Homepathy மருந்துகள்
Homeopathy மருந்துகள் எந்தளவிற்கு இலங்கை, இந்தியாவில் பிரபலமெனத் தெரியவில்லை. ஆனாலும் வாசித்துப் பார்த்ததிலும், கீழிருக்கும் காணொளியைப் பார்த்ததிலும் மக்கள் பரவலாகப் பயன்படுதுகிறார்கள் என்றே படுகிறது.மேலை நாடுகளிலும் எல்லா மருந்து விற்கும் இடங்களிலும் உண்டு. என்ன பிரச்சனையென்றால், இவற்றை எடுப்பதால் எந்தப் பலனும் இல்லை. இம்மருந்துகள் ஒரு நோய்க்கு மருந்தாகச் கூடியதென நிரூபிக்கப்பட்ட மருந்துகளில் உள்ள செயற்படும் ஆக்கக்கூறினை நீரில் பலமடங்குகள் ஜதாக்கி அதையே பின் மருந்தாக்கி விற்பனை செய்கின்றனர். அதனால் இம்மருந்துகளில் உண்மையாக ஒரு நோய்க்கு எதிராகச் செயற்படும் ஆக்கக்கூறு இல்லை. இதுவரைக்கும் எந்த ஆய்வுகளும் இவை எந்த நோய்க்கும் எந்தவிதத்திலும் பயனைத் தருமென கூறவில்லை. ஒரு நோய்க்குறிய உண்மையான மருந்தை எடுக்காமல் இவற்றை உபயோகிப்பதால் நோயும் குணமடையாமல் பின் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கலாம். மக்கள் இந்தப் போலி மருந்துகளுக்கு எவ்வளவோ காசும் செலவழித்து ஒரு பலனுமில்லாதது மட்டுமல்ல, அந்நோய்க்கு உரிய வைத்தியம் பார்க்காததால் நோயாலும் மிகப் பாதிக்கப்படுவர்.
இம்மருந்துகளில் உண்மையாக ஒரு நோய்க்கு எதிராகச் செயற்படும் ஆக்கக்கூறு இல்லை. Homepathy மருந்துப் பெட்டிகளில் எடுக்க வேண்டிய அளவுகளும் அதை விடக் கூட உட்கொண்டால் அது நஞ்சாகுமெனவும் கூறியிருப்பினும் (எந்த வித ஆக்கக்கூறுகளும் இல்லாமல் நீர் எப்படி நஞ்சாகும்?), அது எந்தளவிற்குப்பிழை என்று நிரூபிக்க James Randi from James Randi Educational Foundation (இப்போது இவ்வாறு பலர், பல நாடுகளில் மக்களுக்குச் செய்து காட்டுகின்றனர்) பல இடங்களில் homeopathy மருந்துகளை நிறைய உட்கொண்டு (overdose) அதனால் எந்த விளைவுகளும் வராதெனக் காட்டியுள்ளார்.
மக்கள் இந்தப் போலி மருந்துகளுக்கு எவ்வளவோ காசும் செலவழித்து ஒரு பலனுமில்லாதது மட்டுமல்ல, அந்நோய்க்கு உரிய வைத்தியம் பார்க்காததால் நோயாலும் மிகப் பாதிக்கப்படுவர்.
James Randi இம்மாதம் homeopathy மருந்துகளை உற்பத்தி செய்பவர்களுக்கும், நோயாளிகளுக்குக் கொடுக்கும் போலி மருத்துவர்களுக்கும், இம்மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கும் ஒரு சவால் விட்டுள்ளார். இம்மருந்துகள் உண்மையில் இவர்கள் சொல்வது போல் நோய்களைக் குணப்படுத்துமென நிரூபித்து, இதுவரைக்கும் செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் பொய்யென நிரூபிக்க யாராலும் முடிந்தால், ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் James Randi Educational Foundation ஆல் நிரூபித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதே சவால். யாராவது முன்வருவார்களா?
இரும்புச் சத்து பற்றாக்குறை
இரும்புச் சத்து பற்றாக்குறை நீங்கள் பெண்களாய் இருப்பதால் மட்டும் வருவதில்லை - From A/Prof. Kate Clancy நீங்கள் ஒரு இனப்பெருக்க வயதான பெண்ணாயிருந்து உங்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறை என இரத்தச் சோதனை மூலம் கண்டறியப்பட்டால், அநேகமான வைத்தியர்கள் சொல்வது: பெண்களுக்கு மாத விடாய் ஆரம்பித்ததும், மாதவிடாய்க் காலங்களில் இரத்தம் இழப்பதால் தான் உங்களுக்கு இரும்புச் சத்து பற்றாக்குறை வருகிறது எனக் கூறி வேறெதுவும் பரிசோதிக்காமல் இரும்பு மாத்திரைகளைத் தந்து அனுப்பிவிடுவர். நானே இக்காரணத்தை பல முறை கேட்டுள்ளேன்.
அப்பக்கத்தில் சொன்னவற்றில் முக்கியமானவை.
1. பூப்பெய்தும் போது ஆண்களுக்கு இரும்பைச் சேமித்து வைக்கும் தன்மை கூடுகிறது. ஆனால் பெண்களில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை.
2. ஆண்களுக்கு இரும்பு பற்றாக்குறையாவதற்கு முக்கிய காரணம் மேல் வயிற்றுக் குடற் பகுதியில் ஏற்படும் குருதிப் போக்கு. அதனால் ஆண்களுக்கு இரும்புப் பற்றாக்குறையெனக் கண்டறிந்தால் முதலில் செய்வது endoscopy.ஆனால் பெண்களுக்கு இரும்புப் பற்றாக்குறையெனக் கண்டறிந்தால் ஒன்றும் செய்யாமல் இரும்பு மாத்திரைகளைக் கொடுத்தனுப்புவர். ஆனால் பெண்களுக்கும் endoscopy செய்து பார்க்கும் போது கண்டறிந்தது இரும்புப் பற்றாக்குறை இருக்கும் 86% பெண்களுக்கும் ஆண்களை மாதிரியே மேல் வயிற்றுக் குடற் பகுதியில் குருதிப் போக்குக் காணப்பட்டதே.
அதனால் நீங்கள் பெண்ணாயிருந்து, உங்களுக்கு மாதவிடாய் நேரங்களில் தீவிரமான குருதியிழப்பில்லாமல் (menorrhagic; >120mL),உங்கள் சாப்பாட்டிலும் போதுமானளவு இரும்புச் சத்து இருந்தும் இரும்புப் பற்றாக்குறை இருப்பதாக அறிந்தீர்களானால், உங்கள் வைத்தியரிடம் endoscopy செய்யுமாறு கேளுங்கள்.
விட்டமின்/கனிம மாத்திரைகள்
இப்ப எங்கு பார்த்தாலும் அநேகமானவர்கள், நோயும் இல்லாதவர்கள் கூட பல விட்டமின் மாத்திரைகளை தினமும் உட்கொள்கின்றனர். நிறைய உடலுக்குக் கூடாத fast foods, fried foods என்று உட்கொள்ளுவதாலோ என்னவோ நல்ல சத்துள்ள உணவுகளை, மரக்கறிகள், பழங்களை உட்கொள்ளுவதற்குப் பதிலாக இந்த விட்டமின்களை எடுத்துக்கொண்டால் சரியாகுமெனத் தம்மைத்தாமே திருப்திப் படுத்திக்கொள்ளச் செய்கிறார்களா தெரியவில்லை. மருந்து விற்பனை நிலையங்களில் prescription தேவையில்லாத மருந்துகள்/போலிமருந்துகள்/விட்டமின்கள் வாங்கும் போது உண்மையில் அவை வரும் பெட்டியின் பின்புறம் எழுதியுள்ளது மாதிரியான விளைவுகளை அவற்றால் தரமுடியுமென்பதற்கு எதாவது ஆதாரங்கள் உண்டா என பலர் யோசிப்பதே இல்லை. பல விட்டமின்கள் இந்த மாத்திரை வடிவில் உட்கொள்ளும் போது உடம்பால் இலகுவாக உறிஞ்சப்பட முடிவதில்லை. விட்டமின்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானவை. ஆனால் அவற்றை உடலுக்குக் கொடுப்பதற்குறிய மிகவும் பயனளிக்கக் கூடிய வழி பல வகை மரக்கறி, பழங்களை உண்பதே ஒழிய விட்டமின்களை எடுப்பதல்ல. ஒரு சில விட்டமின்கள், கனிமங்களே மாத்திரை வடிவில் எடுக்கும் போதும் பயன் தரக் கூடியன.
இந்தப் பக்கத்தில் பல விட்டமின்களையும், அதில் எவற்றிற்கு நல்ல ஆதாரங்கள் உண்டெனவும் interactive ஆன மிகவும் எளிய முறையில் கண்டறியக் கூடியவாறு கொடுத்துள்ளனர்.
அடுத்தமுறை விட்டமின்கள் வாங்கச் செல்லுமுன் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஒரு கொஞ்சமாவது அதனால் பலன் கிடைக்குமா என யோசித்து வாங்குங்கள்.
0 comments:
Post a Comment