர்கு இளைய தலைமுறை உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. புதிய சமுதாயத்தின் பிரதிநிதிகளை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். இதை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.

உங்காள் பெண்ணின் எதிர்காலம் பற்றிய உங்கள் கவலை தேவையற்றது. அச்சம் அனாவசியமானது. இந்தத் தலைமுறை இளம் பெண்களும் மட்டுமன்றி இளைஞர்களும் வித்தியாசமானவர்கள் தாம். அவர்கள் பெண்களை மதிக்கிறார்கள். அவர்களில் பலரிடம் ஆணாதிக்க மனப்பான்மை இல்லை. பெண்ணைக் காதலியாகவோ, மனைவியாகவோ மட்டுமன்றி தோழியாகவும் அவர்களால் பார்க்க முடிகிறது. எனவே உங்கள் பெண்ணைப் புரிந்து கொள்ளக் கூடிய ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். இளைய தலைமுறைபால் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் கவலையை மறந்து எப்போதும் போலவே உங்கள் பெண்ணைப் பாராட்டுங்கள். அவளது அறிவில் செறிவை மெச்சுங்கள். அவளது அனுபவ முதிர்ச்சியில் பெருமிதம் கொள்ளுங்கள். புதியதோர் உலகம் செய்யப் புறப்பட்டிருக்கிறாள் இவள். இவளை உருவாக்கிய பெருமை உங்களுடையதே. எனவே மறந்தும் மின் வைத்த காலை பின் வைத்து விடாதீர்கள்.

0 comments: